தேசிய மீன்வளக் கொள்கை வரைவுக்கு எதிராக தூத்துக்குடியில் மீனவர்கள் போராட்டம்: மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை

தேசிய மீன்வளக் கொள்கை வரைவைக் கண்டித்து தூத்துக்குடியில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் மனு அளித்தனர்.

தேசிய மீன்வளக் கொள்கை வரைவு- 2020 மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

இது உள்நாட்டு மீனவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளதாகக் கூறி பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வரைவைக் கைவிட வலியுறுத்தி தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் இன்று முற்றுகையிட்டனர்.

தேசிய மீன்வளக் கொள்கை 2020 எதிர்ப்புப் பிரசார இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் மா.கிருஷ்ணமூர்த்தி, ஜி.மணி ஆச்சாரி, சி.நான்சிலி, எஸ்.ஜான்சிராணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவின் விவரம்:

கடல் வளத்தையும், கடற்கரையையும் கையகப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு கரோனா ஊரடங்கு காலத்திலும் தேசிய மீன்வளக் கொள்கை வரைவை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு மாநில அரசின் அதிகாரத்தை நசுக்கும் செயலாகும்.

இந்த கொள்கை அமலுக்கு வந்தால் பாரம்பரிய உள்நாட்டு மீன்பிடித் தொழில் முற்றிலும் அழிந்து போகும். பன்னாட்டு முதலாளிகளின் பேராசைக்கு கடல் வளத்தை ஒப்படைக்க மத்திய அரசு முயல்கிறது.

இந்த மீன்வளக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என மாநில அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். மேலும், மத்திய அரசு இந்த தேசிய மீன்வளக் கொள்கை வரைவை கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE