கரோனாவால் இறந்தவரின் சடலத்தை ஒப்படைக்காமல் நான்கு நாட்களாக ஜிப்மர் அலைக்கழித்ததால் சடலத்தைப் பெற்று அடக்கம் செய்ய தன்னார்வலர்கள் உதவியுள்ளனர்.
புதுச்சேரியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று (ஜூலை 17) இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் வெள்ளிக்கிழமை முதல் தினமும் மருத்துவமனைக்கு அலைந்துள்ளனர். எந்தக் காரணமும் கூறாமல் சடலத்தைத் தராமல் தங்களை மருத்துவமனை அலைக்கழித்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனிடையே, புதுச்சேரியில் கரோனா நோயாளிகளை அடக்கம் செய்யும் சேவையில் அரசால் நியமிக்கப்பட்டுள்ள 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பினர் நேற்று (ஜூலை 21) ஜிப்மர் சென்று அதிகாரிகளுடன் பேசி சடலத்தை வெளியே கொண்டு வந்தனர்.
பிணவறையிலிருந்து அந்த உடலை எடுத்துத் தர ஊழியர்கள் வராததால் தன்னார்வலர்களே அதையும் செய்து உடலை அடக்கம் செய்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தோர் கூறுகையில், "நான்கு நாட்களாக கரோனாவால் இறந்தவரின் சடலத்தைப் பெற அலைந்தோம். ஜிப்மர் தரப்பு அலைக்கழித்தது. சடலத்தை எடுத்துத் தர ஆளில்லை என்று பல்வேறு காரணங்களைத் தெரிவித்தனர். மிகுந்த முயற்சிக்குப் பிறகு சடலத்தை நேற்று பெற்று தன்னார்வலர்கள் உதவியுடன் அடக்கம் செய்தோம்" என்றனர்.
கரோனா காலத்தில் புதுச்சேரியில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் முதலில் மரணமடைந்தார். பரிசோதனையில், இறந்தவருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்தது. இறுதிச் சடங்கின்போது அவரது சடலம் சவக்குழியில் வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இதில் தொடர்புடைய கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் இருவர், சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் என மூவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் இறப்போரின் உடலை அவரவர் மத அடிப்படையில் அரசுடன் இணைந்து இறுதிக் காரியங்களைச் செய்ய 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம்கள் முன்வந்தனர். அவர்களுக்கு அரசு அனுமதிக் கடிதமும் தந்தது.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் கரோனாவால் இறந்துள்ள 27 பேரை அவரவர் மத அடிப்படையில் இதுவரை புதுச்சேரியில் இறுதிக் காரியம் செய்துள்ளனர். கரோனாவால் இறந்தோரின் சடலத்தை ஜிப்மர் தரப்பு ஒப்படைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், இறப்போரின் உறவினர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பாக, 'பாப்புலர் ஃப்ரண்ட்' புதுச்சேரி பகுதி தலைவர் அஹமது அலி கூறுகையில், "புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனாவால் இறப்போரின் சடலங்களைச் சரியாகப் பராமரித்து அடக்கம் செய்யும் வகையில் தருவார்கள். ஆனால், ஜிப்மரில் அவ்வாறு இல்லை.
நாங்கள் தன்னார்வலர்கள். நாங்கள் பாதுகாப்பு உடை அணிந்து காத்திருந்தாலும் சரியான முறையில் சடலத்தை இறுதிச் சடங்குக்கு ஜிப்மர் தருவதில்லை. சடலம் வைக்கப்பட்ட அறைக்கு நாங்களே சென்று சடலங்களின் அடையாளங்களை சரிபார்த்துதான் எடுக்க வேண்டியுள்ளது. சடலத்தில் ரத்தம் வடியும் சூழலும் பலமுறை நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்துப் பலமுறை புகார் கூறியும், அதிகாரிகள் எடுத்துச் சொல்லியும் ஜிப்மர் தரப்பின் செயல்பாட்டில் மாற்றமில்லை. புதுச்சேரி அரசுத் தரப்பில் இருந்து பல அதிகாரிகள் நேரடியாகவும் தெரிவித்துள்ளனர். ஜிப்மர் சடலத்தை ஒப்படைக்கும் அணுகுமுறையில் மாற்றம் தேவை" என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago