சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கரோனா: விசாரணை ஒத்திவைப்பு

By என்.சன்னாசி

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் இருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. இதற்காக கடந்த 10-ம் தேதி டெல்லியில் இருந்து கூடுதல் டிஎஸ்பி சுக்லா என்பவர் தலைமையில் 8 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் மதுரை வந்தனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உட்பட 10 பேரில் ஸ்ரீதர் உள்ளிட்ட 8 பேரை அடுத்தடுத்து போலீஸ் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வாக்குமூலம் வாங்கியது.

காவலில் எடுத்தவர்களை மதுரை சிபிஐ அலுவலகத்தில் வைத்தும், சாத்தான்குளத்துக்கு நேரில் அழைத்துச் சென்றும் விசாரித்தனர்.

இந்நிலையில் 2-வது கட்டமாக காவலில் எடுத்த எஸ்ஐ பால் துரை உள்ளிட்ட மூன்று காவலர்களை விசாரித்தபோது, ஜூலை 22ம் தேதி சிபிஐ குழுவில் இடம்பெற்ற சச்சின், சைலேஷ் குமார் மற்றும் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற மதுரை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் 40-க்கும் மேற் பட்டோருக்கும், வழக்கில் கைதான காவல் துறையினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் சிபிஐ அதிகாரிகளான பவன்குமார், அஜய்குமார் மற்றும் கைதான சிறப்பு எஸ்ஐ பால்துரைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சிபிஐ அதிகாரிகள், ஆயுதப்படை காவலர் ரயில்வே மருத்துவமனையிலும், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் மதுரை சிபிஐ அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஓரிரு நாட்கள் வரை கிருமி நாசினி தெளிக்க வசதியாக குறைந்த நபர்களே தற்போது அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், இச்சூழலில் சாத்தான்குளம் வழக்கு விசாரணை தற்காலிகமாஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE