மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் ஜூலை 27 ஆம் நாள் நடைபெற உள்ள கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக முழுமையான ஆதரவை அளிக்கிறது. வேளாண் தொழிலைப் பாதுகாக்க மதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:
“கரோனா தீ நுண்மி ஏற்படுத்தி வரும் துயரத்தால் கடந்த 5 மாதங்களாக நாட்டு மக்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்து, வாழ்வாதாரங்களை முற்றிலும் பறிகொடுத்துவிட்டு, எதிர்காலம் இருள் அடைந்து கிடக்கின்ற வேதனையில் தவிக்கின்றனர். கரோனா பேரிடரை எதிர்கொள்ள முடியாமல் மாநில அரசுகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.
இதுபோன்ற சூழலில், மத்திய பாஜக அரசு தனது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்படாமல், மாநிலங்களை அடக்கி ஆளும் எதேச்சதிகாரத் தன்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
» நீலகிரி மருத்துவக் கல்லூரிக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
» அனைத்துக் கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சாரச் சட்டத் திருத்தம்-2020 மற்றும் ஜூன் 3, 2020 இல் பிறப்பிக்கப்பட்ட மூன்று அவசரச் சட்டங்களான அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 இல் திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஆகியவை விவசாயிகளுக்குப் பெரும் அநீதி இழைக்கும் சட்டங்களாகும்.
நாடாளுமன்றத்தில் விவாதித்து, மாநிலங்களின் கருத்துகளையும் அறிந்து வேளாண் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவராமல், தானடித்த மூப்பாக மோடி அரசு செயல்படுகிறது.
வேளாண் துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து, டெல்லியின் ஏகபோக ஒற்றை அதிகார ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் மேற்கண்ட நான்கு சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஏனெனில், விவசாயிகள் வேளாண் தொழிலுக்கு பெற்று வரும் இலவச மின்சார உரிமையை, மின்சாரச் சட்டத் திருத்தம்-2020 முற்றிலும் நிராகரிக்கிறது.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 திருத்தச் சட்டம் தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவாகப் பயன்படும் எண்ணெய் வகைகள், உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்களிலிருந்து நீக்கியுள்ளது. இதனால் சந்தையில் இவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமை பெருநிறுவனங்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். மேலும் பதுக்கல்காரர்களால் விலையேற்றம் மக்களைப் பாதிக்கும்.
“ஒரே நாடு; ஒரே வேளாண் சந்தை” என்பதை நிலைநாட்ட வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020 கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை இந்தியாவில் எங்கு கொண்டுபோய் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் என்று மத்திய அரசு கூறுவது ‘கேழ்வரகில் நெய் வடிகிறது’ என்ற முதுமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
நடைமுறைச் சாத்தியமற்ற, விவசாயிகளுக்குப் பாதகமான இச்சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும். விவசாயிகளிடம் நேரடியாக அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களைக் கொள்முதல் செய்வது மட்டுமின்றி, சந்தையை தங்கள் விருப்பப்படி பெருநிறுவனங்கள் ஆட்டிப் படைக்கும் நிலைதான் உருவாகும்.
தற்போது நடைமுறையில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக்குழுச் சட்டங்கள், வேளாண் கொள்முதலை இனிக் கட்டுப்படுத்த முடியாது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழித்துக்கட்டப்பட்டு, தனியார் கொள்முதல் நிலையங்கள் பெருகும். இது விவசாயிகளுக்குச் செய்யப்படும் பச்சைத் துரோகம் அல்லவா?
விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு), விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியில் பெருவர்த்தக நிறுவனங்கள் ஈடுபட அனுமதிக்கிறது.
இதனால் வேளாண் தொழிலை பெரு வணிகக் குழுமங்களிடம் பறிகொடுத்துவிட்டு, விவசாயிகள் நிலங்களை விட்டு வெளியேறி, சொந்த மண்ணிலேயே பஞ்சைப் பராரிகளாக அலையும் நிலையை உருவாக்கிவிடும்.
விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 27 ஆம் நாள் விவசாயிகள், நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடிக் கட்டி எதிர்ப்புத் தெரிவிப்பது என்றும், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இணைந்து மாவட்டங்களில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரகடனம் செய்திருக்கிறது.
மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், அவசரச் சட்டங்களைத் திருப்பப் பெறக்கோரியும் ஜூலை 27 ஆம் நாள் நடைபெற உள்ள கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக முழுமையான ஆதரவை அளிக்கிறது. வேளாண் தொழிலைப் பாதுகாக்க மதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். மாவட்டங்களில் நடைபெறும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago