தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பலியானோர் எண்ணிக்கை 2700 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமூகப் பரவல் இல்லை எனக் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற செயல் என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:
“கரோனா தொற்று நோய் காரணமாக அண்டை நாடான சீனா கடுமையான பாதிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சந்தித்துக் கொண்டு வந்தது. ஜனவரி 30-ம் தேதி உலக சுகாதார நிறுவனம் கரோனா நோய் குறித்து சர்வதேச நெருக்கடி நிலையை அறிவித்தது. பிப்ரவரி 29 ஆம் தேதி வரை சீனாவில் 3,150 பேர் உயிரிழந்தனர்.
இச்சூழலில்தான் பிப்ரவரி 24-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அகமதாபாத் விளையாட்டு அரங்கத்தில் 1 லட்சம் மக்களைத் திரட்டி பிரதமர் மோடி கோலாகலமான முறையில் வரவேற்பு கொடுத்தார். சீனாவில் கரோனாவினால் ஏற்படுகிற உயிரிழப்புகள் குறித்து அப்போது எந்தக் கவலையும் பிரதமர் மோடிக்கு ஏற்படவில்லை.
ஆனால், சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவி மூலமாக ஜனவரி 30-ம் தேதியே முதல் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு தொடர் பாதிப்புகள் இந்தியாவில் ஏற்பட்டதன் காரணமாக மார்ச் 19-ம் தேதி தான் விமான நிலையங்களை மூடுவதற்கான அறிவிப்பை மோடி வெளியிட்டார். கடந்த மார்ச் 24-ம் தேதி மூன்றரை மணி நேர முன்னறிவிப்பு வழங்கி 136 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் பொது ஊரடங்கை அறிவித்தார். இதனால், கோடிக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவித்த துன்பத்திற்கு அளவே இல்லை.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு 12 லட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 37,724 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடக்க காலத்தில் 1 லட்சத்தை எட்டுவதற்கு 110 நாட்கள் ஆன நிலையில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் கரோனா தொற்று 1,17,000 ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.
கரோனா தாக்கத்தின் ஆரம்பக்கட்டமான ஜனவரி 30-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையிலான ஐந்து மாதங்களில் மொத்தமாக 6 லட்சம் பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 21 நாட்களில் மட்டுமே ஐந்து மாத பாதிப்பை மிஞ்சும் வகையில் 6 லட்சம் பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,732 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என இந்திய அரசு சொல்வது மிகப்பெரிய மோசடி என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர். ஆனால், சங்கிலித் தொடர் போல கரோனா தொற்று நாளுக்கு நாள் பரவிக் கொண்டே போகிறது. கரோனா தொற்று முதலில் வெளிநாட்டினரிடமிருந்தே இந்தியாவிற்குள் புகுந்தது. சீன பாதிப்பு ஏற்பட்ட கடந்த டிசம்பர் மாதத்திலேயே விமான நிலையங்களை மூடியிருந்தால் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவிற்கு வருவதைத் தடுத்திருக்க முடியும்.
அதன்மூலம் கரோனா பரவல் எண்ணிக்கை கடுமையாக குறைந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். தற்போது 12 லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ள மோசமான நிலையில் சமூகப் பரவல் இல்லை எனக் கூறுவது மிகுந்த கேலிக்குரியது. மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.
நாட்டின் மொத்த மக்கள்தொகையை ஒப்பிடும்போது 12 லட்சம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுவது ஏற்கக்கூடியதாக இல்லை. ஏனெனில் கரோனா பரிசோதனை என்பது அனைத்து மக்களிடம் செல்லவில்லை. பரிசோதனைகளை அதிகரித்தால்தான் கரோனா பாதிப்பு எண்ணிக்கையை முடிவு செய்ய முடியும்.
ஆனால், யாரிடம் இருந்து யாருக்கு கரோனா பரவியது ? கரோனா பரவியதற்கான காரணம் என்ன ? தனக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்பது கூட பலருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் சமூகப் பரவல் இல்லை எனக் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற செயலாகும்.
கரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பலியானோர் எண்ணிக்கை 2700 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமூகப் பரவல் இல்லை என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. தற்போது சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும் மற்ற மாவட்டங்களில் எண்ணிக்கை கடுமையாக கூடி வருகிறது.
பேருந்துகளே பார்க்காத கிராமங்களில் கூட கரோனா தொற்று அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் இருக்கும் மருத்துவ வசதிகள் கிராமப்புறங்களில் இல்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை கரோனா தொற்று என்றால் என்னவென்றே தெரியாத கிராமங்களில் இன்று அச்சம், பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதனால், விவசாயத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொது ஊரடங்கு காலத்தில் கிராமங்களுக்குச் சென்று நிம்மதியாக இருக்கலாம் என்று கருதியவர்கள் மூலமாக கரோனா தொற்று பரவியிருக்கிறது.
இதை அறிந்து தமிழக சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் கிராமப்புற மக்களிடம் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்து, சமூகப் பரவலில் இருந்து கிராமப்புற மக்களைக் காப்பாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago