மின்கட்டணச் சலுகை கொடுக்க தமிழக அரசுக்கு மனமில்லையா? கஜானா காலியாக இருக்கிறதா? - ஸ்டாலின் கேள்வி

By செய்திப்பிரிவு

மின்கட்டணச் சலுகை கொடுக்க தமிழக அரசுக்கு மனமில்லையா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 19) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொலி காட்சியில் பேசியதாவது:

"ஒருபக்கம் கரோனா வாட்டி வருகிறது என்றால், இன்னொரு பக்கம் மக்களை முதல்வர் பழனிசாமி வாட்டி வதைக்கிறார். கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டுக்கும் வந்திருக்கின்ற மின்கட்டணத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மின் கட்டணத்தைப் பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது.

இன்றைக்கு நாடு எந்த நிலைமையில் இருக்கிறது என்று நான் சொல்ல வேண்டியதில்லை; உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும்தான் தெரியவில்லை. கரோனா நாளுக்கு நாள் அதிகமாகப் பரவி வரும் போது ஊரடங்கைத் தளர்த்தினார்கள்; மதுக்கடைகளைத் திறந்தார்கள்; பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்துவேன் என்று சொன்னார்கள். இவ்வளவையும் செய்தவர்கள் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தார்களா என்றால் இல்லை!

மார்ச் 25-ம் தேதியிலிருந்து மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். மத்திய தர வர்க்கத்தினர், ஏழை - எளிய குடும்பங்கள், சிறு, குறு தொழில் செய்கிறவர்கள் யாருக்கும் வேலை இல்லை; வருமானம் இல்லை; தொழில் இல்லை; வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள்!

அவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் கொடுங்கள் என்று மூன்று மாதமாகச் சொல்கிறேன். என்னுடைய எல்லா அறிக்கைகளிலும் சொன்னேன். முதல்வர் கேட்கவுமில்லை; செய்யவும் இல்லை; மக்களுக்குத் தரவும் இல்லை!

இந்தச் சலுகை எல்லாம் தராத முதல்வர் மக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்வதில் மட்டும் மும்முரமாக இருக்கின்றார். மின்கட்டணம் செலுத்துவதற்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களுக்கு ஜூலை 30-ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். அரசு நிகழ்காலத்தில் செயல்பட வேண்டும். அரசின் அலட்சியப் போக்கால் இன்று பிற மாவட்டங்களிலும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். அதுமட்டுமின்றி, ஊரடங்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும்தான் போடப்பட்டது. மாநிலத்தில் உள்ள அனைவரும்தான் வாழ்வியல் இழந்து தவித்து வருகின்றனர். ஜூலை 30-ம் தேதிக்கு மேல் மக்களிடம் பணப்புழக்கம் வந்துவிடுமா?

ரீடிங் எடுத்ததிலும் பல்வேறு குளறுபடிகள்.

சில உதாரணங்களை மட்டும் காட்டுகிறேன். சிலருடைய மின்கட்டண அட்டைகள் என்னிடம் இருக்கிறது. ஏன் இவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்று கேட்டால், அரசாங்கம் என்ன சொல்கிறது தெரியுமா?' 'நீங்கள் எல்லோரும் வீட்டில் இருக்கிறீர்கள். அதனால் மின்சாரம் அதிகமாக செலவு ஆகி இருக்கும்' என்று சொல்கிறார்கள். வீட்டில் இருந்ததற்கு அரசாங்கம் போடுகின்ற அபராதத் தொகையாக இது? இல்லையென்றால், தண்டனையா? வீட்டில் இருந்தது தவறா?

மின் பயன்பாடு என்பது பயன்படுத்துவதைப் பொறுத்து கூடும் குறையும். இது மக்களுக்கும் தெரியும். ஆனால், இப்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் வந்திருக்கின்ற கட்டணம் அநியாயத்திற்கு அதிகமாக இருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். இதுதான் பெரும்பாலான குடும்பங்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இது எல்லாவற்றுக்கும் பழனிசாமியின் ஆட்சிதான் காரணம். முதல் நாளிலிருந்து சரிவர நோய்த்தொற்றைக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் உங்களுக்குள் அரசியல் செய்துகொண்டு முன்னுக்குப் பின் முரணாக உத்தரவுகளை மாற்றிக் கொண்டே வருகிறீர்கள். பின்னர், 'மக்கள் பொறுப்பாக இல்லை. வெளியில் சுற்றுகிறார்கள்' என்று அவர்கள் மேலே பழியைப் போட்டீர்கள்.

இப்போது மறுபடியும் மக்கள் வீட்டில் இருந்தார்கள் என்று குற்றம் சொல்கிறீர்கள். எப்போதுதான் ஆட்சியாளர்களிடம் தெளிவு வருமோ என்று தெரியவில்லை? 'தவறான அடிப்படையில் மின்சார 'ரீடிங்' எடுத்திருக்கிறார்கள்' என்று மக்கள் சொல்கிறார்கள். இரண்டு மாதத்துக்குச் சேர்த்து எடுக்கும்போது 'ஸ்லாப்' மாறும். 'ஸ்லாப்' மாறினால் கட்டணமும் எகிறும். இது மின்சார வாரியத்துக்கு லாபமாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எவ்வளவு பெரிய பளு என்பது சாதாரண மக்களைக் கேட்டால் தான் தெரியும்.

சாதாரண நேரம் இல்லை இது; கரோனா காலம்! எல்லா விதத்திலும் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள். இதில் பழனிசாமி அரசாங்கமும் தன் பங்குக்கு மக்களை வதைக்கிறது. மின்சாரம் என்பது மக்களது மிக மிக அவசியத்தேவை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தான் மின்சார வாரியமே இயங்குகிறது.

நுகர்வோருக்கு நியாயமான மின்கட்டணத்தை வழங்குவது மிக முக்கியம் என்று மின்சாரச் சட்டத்திலேயே இருக்கிறது. இப்போது பழனிசாமி அரசாங்கம் விதித்த கட்டணம் நியாயமான கட்டணம் அல்ல; அநியாயமான கட்டணம்!

சரியாக சொல்லவேண்டும் என்றால், இந்த மாதிரியான பேரழிவு காலத்தில்தான் மக்களுக்கு தங்களால் முடிந்த சலுகையாக கட்டணச் சலுகையை அரசாங்கம் கொடுக்க வேண்டும். ஆனால், கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

கேரள மாநிலத்தில் கட்டணச் சலுகை கொடுத்து இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் கட்டணச் சலுகை கொடுத்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் கட்டணச் சலுகை கொடுத்திருக்கிறார்கள். இந்த மாநில அரசுகளால் முடிகிறது; தமிழக அரசால் ஏன் முடியவில்லை?

பணம் இல்லையா? நிதி நிலைமை சரியில்லையா? கஜானா காலியாக இருக்கிறதா? எது உண்மை? அதைச் சொல்லுங்கள்! நிதி நிலைமை சரியாக இருக்கிறது என்றால், மக்களுக்குச் சலுகை தருவதற்கு மனமில்லையா?மக்களைக் காப்பாற்றுவது தானே அரசு!

இதுவரை நாங்கள் சொன்ன மக்களைக் காப்பாற்றுவதற்கான எந்த ஆலோசனைகளையும் கேட்கவில்லை. ஏனென்றால், மக்களைக் காப்பாற்றும் உண்மையான எண்ணம் இல்லை. அதுதான் உண்மை! கரோனா பரவும் முன் தடுக்கும் முன்யோசனையும் இல்லை; கரோனா பரவாமல் தடுக்கும் ஆக்கப்பூர்வமான எண்ணமும் இல்லை! வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்கும் இரக்க குணமும் இல்லை!

கரோனா காலத்திலும் கொள்ளையடிக்கும் சுயநலம் மட்டும்தான் இன்றைய முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் இருக்கிறது. மக்கள் தங்களைத் தாங்களே நொந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களின் குரலைக் கோட்டைக்குச் சொல்வதற்காகத்தான் வரும் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை கறுப்புக்கொடி தாங்கி கண்டன முழக்கத்தை எழுப்பப் போகிறோம்

நான்கைந்து பேர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசங்களுடன் முழக்கங்களை எழுப்புவோம்! மக்கள் மனங்களை மதிக்காமல் கோட்டையில் பதுங்கியிருக்கும் முதல்வரைப் பணிய வைப்போம்; பணி முடிப்போம்"

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்