விருத்தாசலத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்த கவியரசு, கரோனா தொற்று சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 18) இரவு உயிரிழந்தார். வட்டாட்சியர் என்ற அதிகார தோரணை இல்லாமல் மக்களிடம் சகஜமாகப் பழகியவர் கவியரசு.
அவரது இறப்பு, வருவாய்த்துறை அதிகாரிகள் மட்டத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது குறித்து நம்மிடம் பேசிய பத்திரிகைப் புகைப்படக் கலைஞர் ரெங்கப்பிள்ளை, "பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என்று யாராக இருந்தாலும் 'அண்ணே' என்றழைத்து உரிமையுடன் பழகக்கூடியவர் கவியரசு. அவரைப் போன்ற ஒரு அதிகாரியைப் பார்ப்பதே அரிது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக நேரில் சென்று அப்போதைக்கு அப்போதே தீர்த்து வைத்துவிடுவார். களப்பணியே அவரது மூச்சாக இருந்தது. அதன் விளைவாகவே மரணத்தையும் தழுவியிருக்கிறார்" என்றார்.
பணியில் இருந்த காலத்தில் பம்பரமாகச் சுழன்று பணியாற்றியவர், இயற்கையின் மீதும், வரலாற்றின் மீதும் தீராத காதல் கொண்டவர், மக்கள் பணிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் என்று கவியரசுவைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். கரோனா தொற்றுப் பரவல் ஆரம்பத்தில் இருந்து அவரது பணிக்கு காலநேரமெல்லாம் இல்லை. கடுமையாக பணியாற்றிக் கொண்டிருந்தவர்.
விருத்தாசலத்தில் பணியாற்றிய இரண்டு வருடங்களில் வரலாற்றை கண்டறியவும், மீட்டெடுக்கவும் அவர் அரும்பாடுபட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட நடுகற்கள், கொற்றவை சிலைகள், பண்டைக்கால வழிபாட்டு உருவங்கள், சோழர்கால, பல்லவர்கால வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டிருக்கிறார். அவை குறித்த தேடலில் அதிக அக்கறை காட்டியவர் கவியரசு என்கிறார்கள்.
» அரியலூர் மாவட்டத்தில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு கரோனா தொற்று
விருத்தாசலம் பகுதியில் வாழ்ந்த, வாழ்கின்ற ஜமீன் வாரிசுகளைத் தேடிப்போய் சந்தித்து அவர்களைப் பற்றிய விவரங்களை எல்லாம் வெளியுலகுக்கு பகிர்ந்தவர் கவியரசு. பண்டைக்கால போர்க் கருவிகளை கண்டு வியந்து அவற்றையும் ஆவணப்படுத்தியவர். கரோனா நோயாளிகளை இனம் கண்டு கொள்வது, அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது, அவர்களோடு தொடர்பு கொண்டவர்களை தனிமை முகாமுக்கு அனுப்புவது என்று பம்பரமாக சுற்றிவந்தவருக்கு அதுவே சிக்கலாகி விட்டது.
கடந்த பத்து நாட்களுக்கு முன் லேசான சளி, காய்ச்சல் வந்ததால் தன்னைப் பரிசோதித்துக் கொண்டார் கவியரசு. ஜூலை 10-ம் தேதி அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அன்றே சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்று மாலை வரையிலும் அலுவல் சார்ந்த தனது பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். இரவு மருத்துவமனையில் இருந்தபோது தனது முகநூலில் மிகுந்த நம்பிக்கையோடு மக்களுக்கு இந்த செய்தியைச் சொன்னார்.
'அன்புக்கும் பாசத்திற்கும் உரிய விருதை வட்ட வாழ் பெருங்குடி மக்களே. என் மேல் எப்போதும் பாசமழை பொழியும் ஊடக நண்பர்களே. எப்போதும் அன்பு பாராட்டும் காவல் அலுவலர்களே. எனது இரண்டாண்டு வருவாய் வட்டாட்சியர் பணியில் உடன் பயணித்த எனது பாசமிக்க கிராம நிர்வாக அலுவர்களே. அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களே. வருவாய ஆய்வாளர்களே. கிராம உதவியாளர்களே. உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை சிரம் தாழ்த்தி சமர்ப்பித்துக் கொள்கின்றேன்.
கோவிட் - 19 அறிகுறிகள் காரணமாக தற்போது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியில் இருந்து விலகி விடைபெறுகின்றேன். சிறப்பு நன்றிகள், எனது ஈப்பு ஓட்டுநர் பாலு ஒரு சகோதரனைப்போல இதுகாறும் எனை பாதுகாத்தாய். மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கவியரசு'
இப்படி பதிவிட்டு தற்காலிகமாக விலகி விடைபெறுகிறேன் என்று மருத்துவமனைக்குச் சென்றவர் இப்போது நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார். தனது ஒரே மகள் ஆரத்யா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். மனைவியும் மகளும் சொந்த ஊரான விழுப்புரத்தில்தான் இருந்தார்கள். கரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும் அவர்களை கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு இவர் மட்டும் விருத்தாசலத்தில் வட்டாட்சியர் இல்லத்திலேயே தங்கியிருந்தார்.
கடந்த மார்ச் 27-ம் தேதி மகளுக்கு முகநூலில் அவர் எழுதியிருந்த வரிகளில் மகள் மீதான அவரின் உயர்ந்த அன்பு வெளிப்படுகிறது. என் அன்பு மகளே... உனை நேரில் காணும் நாள் எந்நாளோ அந்நாளே என் வாழ்வின் பொன்னாள்' என்று எழுதியவர் தன் ஆசைமகளின் அன்புமுகம் காணாமலே விடைபெற்று விட்டார்.
சக மனிதரிடத்தில் அன்பு காட்டும் மனிதநேயமிக்க கவியரசுவின் மறைவு அவரை அறிந்த அனைவருக்குமே ஒரு பேரிழப்புத்தான்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago