திருச்சி மாவட்டத்தில் 5 மாதங்களில் 74 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்; சட்டத்தை மீறி நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை; ஆட்சியர் எச்சரிக்கை

By ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டால், தொடர்புடையவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு எச்சரித்துள்ளார்.

நாட்டில் 18 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைக்குத் திருமணம் நடைபெற்றால் குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழும், 21 வயது நிறைவடையாத ஆணுக்குத் திருமணம் நடைபெற்றால், சட்டப்படியான வயதை அடையாமல் திருமணம் செய்ததற்காக திருமணச் சட்டத்தின்படியும் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் மார்ச் முதல் இதுவரை கடந்த 5 மாதங்களில் 74 குழந்தைத் திருமணங்களை சமூக நலத் துறையினரும், 'சைல்ட் லைன்' (Child line) அமைப்பினரும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்கள் கூறும்போது, "பெண் குழந்தைகளின் கல்வி, முன்னேற்றதுக்காக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சட்டப்படியான திருமண வயதை எட்டாத குழந்தைகளுக்குத் திருமணம் செய்யக்கூடாது என்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், அதையும் தாண்டி குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதற்கு பெண் குழந்தைக்குப் பாதுகாப்பின்மை, குடும்ப வறுமை, குடும்ப கவுரவம் என்று பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களை தடுக்க சமூக நலத் துறை சார்பில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கூறுகையில், "சட்டபூர்வ திருமண வயது பெண்ணுக்கு 18 ஆகவும், ஆணுக்கு 21 ஆகவும் உள்ளது. இந்த வயதுக்குக் குறைவானவர்களுக்குத் திருமணம் நடைபெறுவது சட்டத்தை மீறுவதாகும். குறிப்பாக, குழந்தைகளின் உரிமைகளை அத்துமீறும் செயல்.

இதன்படி, குழந்தைத் திருமணம் நடைபெற்றால் குழந்தையின் பெற்றோர், காப்பாளர், குழந்தைத் திருமணத்தை நடத்தி வைக்க ஊக்குவிப்பவர், அனுமதிப்பவர், அதைத் தடுக்கத் தவறியவர்கள், குழந்தைத் திருமணத்தில் பங்கேற்றவர்கள் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

குழந்தைத் திருமணம் தொடர்பாக 1098 என்ற இலவச எண்ணுக்கோ அல்லது அரசு தலைமை மருத்துவமனை அருகே செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்திலோ அல்லது மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்திலோ தகவல் அல்லது புகார் தெரிவிக்கலாம். குழந்தைத் திருமணம் நடைபெறுவது குறித்த தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்