கரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 23) கரோனா தொற்று தொடர்பான விவாதத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் நாராயணசாமி பதில் அளித்துப் பேசியதாவது:

"கரோனா தொற்று காரணமாக புதுச்சேரிக்கு வெளிமாநிலத்தவர் வராததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியை அணுகி கடன் பெற்று அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட்டோம்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்தோம். புதுச்சேரியில் இதுவரை 2,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 987 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய அளவில் இறப்பு சதவீதம் 2.5 ஆக உள்ளது. ஆனால், புதுச்சேரியில் 1.4 சதவீதமாகத் தான் உள்ளது. இதற்காக மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

பிரதமரிடம் கரோனா பாதிப்பு சம்பந்தமாக காணொலி காட்சி மூலம் 3 முறை பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் புதுச்சேரிக்கு நிதி கொடுக்க வேண்டும் என கூறினேன். அதற்கு பிரதமர் பதில் கூறவில்லை. இலவச அரிசியை தவிர மத்திய அரசு எந்த உதவியையும் செய்யவில்லை. இதனால் பேரிடர் துறை நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டன.

கரோனா நிதியாக ரூ.9.16 கோடி வந்துள்ளது. ஏற்கனவே ரூ.12 லட்சத்துக்கு பொருட்கள் மக்களிடம் கொடுத்துள்ளோம். இன்று ரூ.10 லட்சத்துக்கு காசோலை கொடுத்துள்ளோம். அந்த நிதியை கொண்டு அமுதசுரபியில் பொருட்கள் வாங்கி கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கும் பகுதி மக்களுக்கு ரூ.700-க்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும்.

நம்முடைய வருவாய் 68 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அரசும் நிதி கொடுக்கவில்லை. ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.490 கோடி இன்னும் வரவில்லை. இறந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் கரோனா நிதியில் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். இப்போது இருக்கும் இடம் போதவில்லை. இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் அனைத்துப் படுக்கைகளும் நிரப்பிவிட்டன. ஜிப்மரிலும் 259 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளை அழைத்து ஒத்துழைக்காவிட்டால் மருத்துவக் கல்லூரிகளை நாங்களே எடுத்துக் கொள்வோம் என எச்சரிக்க உள்ளேன். மேலும், காரைக்காலில் கரோனா பரிசோதனை செய்வதற்கான கருவிகள் அனுப்பப்படும். அதன் பிறகு, அங்கேயே பரிசோதனை செய்யலாம். இல்லையென்றால் உமிழ்நீர் மாதிரிகளை புதுச்சேரிக்குக் கொண்டு வந்து பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா தொற்று எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்று தெரியாது. இதன் தாக்கத்தை நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். அதற்காக குறைந்தபட்சம் 5,000 படுக்கைகள் தேவைப்படுகிறது. மகப்பேறு மருத்துவமனையை கரோனா மருத்துவமனையாக மாற்றக் கூடாது என எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இங்கு 70 சதவீதம் பேர் தமிழகத்தில் இருந்து தான் பிரவசத்துக்கு வருகின்றனர். ஆனால், இங்குள்ளவர்கள் தமிழகம் சென்றால் சேர்க்க மறுக்கின்றனர்.

எனவே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தொலைபேசியில் பேசினேன். ஜிப்மரில் 500 படுக்கைகள் கொடுக்க வேண்டும் என்றேன். அதற்கு 5 நாட்களில் அமைச்சர் பதில் சொல்வார் என்று நினைக்கிறேன். இந்த நேரத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எனவே, காலதாமதம் ஏற்படுத்தாமல் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு உயர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்"

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்