மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்திடவும், 'கிரீமிலேயர்' வருமான வரம்பை ரத்து செய்திடவும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப் பிரதிநிதி என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 25) வெளியிட்ட அறிக்கை:
"நீண்ட நெடுங்காலமாக இடையறாது போராடி, பிரதமராக வி.பி. சிங் பொறுப்பேற்றதற்குப் பிறகு பெறப்பட்ட, மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை எப்படியும் ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மத்திய பாஜக அரசு செயல்படுவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கெனவே 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தைக் கூட நிரப்பாமல் வஞ்சித்து, மருத்துவக் கல்வியில் அறவே நிராகரித்து, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்டத்தின்கீழான அடிப்படை உரிமையை விதவிதமாக பாழ்படுத்திவரும் மத்திய பாஜக அரசு, இப்போது 'கிரீமிலேயர்' வருமான வரம்பிற்கு நிகர சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக வெளிவரும் செய்திகள், இட ஒதுக்கீட்டின் இதயத்தில் ஈட்டிக் கொண்டு பாய்ச்சுவது போல் இருக்கிறது.
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அடியோடு புறக்கணிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு மண்டல் கமிஷன் அளித்த பரிந்துரை, எதிர்கால முன்னேற்றத்திற்கான திறவுகோலாகவும், உச்ச நீதிமன்றம் அந்த இட ஒதுக்கீட்டை உறுதி செய்து கொடுத்த தீர்ப்பு, இருளைப் போக்கும் ஒளிக் கதிராகவும் அமைந்தது.
ஆனால், அதில் 'கிரீமிலேயர்' என்று ஒரு தடைக்கல்லை ஏற்படுத்தி, இட ஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை விலக்கி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அதனை முற்றாகவே நீக்க வேண்டும் எனவும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.
1993-ல் ஒரு லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட கிரீமிலேயருக்குக் கணக்கிடப்படும் வருமான வரம்பு, கடந்த 27 ஆண்டுகளில் 9 முறை உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், 1993-ல் வெளியிடப்பட்ட மத்திய அரசின் அலுவலகக் குறிப்பாணையில் (Office Memorandum) 'மூன்று வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது தேவைப்பட்டால் மூன்று வருடத்திற்கும் குறைவாகவே கூட 'கிரீமிலேயர்' வருமான வரம்பு உயர்த்தப்பட வேண்டும்' என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டும், இதுவரை நான்கு முறை மட்டுமே கிரீமிலேயருக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் அநீதி ஆகும்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 2015-ம் ஆண்டிலேயே 'கிரீமிலேயர் வருமான வரம்பு 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்' என்று தெளிவான பரிந்துரையை வழங்கியிருக்கிறது.
அப்போதே பிற்படுத்தப்பட்டோர் சமுதாய நலனுக்கான நாடாளுமன்றக் குழு 'கிரீமிலேயர் வருமான வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்' என்று ஒருமனதாகப் பரிந்துரை அளித்துள்ளது.
ஆனால், இவை எதையும் கண்டு கொள்ளாமல், பெயரளவுக்கு 6 லட்சமாக இருந்த 'கிரீமிலேயர்' வருமான வரம்பை 8 லட்சமாக மட்டுமே உயர்த்தி, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை, 27 சதவீத இட ஒதுக்கீடு பயனை முழுவதும் அனுபவிக்க விடாமல் மத்திய பாஜக அரசு திட்டமிட்டுத் தடுத்தது.
இந்தத் துரோகம் போதாது என்று, முதலில் 'சம்பளத்தை 'கிரீமிலேயர்' வருமானமாக எடுத்துக் கொள்வோம்' என்று ஆணையத்தில் பாஜகவினரை தலைவராகவும், உறுப்பினர்களாகவும் நிரப்பி, ஒப்புதலைப் பெற்று; இப்போது 'நிகர சம்பளத்தை எடுத்துக் கொண்டு 'கிரீமிலேயர்' வருமானத்தைக் கணக்கிடுவோம்' என்று துடிப்பது, சமூகநீதிக்கு எதிரானது; அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது; நாட்டின் போர்முனைக்கு முதலில் தடந்தோள் தட்டிப் புறப்படும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்குத் துரோகம் இழைப்பது!
'கிரீமிலேயர்', 27 சதவீத இட ஒதுக்கீட்டின் பயனை அடைவதற்குத் தடையாக இருக்கிறது' என்று மத்திய அரசுக்கு 2015-ல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெளிவாகப் பரிந்துரை வழங்கிய போதிலும், சட்டப்பூர்வமான இடஒதுக்கீட்டின் மீது மத்திய பாஜக அரசு நடத்தும் அநியாயமான தாக்குதலை தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது என்று முன்கூட்டியே தெரிவித்திட விரும்புகிறேன்.
ஆகவே, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்திடவும், 'கிரீமிலேயர்' வருமான வரம்பை ரத்து செய்திடவும்; பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப் பிரதிநிதி என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago