பொதுமுடக்கக் காலத்தில் மதுரை பாண்டி கோயில் எப்படியிருக்கிறது என்று அறிவதற்காகப் போயிருந்தேன். பாண்டி கோயிலில் நான் இறங்கியதும், நாய்கள் சூழ்ந்துகொண்டன. ஏதாவது உணவோ, பிஸ்கட்டோ தருவேனா என்று வாலாட்டியபடி என் கைகளையே உற்றுப் பார்த்தன. இன்னொரு பக்கம் இரவலர்கள். எல்லோர் கண்களிலும் பசி... பசி... பசி...
எப்படி இருந்த பாண்டி கோயில் இது?
சும்மா இறங்கி நடந்தாலே, வாங்கண்ணே என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கறி விருந்து சாப்பிட அழைக்கும் புண்ணியத் தலம் இது. நூற்றுக்கணக்கான ஆடுகளை வெட்டி, அன்னதானம் வழங்கும் இடம். ஆட்டுக்கறிதான் என்றாலும், வீடு, ஓட்டல் உணவில் இருந்து ரொம்பவே வித்தியாசப்படும் சுவை. ஈரல், கழுத்துக்கறி, குடல், நல்லி எலும்பு, நெஞ்செலும்பு எல்லாம் கலந்த ருசி, நம்மை வழக்கத்தைவிடக் கூடுதலாய்ச் சாப்பிட வைக்கும். அப்படியே நடந்து போனால், கை காயும் முன்பே இன்னொரு இடத்தில் மறுபடியும் விருந்து அழைப்பு வரும். அங்கேயும் கறி விருந்துதான் என்றாலும் வேறொரு ருசி, வேறொரு கைப்பக்குவம். இப்படி ஊர் உலகிற்கே பசியாற்றும் கோயிலில் பசியைப் பார்க்கப் பார்க்க, சங்கடம் வருகிறது.
பிரதான சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்தேன். வரிசையாக அத்தனை திருமண மண்டபங்கள், உணவகங்கள், பூமாலைக் கடைகள், தேங்காய் - பழக்கடைகள், பொம்மைக்கடைகள் அத்தனையும் பூட்டிக்கிடந்தன. அதில் ஒரு கடையில் 19.3.2020 என்ற தேதிக்குப் பிறகு கிழிக்கவே படாத காலண்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அது பாண்டி கோயில் மூடப்பட்ட நாள். பாண்டி கோயில் நடை சாத்தப்பட்டு, பூட்டு தொங்குகிறது. கேட்டில் தொங்குகிற சில மாலைகள், பாண்டி முனியைப் பார்க்க முடியாத ஏமாற்றத்தைச் சுமந்தபடி காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.
பாண்டி கோயில் நிலவரத்தைக் கேட்டறிவதற்காக ஆட்களைத் தேடினேன். கோயில் அருகே ஆட்களே தென்படவில்லை. கொஞ்சம் தள்ளி, தன் தோட்டத்திற்குள் ’மந்திரம் காத்த மகாமுனீஸ்வரர்’ என்ற பெயரில் தனிக்கோயில் வைத்திருக்கும் பூசாரி பொன்.மணிகண்டன் சிக்கினார்.
"நித்தமும் திருவிழாவும், அன்னதானமுமா இருந்த பாண்டி கோயில் எப்படி வெறிச்சோடிக் கிடக்கு பார்த்தீங்கள்ல... எளிய மக்களோட சாமி இது. நேரே கருவறைக்கே போயி, ‘யப்பா எங்களால முடியல, ரொம்ப சோதிக்காத... உன் புள்ளைய நீதானய்யா காப்பாத்தணும்’னு உரிமையா வேண்டிக்குவாங்க.
கேட்டதெல்லாம் தர்றவரு முனீஸ்வரர் அய்யா. நினைச்ச காரியம் நடந்துச்சுன்னா சுருட்டு, பொங்கல், கோழி, ஆடுன்னு அவங்கங்க தகுதிக்கு ஏத்தாப்ல நேமிதம் செஞ்சிட்டுப் போவாங்க. அறுக்கிற ஆட்டை அங்கேயே சமைச்சுச் சாப்பிடணும், வீட்டுக்கு எடுத்திட்டுப் போகக்கூடாதுங்கிறதால பார்க்கிற எல்லாருக்கும் சாப்பாடு கொடுப்பாங்க. ரத்தப்பலி கொடுக்காத நாளே கெடையாது.
வெள்ளி, செவ்வாய்க் கிழமைகள்ல 300 ஆடு, ஞாயிற்றுக்கிழமைன்னா 500 ஆடுகளைப் பலி கொடுப்பாங்க. சேவல் பலி இன்னும் அதிகம். இதெல்லாம் கோயில்ல வெட்டுறது. மண்டபத்துல விருந்துக்காக அறுக்கிற ஆடுக இந்தக் கணக்குல சேராது. இந்தக் கோயிலை நம்பி, விறகு விற்கிறவங்க, ஆடு உரிக்கிறவங்க, சமையல்காரங்க, பாத்திரம் வாடகைக்கு விடுறவங்க, பாத்திரம் கழுவுறவங்கன்னு பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சாமியாருங்க, பிச்சைக்காரங்க, வாயில்லா ஜீவன்கன்னு தினமும் ஆயிரக்கணக்கானவங்க பசியைப் போக்கும் இடம், இப்பப் பசியோட நிற்குது.
இங்க வர்ற பக்தர்கள் கிராமத்து ஜனங்க. அவங்கள தனிமனித இடைவெளி, அது இதுன்னு கட்டுப்படுத்துறது சிரமம்தான். அதனால கோயிலைத் திறக்க அனுமதியில்லைன்னு அரசு சொல்றது சரி. ஆனா, நாலஞ்சு பேரு வந்து முடி காணிக்கை செலுத்தவும், காது குத்தவும், ஓரமா உட்கார்ந்து சமைச்சிச் சாப்பிடவும் தடை விதிக்கிறது நியாயமா? அவங்களையும் போலீஸ் வெரட்டியடிக்கிறது நல்லதுக்கில்ல. பாவம் ஜனங்க, நேர்த்திக்கடனா வளர்த்த முடி, ஜடாமுடி மாதிரி வளந்துபோச்சுன்னு வருத்தப்படுறாங்க" என்றார் மணிகண்டன்.
கல்யாண மண்டபம் வைத்திருக்கும் எம்.நாகராஜ், "கோயிலைச் சுத்தி ஒண்ணு ரெண்டுல்ல, 160 கல்யாண மண்டபம் இருக்கு. எந்த மண்டபமும் சும்மா கிடந்து பார்த்ததேயில்ல. இன்னும் 50 மண்டபம் கட்டுனாலும் ஓடும்னு சொல்ற அளவுக்குக் கல்யாணமும், காது குத்தும் களை கட்டும். ஆனா, தொடர்ந்து 4 மாசமாக் கோயில் திறக்காததால மண்டபம் பூராம் பாழடைஞ்சி கிடக்குது. கரன்ட் பில் கட்டக்கூட வழியில்ல. வாட்ச்மேன் உள்பட அத்தனை பேருக்கும் வேல போச்சு. நான் மண்டபத்து பக்கத்துலேயே வீடும், பலசரக்குக் கடையும் வெச்சிருக்கேன். கடைக்கும் யாரும் வர்றதில்ல. ஏதோ பொழுதுபோக்குக்குக் கடையில உட்கார்ந்திருக்கேன்" என்றார்.
மேலமடை, கருப்பாயூரணி, சீமான்நகர், பாண்டியன்நகர், உத்தங்குடி என்று சுற்றுவட்டாரப் பகுதிகளில் பசி என்று சொல்ல ஆள் கிடையாது. பொடிநடையாகக் கோயிலுக்கு வந்துவிட்டால் போதும், மற்றதை முனீஸ்வரன் பாத்துக்கொள்வார். இப்போது அவர்கள் நிலையும் பரிதாபம்.
அவர்களில் ஒருவரான முத்துப்பாண்டி, "எனக்கு, பக்கத்துல சீமான் நகர்லதான் வீடு. நானும் பாண்டி கோயிலை அண்டிப் பிழைக்கிற ஆளுதான். கருப்பாயூரணி கல்மேட்டுல இருந்து நரிக்குறவர்கள், சாட்டையடிக்கிறவங்கன்னு ஒரு 50 குடும்பம் கோயிலை நம்பிப் பிழைச்சுது. இப்ப இங்கேயே பசி வந்திடுச்சி. முத ரெண்டு மாசம் இங்கயிருக்கிற சாமியார்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் நிறைய பேரு சாப்பாட்டுப் பொட்டலம் கொடுத்தாங்க.
இப்ப அவங்ககிட்டேயே காசில்ல போல, யாரும் வர்றதில்ல. பாண்டி கோயில்ல தினமும் கறி விருந்து நடக்குங்கிறதால, 300 நாய்களுக்கு மேல இருந்துச்சி. அதுல பாதி பசி பொறுக்காம மதுரை ஊருக்குள்ள ஓடிடுச்சி. சிலது செத்துப்போச்சு. மிச்சம் இருக்கிற நாய்களுக்கு, 'நன்றி மறவேல்'னு ஒரு அமைப்பு சார்புல தினமும் சாப்பாடு போடுறாங்க" என்றார்.
வழக்கமாய் ஞாயிற்றுக்கிழமையும், ஆடி அமாவாசை மாதிரியான விசேஷ நாட்களிலும் பாண்டி கோயிலை நெருங்கவே முடியாதபடி கூட்டம் கும்மும். சாலையில் நடக்க இடமிருக்காது. இப்போது அந்தச் சாலையே வெறிச்சோடிக் கிடக்கிறது.
இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி முனீஸ்வரா? என்று பக்தர்களும், பசியோடு இருப்பவர்களும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பாண்டி கோயிலை!
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago