கரோனா காலத்திலும் கொள்ளையடிக்கும் ஒரு கும்பலிடம் மாநில அரசு மாட்டிக்கொண்டு விட்டது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (ஜூலை 24) நாகை மாவட்ட பாஜக பொதுச் செயலாளரும், பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளருமான அமிர்த விஜயகுமார் உள்ளிட்ட 500 குடும்பங்கள் பாஜகவிலிருந்தும், அதிமுக - பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து 50 குடும்பங்களும் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
அப்போது திமுக தலைவர் காணொலி வாயிலாக அவர்களை வரவேற்றுப் பேசியதாவது:
"நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்த விஜயகுமார் தலைமையில் பாஜக மற்றும் மாற்று இயக்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைகின்ற இந்தக் காணொலி விழாவில் பங்கெடுத்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
» கோவை மாவட்டத்தில் நாளை மாலையிலிருந்து மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு: ஆட்சியர் அறிவிப்பு
» ஜூலை 24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்
இது கரோனா காலம் என்பதால் நாம் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறோம். ஆனாலும் காணொலி மூலமாக நாம் சந்திக்கிறோம்.
கரோனா முடியட்டும் என்று காத்திராமல் உடனடியாக திமுகவில் இணைந்துவிட வேண்டும் என்று துடிப்போடு ஆர்வத்தோடு முன்வந்த உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.
யாரெல்லாம் இணையக் காத்திருக்கிறார்கள் என்று நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எனக்கு ஒரு பட்டியலைக் கொடுத்தார். மிக நீண்ட அந்தப் பட்டியலை வாசித்தால் அதுவே நீண்ட நேரம் ஆகும். அவ்வளவு பேர் ஆர்வமாக திமுகவில் உங்களை இணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் உண்டு. ஆனால், அனைவருக்கும் கருணாநிதி ஒரு பெயரை வைத்தார். அதுதான் 'உடன்பிறப்புகளே' என்பதாகும். 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்று அவர் சொன்னால் போதும்; ஒவ்வொரு தொண்டரும் தன்னைத்தான் தலைவர் பெயர் சொல்லி அழைக்கிறார் என்று நினைத்து ஆரவாரம் செய்வார்கள். அத்தகைய தொண்டர் பட்டாளத்தில் நீங்களும் வந்து இணைந்துள்ளீர்கள்.
நாடு எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். அது தெரிந்ததால்தான், மக்களைத் திமுகதான் காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்தோடு நீங்கள் அனைவரும் வந்து திமுகவில் இணைந்திருக்கிறீர்கள்.
மார்ச் மாதத்தில் இருந்து கரோனா பரவி வருகிறது. இது ஜூலை மாதம். இன்னும் சில நாட்களில் ஜூலை முடியப் போகிறது. ஆனால், கரோனா பரவல் அதிகமாகி வருகிறதே தவிர குறையவில்லை; குறைப்பதற்கான எந்த முயற்சியையும் மத்திய - மாநில அரசுகள் எடுக்கவில்லை.
ஊடரங்கு போட்டு கரோனாவைக் கட்டுப்படுத்தி விடுவோம் என்றார்கள். ஆனால், 130 நாட்களாக ஊடரங்கில் தான் இருக்கிறோம். ஆனால், கரோனா குறையவில்லை என்றால் இந்த அரசாங்கத்துக்கு கரோனாவைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்?
கரோனா பரவலைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை, வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவிகள் செய்தார்களா என்றால், மத்திய அரசும் செய்யவில்லை; மாநில அரசும் செய்யவில்லை.
மக்களுக்கு நிதி உதவி செய்யுங்கள் என்று சொன்னால், மத்திய அரசு கடன் கொடுக்கிறோம் வாங்கிக் கொள் என்கிறது.
மாதம் 5,000 கொடுங்கள் என்று மூன்று மாதமாகச் சொல்லி வருகிறேன். முதல்வர் பழனிசாமிக்கு இன்னும் இரக்கம் வரவில்லை. இதுதான் இரண்டு அரசுகளும் ஆளும் லட்சணம். இரண்டு அரசாங்கத்துக்கும் மக்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது.
இரண்டு நாட்களாக நீங்கள் செய்திகளில், தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். கரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையையே மறைத்து விட்டார்கள் என்று! கரோனாவில் மரணம் அடைந்தவர்கள் தமிழகத்தில்தான் குறைவு என்று காட்டுவதற்காக, இறந்தவர்கள் எண்ணிக்கையை மறைத்து விட்டார்கள்.
ஒன்றிரண்டு எண்ணிக்கை குறைந்தால் அது கணக்கில் ஏதோ விடுபட்டுவிட்டது என்று சொல்லலாம். ஆனால் 444 பேர் உயிரிழந்த தகவலை மறைத்துவிட்டார்கள். இவர்கள் எல்லோரும் மார்ச் மாதம் 1-ம் தேதியிலிருந்து ஜூன் 10-ம் தேதி வரை இறந்தவர்கள். இந்த 444 பேர் என்பதும் உண்மையான கணக்குத்தானா? அல்லது இன்னும் மறைக்கிறார்களா என்று தெரியவில்லை.
அதுவும் இந்த மரண எண்ணிக்கை சென்னையில் மட்டும்தான். மற்ற மாவட்டங்களிலும் இதுபோல் மறைத்துள்ளார்களா என்பதும் இன்னும் தெரியவில்லை. இப்படி மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிக் கொண்டு இருக்கிற ஆட்சி முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி.
மரணத்திலேயே இவ்வளவு பொய்க்கணக்கு எழுதி இருப்பவர்கள், ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒதுக்கும் பணத்தில் எவ்வளவு பொய்க்கணக்கு எழுதி இருப்பார்கள்! கரோனா காலத்திலும் கொள்ளையடிக்கும் ஒரு கும்பலிடம் மாநில அரசு மாட்டிக்கொண்டு விட்டது.
மத்திய அரசுக்கு நாட்டு மக்களைப் பற்றிய எந்தக் கவலையும் கிடையாது. ஏதோ ஒரு கற்பனையில் கார்ப்பரேட்டுகளுக்கு வசதியான ஒரு ஆட்சியை அவர்கள் நடத்தி வருகிறார்கள்.
சாதாரண மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இருந்தால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து தங்கள் மாநிலத்துக்குச் செல்லும் துரதிர்ஷ்டமான சூழலை உருவாக்கி இருப்பார்களா?
20 லட்சம் கோடியில் திட்டங்கள் என்றார்கள். 3 லட்சம் கோடியில் உதவிகள் என்றார்கள். 50 ஆயிரம் கோடியில் தொழிலாளர்களுக்கு சலுகைகள் என்றார்கள். எல்லாமே காற்றோடு போய்விட்டது.
இவை எல்லாவற்றையும் விட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பில் கை வைத்து விட்டார்கள். படிக்க முடியாது, வேலைக்குப் போக முடியாது என்ற நிலைமையை உருவாக்குகிறார்கள். இதற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். அதன் தீர்ப்பைப் பொறுத்து அடுத்தகட்ட நவடிக்கையில் இறங்குவோம்.
இப்படி ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி மக்களது உரிமைகளுக்காக இயங்கும் திமுகவை நோக்கி வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்னும் சில மாதங்களில் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் தொடங்கும்போது, உங்களை அதில் இணைத்துக் கொள்ளுங்கள்.
நாகை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன், தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்".
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago