மத்திய பாஜக அரசு சமூக நீதிக்கு எதிராகச் செயல்படுமேயானால் தமிழகத்தில் இருந்து அக்கட்சி முற்றிலும் துடைத்தெறியப்படும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூலை 24) வெளியிட்ட அறிக்கை:
"தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பத்திரிகையாளர் சந்திப்பில் கறுப்பர் கூட்டத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார். கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.
பாஜகவை வளர்க்க மேற்கொண்ட அனைத்து உத்திகளும் தோல்வியடைந்த நிலையில் கந்த சஷ்டி கவசப் பிரச்சினையை வைத்து கட்சியை வளர்க்கலாம் என்று பகல் கனவு காண்கிறார்.
மேலும், சமூக நீதியை நீண்டகாலமாக எதிர்த்து வருகிற ஆர்.எஸ்.எஸ். கொள்கைவழி வந்த பாஜக சமூக நீதி பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
பெரியார், காமராஜர் பிறந்த மண்ணில் பாஜக சமூக நீதிக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது கொல்லன் தெருவில் ஊசி விற்கிற கதையாகும். பாஜகவே இட ஒதுக்கீட்டைச் சீர்குலைத்த, சமூக நீதிக்கு எதிரான கட்சி என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.
கடந்த ஆறு ஆண்டுகால மோடியின் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
மண்டல் கமிஷன் அறிக்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் பலன் பெறத் தொடங்கினர். 2013 ஆம் ஆண்டு மண்டல் அறிக்கையின்படி, இந்திய மக்கள் தொகையில் பிற பிற்படுத்தப்பட்டோர் 52 சதவிகிதம் பேர் உள்ளனர். 2004இல் மத்திய அரசுப் பணிகளில் 16.6 சதவிகிதம் பேர் இருந்தனர். 2014 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்து 28.5 சதவிகிதமாக உயர்ந்தது.
இந்த இட ஒதுக்கீட்டால் விளைந்த பலன்களுக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த தனியார்மயமாக்கலின் புதிய திட்டம் காரணமாக, இட ஒதுக்கீடு சாதனைகள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, 4 பொதுத்துறை நிறுவனங்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்படும் அல்லது தனியார்மயமாக்கப்படவுள்ளன. வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசின் கொள்கைகளால் ஏற்கெனவே இட ஒதுக்கீடுகள் பலவீனமடைந்துவிட்டன.
இந்நிலையில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கினால் இட ஒதுக்கீடு நிலைமை என்னவாகும் என்று சொல்லத் தேவையில்லை.
2006 ஆம் ஆண்டில் 5.5 லட்சமாக இருந்த வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு 7.5 லட்சமாக உயர்ந்துள்ளது. 2014-2018 இடைப்பட்ட ஆண்டுகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸ் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 1,236-லிருந்து 759 ஆக குறைந்தது. அதாவது, ஏறத்தாழ 40 சதவிகிதம் அளவுக்குக் குறைந்தது.
மேலும், 2003-2012 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய அரசுப் பணிகளில் ஊழியர்களின் எண்ணிக்கை 32.69 லட்சத்திலிருந்து 26.30 லட்சமாக குறைந்துவிட்டது. இட ஒதுக்கீடுகளால் பயன்பெறும் தலித்துகளின் எண்ணிக்கை 5.4 லட்சத்திலிருந்து 4.55 லட்சமாக அதாவது, 16 சதவிகிதம் குறைந்தது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை சதவிகிதம் அதிகரிப்பதற்குப் பதில் குறையத் தொடங்கியது. 2011 ஆம் ஆண்டு 18.1 லட்சமாக இருந்த வேலை வாய்ப்பு எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு 14.86 லட்சமாகக் குறைந்தது.
2003 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுக்கு இடையே 1.38 லட்சமாக இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கான மத்திய அரசுப் பணி, 4.55 லட்சமாக உயர்ந்தது. ஆனால், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நிலைமை வேறாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு 14.89 லட்சமாக இருந்த பிற பிற்படுத்தப்பட்டோருக்கான பணியிடங்கள், 2012 ஆம் ஆண்டில் 23.55 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்னர், 23.38 லட்சமாகக் குறைந்தது.
மத்திய அரசுப் பணிகளில் புறவழியில் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டதால், இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து ஏற்பட்டது. இத்தகைய அதிகாரிகள் தேர்வின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற தேர்தல் வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றினார். ஆனால், இந்த அதிகாரிகள் தேர்வின்போது இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை.
இட ஒதுக்கீடு முறை கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு சாதகமான நீதித்துறை உத்தரவுகளும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக அமைந்துவிட்டன.
இதன் தொடர்ச்சியாக 11 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான ஆசிரியர் பணிகளுக்கு எஸ்.சி. பிரிவினருக்கு 2.5 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. எஸ்.டி. பிரிவினருக்கு ஓர் இடம் கூட ஒதுக்கப்படவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 8 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன.
கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் கீழ், மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. இதனால் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 10 ஆயிரங்கள் இடங்கள் பறிபோனதோடு, அந்த இடங்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டன.
பிற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான நலன்களையும், பயன்களைப் பறித்துக் கொள்வதை அன்றாடப் பணியாக மாற்றிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இட ஒதுக்கீட்டின் பலன்கள் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினரை முழுமையாகச் சென்றடையவில்லை. இந்நிலையில், அவர்களுக்கான இட ஒதுக்கீட்டையே நீர்த்துப் போகச் செய்வது சமூக நீதிக்கு எதிரானதாகும்.
இதில் வேதனையும், வேடிக்கையும் என்னவென்றால், பிரதமர் மோடியே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்தவர் என்பதுதான்.
இட ஒதுக்கீட்டு விதிமுறைகளில் உச்ச நீதிமன்றம் மாற்றம் கொண்டு வரும் வரையில், மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு எஸ்.சி., மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டும் பொருந்தும் என்றும், அதுவரை இதர பிற்படுத்தப்பட்டோர் அகில இந்திய ஒதுக்கீட்டில் உரிமை கோர முடியாது என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு குழிதோண்டி புதைத்துள்ளது. மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில், அந்தந்த மாநிலங்களின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக்கோரி தமிழக அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கின்றன.
இந்நிலையில், மத்திய பாஜக அரசு சமூக நீதிக்கு எதிராகச் செயல்படுமேயானால் தமிழகத்தில் இருந்து அக்கட்சி முற்றிலும் துடைத்தெறியப்படும் என எச்சரிக்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago