100 யூனிட் இலவச மின்சாரம் பற்றிப் பேசும் அதிமுகதான் 52% மின் கட்டணத்தை உயர்த்தியது: அமைச்சர் தங்கமணிக்கு துரைமுருகன் பதிலடி

By செய்திப்பிரிவு

மக்களின் பிரச்சினை குறித்துப் புரிந்துகொள்ளாத அபத்தமான அரசாக உள்ளது. திமுகவின் போராட்டத்திற்குப் பின்னால் உள்ள அப்பாவி மக்களின் மின் கட்டண உயர்வு என்ற பெருந்துயரத்தைப் போக்க முன்வாருங்கள். அதற்குப் பதிலாக மக்களின் சாபத்திற்கு உள்ளாகாதீர்கள் என்று அதிமுக அரசை துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கை:

''கரோனா பேரிடர் காலத்திற்கும் சாதாரண காலகட்டத்திற்கும் வேறுபாடு தெரியாமல் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு நடக்கிறது என்பதை “உள்ளங்கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை” என்பது போல் மின்துறை அமைச்சர் தங்கமணி தனது அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் மக்களை அடைத்து வைத்தது அரசுதான். வெளியில் போனால் அவர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலித்து - வாகனங்களைக் காவல் நிலையங்களில் காட்சிப் பொருட்களாகப் பறிமுதல் செய்ததும் அதிமுக அரசுதான். 1.50 லட்சம் பேருக்கு மேல் கரோனோ நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ரீடிங் எடுக்கும்போது - ஒரு சில நூறு பேருக்கு நோய்த்தொற்று இருந்த நேரத்தில் கூட ரீடிங் எடுக்காமல் இருந்தது அதிமுக அரசுதான்.

இப்படி அனைத்து தவறுகளையும் அதிமுக அரசே செய்துவிட்டு, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பிரதான எதிர்க்கட்சியான திமுக நடத்தவிருக்கும் மின் கட்டணத்திற்கு எதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தைக் கொச்சைப்படுத்துவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியே செல்ல முடியாத மக்களுக்கு வாழ்வாதாரத்திற்குத் தேவையான வருமானமும் இல்லை; சுயதொழிலும் இல்லை. சிறு தொழில்கள் - பெருந்தொழில்கள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன. இதுபோன்றதொரு சூழலில்தான் மகாராஷ்டிரா, கேரளம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு “கரோனா கால மின்கட்டணச் சலுகைகளை” வழங்கியுள்ளன. எளிய தவணையில் மின் கட்டணத்தைச் செலுத்த அனுமதித்துள்ளன. அவை கருணையுள்ள அரசுகளுக்கு இலக்கணமானவை.

ஆனால், மின்துறை அமைச்சருக்கும், முதல்வரும் ஆட்சியின் அடிப்படை இலக்கணம் புரியவில்லை. தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்பலாம்; ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை நிச்சயம் எழுப்ப முடியாது. அதுபோல்தான், இந்த இருவரும் மட்டுமல்ல; அதிமுக ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இருக்கிறார்கள். எங்கள் கட்சித் தலைவர் மிகத் தெளிவாக “மக்களுக்கு ஏற்பட்டுள்ள கரோனா கால மின் கட்டணச் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுங்கள்” என்றுதான் கேட்கிறார். இதில் என்ன குற்றம்? - எங்கிருந்து அரசியல் வருகிறது?

“வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு 100 யூனிட்டிற்கு ஏற்கெனவே கட்டணம் வசூலிப்பதில்லை” என்கிறார். இன்றைக்கு அப்பாவி மக்களை மிரட்டும் இவ்வளவு பெரிய மின் கட்டணத்தைக் கொண்டு வந்தது யார்? 2012-ம் ஆண்டிலும், 2014-ம் ஆண்டிலும் 52 சதவீத மின் கட்டணத்தை உயர்த்தியதே அதிமுக ஆட்சிதானே!

திமுக அறிவித்த மின் திட்டங்களை கடந்த 9 வருடங்களில் நிறைவேற்றாமல் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதில் மட்டுமே அக்கறை காட்டி மின் வாரியத்தை நிதி நெருக்கடியில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு - இன்னொரு முறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று இப்போது திட்டமிட்டுக் கொண்டிருப்பது யார்? அதுவும் அதிமுக ஆட்சிதானே.

அண்டை மாநிலங்களில் அளிக்கப்படும் கரோனா கால மின்கட்டணச் சலுகைகளைச் சுட்டிக்காட்டினால், அங்குள்ள மின் கட்டணம் தமிழகத்திற்கும் வேண்டும் என்று எங்கள் கட்சித் தலைவர் விரும்புகிறாரா என்று கேள்வி கேட்கிறார் அமைச்சர் தங்கமணி. நான் அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி, மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய ஒரு அமைச்சருக்கு இது அழகா? அந்த மாநில அரசுகள் வழங்கியிருப்பது கரோனா கால மின் கட்டணச் சலுகைகள். அதைக்கூட ஒப்புக்கொள்ள மறுத்து திசை திருப்பும் பாணியில் அறிக்கை விடுவது அபத்தமானது.

மின் அளவீடுகள் எப்படிச் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சரும் சொல்கிறார்; முதல்வரும் பேட்டியளிக்கிறார். எங்கள் கட்சித் தலைவர் கேட்கும் ஒரே கேள்வி, “முந்தைய மாதம் செலுத்திய மின் கட்டணத்திற்கான பணத்தைக் கழிக்கும் நீங்கள், ஏன் அந்த தொகைக்குரிய யூனிட்டைக் கழிக்கவில்லை?” என்பதுதான். அதற்கு அமைச்சர் தமிழ்நாடு மின்சாரச் சட்டத்தை மேற்கோள் காட்டுகிறார். அந்தச் சட்டத்திலேயே “மின் உபயோகிப்பாளர்களுக்கு நியாயமான கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும்” என்பதை ஏன் அமைச்சர் வசதியாக மறந்துவிட்டார்?

ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நேரத்தில் மக்களிடமிருந்து நியாயமான மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பது ஏன் அமைச்சருக்கும் புரியவில்லை; முதல்வருக்கும் புரியவில்லை. ஊரடங்கு கால மின் கட்டணச் சுமைதாங்கிகளாக மாறியிருக்கும் மக்களுக்கு எளிய தவணையில் மின் கட்டணத்தைச் செலுத்த அனுமதி கொடுங்கள் என்று எங்கள் கட்சித் தலைவர் கேட்டால் - அதைக்கூட செய்யத் தயங்குவது ஏன்?

மக்களின் குறைகளைத் தீர்க்க இவ்வளவு தயங்கும் அதிமுக அரசு, ஊரடங்கு கால டெண்டர்களில் மட்டும் கவனம் செலுத்துவது ஏன்? மக்களுக்காக, தேவையில்லாத டெண்டர்களை ஒத்திவைத்து, மின் கட்டணத்தைக் குறைக்காமல் அடம்பிடிப்பது ஏன்? ஏழை அழுத கண்ணீர் வீண் போகாது என்பதை அமைச்சர் உணர வேண்டும்; இந்த அரசும் உணர வேண்டும்.

“உயர் நீதிமன்றமே கூறிவிட்டது. அதனால் மின் கட்டணம் பற்றிக் கேள்வி கேட்கலாமா” என்று கேட்கும் அமைச்சரும், முதல்வரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். திமுக, உங்கள் அரசைப் பார்த்து மின் கட்டணத்தை குறைக்கச் சொல்கிறது. அதை நிறைவேற்ற முடியாமல் திசை திருப்ப நினைக்கும் அமைச்சருக்கு நான் நினைவுபடுத்துகிறேன். “விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்” என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஏன் இந்த அரசு உச்ச நீதிமன்றத்தில் சென்று தடை வாங்கியது?

“நெடுஞ்சாலைத்துறை ஊழல் புகாரை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்” என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அதிமுக அரசு உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கியது. அது என்ன ரகம்? அதுதான் சந்தர்ப்பவாத அரசியல்!

“மின் கட்டணச் சுமையைக் குறையுங்கள்” என்று அதிமுக அரசிடம் கோருவது மக்கள் நலன் சார்ந்த அரசியல். ஆகவே, எங்கள் கட்சித் தலைவர் கோரிக்கை விட்டிருப்பது போல், மின்கட்டணத்தைக் குறைத்து, எளிய தவணையில் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் கட்சித் தலைவரின் தொலைக்காட்சி உரையில் காட்டப்பட்ட மின் அட்டை “தொழில் மின் நுகர்வோர்” அட்டை என்று விளக்கமளித்து - அது வீட்டு மின் நுகர்வோர் அட்டை அல்ல என்று கூறியிருக்கிறார். வீட்டு மின் நுகர்வோர், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்குமே உள்ள மின் கட்டணப் பிரச்சினையை சரி செய்யுங்கள் என்றுதான் எங்கள் கட்சித் தலைவர் தொடக்கத்திலிருந்து கூறி வருகிறார்.

ஆக மொத்தம் ஊரடங்கு கால மின்கட்டணப் பிரச்சினை என்ன, பிரதான எதிர்க்கட்சி வைக்கும் கோரிக்கை என்ன என்பதையே அமைச்சர் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஒரு அறிக்கையைக் கொடுத்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது வருத்தமளிக்கிறது.

கரோனா பேரிடர் நிர்வாகம் பற்றி அமைச்சர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். அது “அத்திப்பழத்தை பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு” என்பது போல் இருக்கிறது. கரோனா பேரிடரை மோசமாக நிர்வகித்து - ஊரடங்குகளை பொறுப்பற்ற முறையில் பிறப்பித்து - நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல் “சமூகப் பரவல்” இருக்கிறதா என்பதைக் கூட இன்றளவும் தெரிந்துகொள்ள முடியாத படுதோல்வியை அதிமுக அரசு கரோனா நிர்வாகத்தில் சந்தித்துள்ளதை இன்று நாடே பார்த்து சிரிக்கிறது.

இறப்பு எண்ணிக்கையைக் குறைத்து கணக்கு காட்டுவதை - பிசிஆர் டெஸ்ட் கருவி வாங்கிய ஊழலை - கிருமிநாசினி மற்றும் கரோனா மருந்துகள் வாங்குவதில் நடைபெற்றுள்ள ஊழலைப் பார்த்து இன்று தமிழக மக்கள் சிரிக்கிறார்கள். கரோனா பேரிடர் நிர்வாகத்தில் “வாட்டர்லூ”-வைச் சந்தித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்காலத்து வாங்குவதை விடுத்து - ஊரடங்கு கால மின்கட்டணச் சலுகைகளை அறிவியுங்கள் - மக்களின் கோபத்தைத் தணியுங்கள் என்று அமைச்சர் தங்கமணியைக் கேட்டுக் கொள்கிறேன்.

திமுக மக்களுக்காகப் போராடுகிற இயக்கம் - அது இதுபோன்ற “கபட அறிக்கை”, “திசை திருப்பும் நாடகம்” போன்றவற்றை எல்லாம் பார்த்து வந்துள்ள இயக்கம். ஆகவே திமுகவின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திவிடலாம் என்று கனவு கண்டால் - அது பகல் கனவாகவே போகும்.

பிரதான எதிர்க்கட்சியின் போராட்டத்திற்குப் பின்னால் உள்ள அப்பாவி மக்களின் “மின்கட்டண உயர்வு” என்ற பெருந்துயரத்தைப் போக்க முன்வாருங்கள். அதற்குப் பதிலாக மக்களின் சாபத்திற்கு உள்ளாகாதீர்கள் என்று அமைச்சர் தங்கமணியை மட்டுமல்ல; முதல்வரையும் நான் எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்”.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்