கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும்போது அவர்களின் மத உணர்வுகள் மதிப்பளிக்கப்பட்டு, பாதிக்கப்படாமல், சடங்குகள் செய்ய அவகாசம் அளித்து, போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று பரவிய நேரத்தில் நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த புகழ்பெற்ற மருத்துவர் சைமன் கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது மத நம்பிக்கைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறைப் பகுதிக்கு உடலைப் புதைக்க ஆம்புலன்ஸில் மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்றபோது அங்குள்ளவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பின்னர் வேலங்காடு இடுகாட்டில் புதைக்கச் சென்றபோது ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஓட்டுநர்கள், உடன் சென்றோரை அக்கம் பக்கம் வசிக்கும் பொதுமக்கள் தாக்கினர். ஆம்புலன்ஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. பின்னர் போலீஸார் துணையுடன் நள்ளிரவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அகில இந்திய மருத்துவ கவுன்சில், மருத்துவர் சங்கங்கள் என இந்தியா முழுவதும் இத்தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பலை கிளம்பியது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
» ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் மூலம் அவதூறு பதிவு: காவல் ஆணையரிடம் ஆர்.எஸ்.பாரதி புகார்
வழக்கு விசாரணையில், கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு பின்பற்றக்கூடிய நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் என்ன என்பது குறித்துத் தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதாகவும், அதன் அடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், தமிழக டிஜிபி இது சம்பந்தமாக உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகர ஆணையர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சைமனின் மனைவி ஆனந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சைமன் இறந்த இரண்டு மணி நேரத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் அவசரம் காட்டியதாகவும், அடக்கத்தின்போது மதரீதியான சடங்குகளைச் செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும், மத்திய அரசின் விதிகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.
“கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது, மத்திய அரசின் விதிகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், மதரீதியிலான உணர்வுகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், இறுதிச்சடங்குகள் நடத்தப் போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், “இறுதிச்சடங்கின்போது, அசம்பாவிதச் சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க, காவல்துறையினருக்கு, அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தத் தகவலைப் பெறும் காவல்துறையினர் போதுமான அளவு போலீஸாரைப் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
15 hours ago