ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து பாமகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடம் நடத்தத் தேவையில்லை என, பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.மணி இன்று (ஜூலை 22) வெளியிட்ட அறிக்கை:
"மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி தமிழகத்தின் பிற கட்சிகள் வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும், ஆனால், பாமக 27% இட ஒதுக்கீடு கோரி வழக்குத் தொடர்ந்திருப்பதால் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அவரது அறியாமை கவலை அளிக்கிறது.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் பாமக மீது குற்றம்சாட்டும் முன்பு அது குறித்த அடிப்படைக் கூறுகளை கே.பாலகிருஷ்ணன் அறிந்து கொண்டிருக்க வேண்டும். சமூக நீதி என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் போராடிப் பெற்ற உரிமையாகும்.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகத்திலிருந்து வழங்கப்படும் இடங்களுக்கு தமிழகத்தில் வழங்கப்படுவது போன்று 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வழக்குத் தொடர்ந்து விட்டால் உடனடியாக 50% இட ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி விடுமா?
எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் தீர்மானிக்கப்படும். இந்த அடிப்படையை பாலகிருஷ்ணனும், அவரை இயக்கும் சக்திகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
அகில இந்திய தொகுப்பு என்பது உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அகில இந்திய தொகுப்பை நிர்வகிப்பதும், அதற்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதும் மத்திய அரசுதான். அவ்வாறு இருக்கும் போது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின்படிதான் எந்தப் பிரிவுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும்.
2006-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தின்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 27%தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும். இது சமூக நீதி பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.
அபய்நாத் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு முறையே 15%, 7.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றித்தானே தவிர, மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி அல்ல. இந்த உண்மைகளும், அரசியலமைப்பு சட்ட விதிகளும் பாமகவுக்கு நன்றாக தெரிந்ததால்தான் சாத்தியமாகும் தீர்ப்பைப் பெறுவதற்காக 27% இட ஒதுக்கீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது.
மாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசியலமைப்புச் சட்டம் குறித்தோ, அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்தோ எதையும் தெரிந்து கொள்ளாமல், அபத்தமான வாதங்களை வைத்துக் கொண்டிருக்கிறது.
மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்கையில் இட ஒதுக்கீடு குறித்து அகில இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதியின்படி, அந்தந்த மாநிலங்களில் அமலில் இருக்கும் இட ஒதுக்கீடு கொள்கையினை செயல்படுத்த வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அதனால் தமிழகம் வழங்கிய இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார். அவரது அறியாமை நகைப்பை ஏற்படுத்தவில்லை; மாறாக வேதனையைத் தருகிறது.
இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து தமிழக அரசால் நிரப்பப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மட்டும்தான் பொருந்தும். அதில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள இடங்களாக இருந்தாலும் கூட, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட பிறகு அந்த இடங்களுக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசு விதிகளின்படி தான் தீர்மானிக்கப்படுமே தவிர, மாநில அரசு விதிகளின்படி அல்ல என்பதை பாலகிருஷ்ணன் உணர வேண்டும்;
அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதைக் கண்டித்து கடந்த 4 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. அப்போதெல்லாம் பாலகிருஷ்ணனும், அவரது முதலாளிகளும் யாருடைய நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களால் விளக்க முடியுமா?
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கடிதம் எழுதினார். அதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் எழுதிய கடிதத்தில்தான் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனிகுமாரி வழக்கு காரணமாகத் தான் இட ஒதுக்கீடு வழங்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்துதான் அந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்; 27% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் வழக்குத் தொடர்ந்தார். 27% இட ஒதுக்கீடு குறித்து தமிழகத்திலிருந்து தொடரப்பட்ட முதல் வழக்கு அதுதான் என்பது பாலகிருஷ்ணனுக்குத் தெரியுமா?
அன்புமணி ராமதாஸ் தொடர்ந்திருந்த வழக்கு திட்டமிட்டபடி நடந்திருந்தால், இந்நேரம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், அதே வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியின் முதலாளிக் கட்சி அதை இணைத்துக் கொண்டு, 50% ஒதுக்கீடு கோரி குறுக்குசால் ஓட்டியதால்தான் நீதிபதிகள் ஆத்திரமடைந்து அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றினார்கள்.
அதைத் தொடர்ந்து அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? என்பது குறித்த சர்ச்சையில் உச்ச நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் இடையே சமூக நீதி பந்தாடப்பட்டது. அதற்குக் காரணமான முதலாளிக் கட்சியை தோழர் கண்டிப்பாரா?
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, அதன் முதலாளிக் கட்சியோ துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை.
பாமக நிறுவனர் ராமதாஸ் தான் இந்த இட ஒதுக்கீட்டைப் போராடிப் பெற்றுத் தந்தார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தம்மையும் இணைத்துக் கொண்டு வாதாடி 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த ஒரே கட்சி இந்தியாவிலேயே பாமகதான்.
அபய்நாத் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக கூறியிருக்கும் பாலகிருஷ்ணனுக்கு, அத்தீர்ப்பு வழங்கப்பட காரணமே, பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக அப்போது மத்திய சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் ஆணைப்படி தாக்கல் செய்யப்பட்ட மனு தான் என்பதும் தெரிந்திருக்கும்
கே.பாலகிருஷ்ணனுக்கு உண்மையிலேயே சமூக நீதி மீது அக்கறை இருந்தால் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.
1. அகில இந்திய தொகுப்பு உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டது என்றாலும் கூட, மத்திய அரசு நினைத்தால், உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம். பாமகவின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீடு 2010-11 ஆம் ஆண்டில் தான் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. அப்போது, அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இல்லை. இருந்திருந்தால், பட்டியலினம், பழங்குடியினருக்கு வழங்கியது போன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பார்.
ஆனால், அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் முதலாளிக் கட்சியும், காங்கிரஸும் இணைந்து தான் மத்தியில் ஆட்சி செய்தன. இன்னும் கேட்டால் முதலாளிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராகவும் இருந்தார். அவர்கள் நினைத்திருந்தால் அப்போதே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். அதை அவர்கள் செய்யாதது ஏன்? என்று கேட்டு கே.பாலகிருஷ்ணன் கண்டிப்பாரா?
2. மார்க்சிஸ்ட் கட்சியின் முதலாளிக் கட்சியும், காங்கிரஸும் இணைந்துதான் மத்தியில் ஆட்சி செய்த 2011-ம் ஆண்டில் தான் நீட் தேர்வைத் திணித்தது. அதற்கான கோப்பு முதலாளிக் கட்சியை சேர்ந்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சரை கடந்து தான் சென்றிருக்க வேண்டும். இப்போது நீட் தேர்வை எதிர்க்கும் பாலகிருஷ்ணன் அதற்கு காரணமான முதலாளிக் கட்சியைக் கண்டிக்க முன்வருவாரா?
3. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதால் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினரின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. அதனால், உயர்வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து தேசிய அளவில் போராட மார்க்சிஸ்ட் கட்சி தயாரா?
4. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மாநில அளவில் மட்டுமல்ல... தேசிய அளவிலும் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. அதற்கான ஒரே தீர்வு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான். இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அதன் முதலாளிகளின் நிலைப்பாடு என்ன? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
நிறைவாக கே.பாலகிருஷ்ணனுக்கு ஓர் அறிவுரை...
சமூக நீதி, இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து பாமகவுக்கு பாடம் நடத்த முயற்சி செய்ய வேண்டாம். அந்த விஷயத்தில் நீங்களும், உங்கள் கூட்டாளிகளும் பத்தாம் வகுப்பைத் தாண்டாதவர்கள் என்றால், எங்கள் ராமதாஸ் பல்கலைக்கழகம்.
இதில் உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால், 2006-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரித் தலைவர்கள் கூட்டத்தில், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக பாமகவின் நிறுவனர் ராமதாஸ் எப்படி போராடி சாதித்தார்? என்பதை அந்தக் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த சீதாராம் யெச்சூரி, டி.ராஜாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சமூக நீதி பற்றி உங்களுக்கு வழிகாட்ட அவர்கள் தான் தகுதியானவர்கள்... இங்குள்ள முதலாளிகள் அல்ல"
இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago