பெரும்பான்மை இந்து மக்களுக்கு விரோதி என திமுகவைச் சித்தரிக்கிறவர்கள் நடைமுறையில் பெரும்பான்மை இந்து மக்களான ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கிறார்கள். ஆனால், திமுக ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டைப் பெற நீதிமன்றத்திலும் வெளியிலும் போராடுகிறது. இதுதான் நடைமுறை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:
“ஜனநாயக அறப்போர்க் களத்தில் மக்கள் நலன் காப்பதற்காக மட்டுமின்றி, ஜனநாயகத்தையே காக்க வேண்டிய வகையில் நாம் ஆற்றவேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அன்றாடம் ஒவ்வொன்றாகப் பறிக்க முயலும் மத்திய அரசு, அந்த உரிமைகள் குறித்து உணர்வேதும் இன்றி, அடிமைத்தனத்தாலேயே ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் மாநில அரசு என இருபுறத் தாக்குதலில் தவிக்கும் நம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை ஒருங்கிணைத்து, உரிமைப் போரைத் தொடர்ந்திட வேண்டிய உயரிய கடமை திமுகவுக்கு இருக்கிறது.
அதனை வெற்றிகரமாகச் செய்யும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு என்பதைப் பல களங்களில் நிரூபித்திருக்கிறோம். இதனை நம்மைவிட நம் அரசியல் எதிரிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மேற்கொண்ட ஒருங்கிணைப்பு முயற்சியும் அதனால் கிடைத்த வெற்றியும், தமிழ்நாட்டை நோக்கி இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையையும் திரும்பிடச் செய்தது.
» பள்ளிகளைத் திறப்பதில் ஏன் அவசரம்?- மாநில அரசுகள் தீர்மானிக்க விட்டுவிடுங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்
» உடன்பிறப்புகள் கரோனா தொற்றால் பாதிக்கப்படும்போது நெஞ்சம் பதறுகிறது: ஸ்டாலின் வேதனை
இதனை உரக்கச் சொல்ல ஊடகங்கள் தயங்கலாம். ஆனால், உண்மை என்ன என்பதை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் தெளிவாகவே அறிந்திருக்கிறார்கள். திமுகவின் செல்வாக்கு, மக்களுக்காக அது சந்திக்கின்ற களங்கள், மக்கள் அதன் மீது வைத்திருக்கிற நம்பிக்கை இவையனைத்தும் நாளுக்கு நாள் பெருகி வருவதை ஆட்சியாளர்கள் அறிவார்கள். உளவுத்துறையினர் அதற்காகத்தானே இருக்கிறார்கள்.
ஜனநாயகத்தில் மக்களின் நம்பிக்கையை ஓர் இயக்கம் பெறுவதும், அதனைத் தக்கவைத்துக் கொள்வதும் சாதாரணமானதல்ல. இயக்கத்தின் கொள்கை, தலைமை, நோக்கம், செயல்பாடு, வழிமுறை என அனைத்தும் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்போதுதான் மக்களின் நம்பிக்கையும் உறுதியாக இருக்கும். திமுக அத்தகைய வலிமையோடு இருப்பதால், அதனைத் தகர்ப்பதற்கு எத்தகைய திசை திருப்பல்களைச் செய்யலாம் எனத் திட்டமிடுகிற அவர்கள், நம் அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, நம் பண்பாட்டின் நிரந்தரப் பகைவர்கள்.
திமுகவின் மீது அவதூறுகளை அள்ளி வீசி, கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி, இல்லாத காரணங்களை முன்வைத்து, பொல்லாத பழிகளைச் சுமத்தி நம்மை வீழ்த்திடலாம் என பகல் கனவு காண்கிறார்கள். இன்று - நேற்றல்ல; நூற்றாண்டு கடந்து வீறுநடைபோடும் திராவிட இயக்கம் தனது தொடக்கக் காலத்திலிருந்தே இத்தகையச் சதிகளை முறியடித்து வென்றிருக்கிறது. திமுக எனும் அரசியல் பேரியக்கம் எத்தனையோ பழிகளை - சதிகளை - அவதூறுகளை எதிர்கொண்டு தகர்த்து தவிடுபொடியாக்கி தனது இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தந்தை பெரியார் முன்வைத்த சமூக நீதி - சுயமரியாதைக் கொள்கையை தேர்தல் ஜனநாயக அரசியல் வழியில் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்துவதே அண்ணா கண்ட திமுகவின் செயல்பாடாகும். இதில் எந்த மதத்தின் மீதும் திமுகவிற்கு வெறுப்பு கிடையாது. பல மதத்தினரும் திமுகவில் அங்கம் வகிக்கிறார்கள், தம் மதம் - சாதி மறந்து யாருக்கும் சாதிப் பகை வளர்த்திடும் சகுனித்தனம் கூடாது.
எவரது நம்பிக்கையிலும் பழக்கவழக்கங்களிலும் குறுக்கிடுவதில்லை. அவரவர் உரிமைகள் நிலைநாட்டப்படும் என அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் குரல் உயர்த்தி - ஆதிக்க சக்திகளுக்கு எதிரான சமரசமற்ற போராட்டம்தான் இந்தப் பேரியக்கத்தின் லட்சியப் பாதை.
ஆதிக்கம் என்பது பல நிலைகளைக் கொண்டது. அத்தனை நிலைகளுக்குள்ளும் ஊடறுத்து, ஒடுக்கப்படுகிற - அடக்கப்படுகிற - ஓரங்கட்டப்படுகிற மக்களின் பக்கம் நின்று அறப்போராட்டங்களை நடத்தி, ஆட்சி செய்கிற வாய்ப்பு அமைந்தபோது சட்டதிட்டங்களை வகுத்து உரிமைகளை மீட்டுத் தந்ததே திமுகவின் வரலாறு.
அதன்விளைவாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் முதல் தலைமுறை பட்டதாரி, தொழிற்கல்வி பயிலும் வாய்ப்பு பெற்ற மருத்துவர்கள் - பொறியாளர்கள், சொத்துரிமை பெற்ற பெண்கள், திருமண உதவித் திட்டத்தால் பயனடைந்த மகளிர், அரசுப் பணிகளில் வேலை பெற்றோர், பஸ் பாஸ் கிடைக்கப்பெற்று கல்வி பெற்ற இளைஞர்கள், இலவச மின்சாரத்தால் வாழ்வு செழித்த விவசாயிகள், வரிச்சுமை குறைக்கப்பட்ட வணிகர்கள், புதிய தொழில் தொடங்கிய தொழில் முனைவோர்கள்.
ஒழுகும் குடிசையிலிருந்து கான்க்ரீட் வீட்டுக்கு மாறிய ஏழை - எளிய மக்கள், நல வாரியங்களால் பலன் பெற்ற அமைப்பு சாரா தொழில் செய்யும் பாட்டாளிகள், தங்களுக்கான உரிமைகள் பெற்ற மாற்றுத் திறனாளிகள், சமூக அங்கீகாரம் பெற்ற திருநங்கையர், மதநல்லிணக்கம் போற்றிய சிறுபான்மையினர் என அனைத்து மக்களுக்கும் பயன் விளைவித்த இயக்கமாக திமுக இருக்கிறது.
69% விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது சமூகநீதிக் கோட்பாட்டினை நிலைபெறச் செய்வதற்கான பெருமுயற்சி. அதில் 3.5 விழுக்காடு என்பது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு உரியது என்றால், மீதமுள்ள 65.5 விழுக்காடு மொத்தமும் பெரும்பான்மை மதமான இந்து மதத்தைச் சேர்ந்த சகோதர - சகோதரிகளின் வாழ்வு மலரவும் உயரவும் காரணமாக அமைந்தது.
இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் பட்டதாரிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் உருவாகியிருக்கிறார்கள் என்றால், பலதுறைகளில் அவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்குத் துணை நின்று வழியமைத்துத் தந்த இயக்கம் திமுக
திருவாரூர் கோவில் தேரோட்டம், மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளம் தூர்வாருதல் எனத் தொடங்கி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலின் திருப்பணியிலும் கவனம் செலுத்தி, கவனிப்பாரற்று இருந்த கோவில்களிலும் ஒரு காலப் பூசையேனும் நடந்திட வழிவகுத்தது தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி.
கிராமப்பூசாரிகள் நலனுக்காக வாரியம் அமைக்கப்பட்டது. தமிழ் வழிபாட்டு முறைக்கு முன்னுரிமை தரப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்டவன் சன்னதியில் அனைவரும் சமம் என்கிற அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இப்படி எடுத்துச் சொல்ல எத்தனையோ இருக்கின்ற நிலையில், நம்மை நோக்கி ‘இந்து விரோதிகள்’ என்று விமர்சனத்தை வைத்து, வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என அரதப்பழசான சிந்தனையை புதிய தொழில்நுட்பங்களின் வழியே புத்தம் புதிய காப்பியாக ரிலீஸ் செய்து பார்க்கிறார்கள்.
பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பும் இத்தகைய சதிவேலைகளைச் செய்தபடியே, பெரும்பான்மை இந்து மக்களின் எதிர்கால வெளிச்சத்தை இருட்டாக்கிடும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்திடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
அதனால் பாதிக்கப்படும் பெரும்பான்மை இந்து மக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற இயக்கம்தான் திமுக.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்துக்கள் - கிறிஸ்தவர்கள் என எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைத்திடப் போராடுகிறது நமது இயக்கம். அதில் உயிர் பறிக்கப்பட்ட இந்துக்களைக் கொச்சைப்படுத்தியவர்கள்தான் நம்மை இந்து விரோதி என்று திசை திருப்பிடப் பார்க்கிறார்கள்.
எங்கோ - எதுவோ ஒன்று நடந்தாலும் அதனைத் தொடர்புபடுத்தி திமுக மீது பழிசுமத்திட சில அரைவேக்காடுகளை ஆள்பிடித்து வைத்திருக்கிறார்கள். மாநிலத்தை ஆளும் அடிமை ஆட்சியாளர்கள், திமுகவை தமிழர்களின் எதிரியாக சித்தரிக்க நினைக்கும் திடீர் அரசியல் நகைச்சுவையாளர்கள் என அவர்களின் கூட்டத்தில் எடுபிடிகள் ஏவல்செய்வோர் ஏராளமாக இருக்கிறார்கள்.
இந்தச் சமூக வலைதள யுகத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் கருத்துகள் எளிதில் சென்று சேர்வதால் அதனைக் கவனிக்கக்கூடிய திமுகவினர் சிலர் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றும் போக்கு தெரிகிறது. அதனைக் கைவிடுங்கள். நகைச்சுவைத் துணுக்குகளாக நினைத்துப் புறந்தள்ளுங்கள்.
சேற்றில் ஊறி எழுந்து வந்த பன்றி தன் உடலைச் சிலுப்புகிறதே என்று, ஆற்றில் நீராடிவிட்டு வருகிற நாமும் பதிலுக்கு அதன்முன் சிலுப்பிக் கொண்டிருக்கக்கூடாது. மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் நலனுக்காவும் பாடுபடவேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. சதிகாரர்களின் சமூக வலைதள வலைகளில் சிக்கி உங்கள் நேரத்தை வீணடித்திட வேண்டியதில்லை. அதனை உரிய முறையில் தலைமைக் கழகம் கவனித்துக் கொள்ளும்.
நீங்கள் செய்ய வேண்டிய பணி, தமிழ்மொழி - தமிழ் இனம் - தமிழ் நிலம் - தமிழர் நலம் இவற்றிற்காக நம் உயிர் நிகர் தலைவர் கலைஞரின் 80 ஆண்டுகால பொதுவாழ்வுப் போராட்டங்களாலும் ஆட்சித்திறனாலும் ஏற்பட்ட மறுமலர்ச்சியையும் அதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அடைந்த பலன்களையும் அதன்விளைவாக ஏற்பட்ட மாற்றங்களையும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று அவர்களின் மனதில் பதிய வைப்பதுதான். அதனைச் சளைக்காமல் மேற்கொள்ளுங்கள்.
மத்திய - மாநில ஆட்சியாளர்களால் அன்றாடம் அவதியுறும் மக்களின் நலன் காப்பதே திமுக எனும் பேரியக்கத்தின் கடமை. இந்தக் கரோனா காலத்திலும் முடங்கிக் கிடந்திடாமல் பொதுமக்களின் துயர் துடைத்த கரங்கள் திமுகவினரின் கரங்கள். அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிபோய்க் கொண்டிருக்கிற இந்த அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காலத்தில், கல்வியை - வேலைவாய்ப்பை - வேளாண் நிலங்களை - தொழில்துறையை - வணிகர் நலனை - மாநில உரிமைகளை - மக்களின் கருத்துரிமையை - ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாத்திட வேண்டிய அறப்போர்க் களத்தைக் கட்டியமைப்போம்; அக்கப்போர்க் களங்களைப் புறக்கணிப்போம்.
நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் திமுகவிற்கு பெரும் வெற்றியைத் தந்த தமிழக மக்கள் எதிர்பார்ப்பது ஆட்சி மாற்றத்தை, அதனை ஜனநாயக வழியிலான தேர்தல் வாயிலாக நிறைவேற்றிட வேண்டும் என்பதில் திமுக தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறது.
மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள மாபெரும் இயக்கமான திமுகவின் வெற்றியைத் தடுத்திட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் சமூக வலைதளங்களிலும் பிற வழிகளிலும் திசைதிருப்பும் சதிவேலைகள் தொடர்கின்றன. அவற்றிற்கு மயங்கிடாமல், நம் இலக்கு நோக்கித் தெளிவான - திடமான பயணத்தை மேற்கொள்வோம்.
அதற்கேற்ப, இந்தக் கரோனா காலத்தில் ஒவ்வொரு உடன்பிறப்பும் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்தி, குடும்பத்தினரின் நலனில் கவனம் செலுத்தி, பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து, பொதுப்பணியாற்றிட களத்திற்கு வாருங்கள்.
கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவனான நான் மேற்கொண்டுள்ள உறுதி என்பது, ஜனநாயக வழியில் மீண்டும் திமுக ஆட்சியை அமைத்து, இந்தப் பேரியக்கத்தை உருவாக்கிய அண்ணா அருகில் ஓய்வு கொண்டிருக்கும் தலைவர் கலைஞருக்குக் காணிக்கையாக்கிட வேண்டும் என்பதுதான்.
தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் ஒத்துழைப்பே, கனிந்து வரும் வெற்றியைக் கைகளுக்குக் கொண்டுவந்து சேர்த்திடும். அதனைத் தட்டிப் பறித்திடத் திட்டமிட்டு, திசைதிருப்பும் நாடகங்களில் மயங்காது, அவற்றைப் புறந்தள்ளி, ஜனநாயகக் களத்தில் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் வகையில் அயராது உழைத்திடுவோம். கழகத்திற்கு மக்கள் அளிக்கும் மகத்தான வெற்றியை, தலைவர் கலைஞருக்குக் காணிக்கையாக்கிடுவோம்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago