மதுரையில் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பெற வருவோருக்கு கரோனா பரிசோதனை முடிவுகள் வராமல் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனத் தெரியவருகிறது. இது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும்? என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது,
மேலும் இதுதொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மற்றும் மதுரை மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ஆகியோர் விரிவான நிலை அறிக்கையை தொடர்புடைய ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கும் இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர் தரப்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
» கரோனா தொற்றால் 2 டாஸ்மாக் பணியாளர்கள் உயிரிழப்பு; பணிப் பாதுகாப்பு கேட்டு முற்றுகைப் போராட்டம்
அந்த மனுவில்," மதுரையில் தீவிரமாக நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் கரோனோ பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், தாமதத்தின் காரணமாக நோய்த் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது.
மேலும் கரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான கழிவறை, படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை. பயன்படுத்தப்பட்ட படுக்கைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன என்பது போன்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.
ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றம் சில கேள்விகளையும் அதற்கான விடைகளையும் பெற விரும்புகிறது. அதனடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து இதனை
வழக்காக பதிவு செய்கிறது.
1. கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைகளை சுழற்சி முறையில் மேற்கொள்ளவும், துரிதமாக சோதனைகளை முடிக்கவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தயாராக உள்ளனரா? பிசிஆர் பரிசோதனை கருவிகள் உள்ளனவா?
2. கொரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்திற்கு என்ன காரணம்?
3. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வார்டுகள், தனிமைப்படுத்துதல் முகாம்களில் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்த விபரங்கள் என்ன?
4. கரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதா? அவை முறையாக தொற்று பரவா வண்ணம் பராமரிக்கப்படுகின்றனவா? அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படுகிறதா?
5. முன்களப் பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பாரா மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு தேவையான PPE உடைகள் உள்ளனவா?
6. கரோனா தோற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அல்லது எரியூட்டுவதற்காக என்ன வசதி செய்யப்பட்டுள்ளது?
என்பது போன்ற வினாக்கள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை மூத்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி," மதுரையில் இதுவரை 1,07,167 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 8358 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், புதிய பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள 594 படுக்கைகளையும் சேர்த்து மொத்தம் 1461 படுக்கை வசதிகள் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டன. இவற்றில் 723 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர். 738 படுக்கைகள் காலியாக உள்ளன. மதுரை மாவட்டத்தில் 30 தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை வழங்கப்படுகின்றன. 28 மதுரை நகர் பகுதியிலும், 1 உசிலம்பட்டியிலும், 1 திருமங்கலத்திலும் உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் 878 படுக்கை வசதிகள் உள்ளன. அவற்றில் 696 படுக்கைகளில் நபர்கள் உள்ளனர். 180 படுக்கைகள் காலியாக உள்ளன. அரசு மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் உட்பட 120 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 19 நுண்ணுயிரியல் மருத்துவர்கள் உள்ளனர்.
தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அரசு விவசாயக் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி ஆகியவை தனிமைப்படுத்துதல் முகாம்களாக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் 2470 படுக்கை வசதிகள் உள்ள நிலையில், 2225 படுக்கைகள் காலியாக உள்ளன. இறந்தவர்களின் உடல் மதுரை தத்தனேரி மற்றும் மூலக்கரை மயானங்களில் தகனம் செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், உடல்களை அடக்கம் செய்ய 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வழங்க நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறதே எனத் தெரிவித்தார்.
அதற்கு அரசுத்தரப்பில் அது போல கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. அவ்வாறு பணம் கேட்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பெற வருவோருக்கு கரோனா பரிசோதனை முடிவுகள் வராமல் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனத் தெரியவருகிறது. இது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும்? என கேள்வி எழுப்பினர்.
மேலும் கரோனா பரிசோதனை முடிவுகள் வருவதில் ஏன் தாமதம் ஏற்படுகின்றது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மற்றும் மதுரை மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ஆகியோர் விரிவான நிலை அறிக்கையை தொடர்புடைய ஆவணங்களுடன் தாக்கல் செய்யவும், இது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago