காவிரி டெல்டாவை மிரட்டிக் கொண்டிருந்த மீத்தேன் பூதம் ஓடி ஒளிந்துவிட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விட்ட விவசாயிகள், அடுத்து வந்த ஷேல் காஸ் (Shale Gas) எடுக்கும் முயற்சிகளைக் கண்டு அரண்டுபோயுள்ளனர்.
காவிரிப் படுகையில் 1958-ல் கச்சா எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டது. 1964-ல், முதல் ஆழ்துளை எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டது. 1984-லிருந்து மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) இங்கு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, நிலத்தடியில் சுமார் 7,000 அடி முதல் 9,000 (சுமார் 2.5 கி.மீ) அடி ஆழம் வரை நிலங்களைத் துளையிட்டு, அங்கு திரவ நிலையில் தேங்கியுள்ள கச்சா எண்ணெய், அதன் மேல் ஆங்காங்கே அழுத்த நிலையில் உள்ள இயற்கை எரிவாயு ஆகியவற்றை மரபான முறையில் எடுத்துவருகிறது.
இவற்றை எடுக்கும் இடங்களிலும், நிலத்தடிக் குழாய்களிலும் ஆங்காங்கே கசிவுகள், தீ விபத்துகள் ஏற்பட்டாலும், பெரிய எதிர்ப்புகள் இல்லாமல் இப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், நாட்டின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளதாலும், பெருமளவில் இறக்குமதியையே நம்பியிருக்க வேண்டியுள்ளதாலும், நாடு முழுவதும் புதைபடிம எரிபொருள் (fossil fuel) குறித்த தேடல் தொடர்கிறது.
667 சதுர கி.மீ. சுற்றளவில்
இதையடுத்தே, காவிரி டெல்டாவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வரையிலான 667 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில், நிலத்தின் மேலடுக்கில் சுமார் 500 அடி முதல் 1,600 அடி வரை படர்ந்துள்ள நிலக்கரி பாறைப் படிமங்களுக்கிடையில், நீரின் அழுத்தத்தில் பெருமளவில் மீத்தேன் எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலக்கரிப் படுகை மீத்தேன் (Coal Bed Methane சுருக்கமாக CBM) வாயுவை எடுப்பதற்கு, ஆழ்துளைக் கிணறு அமைத்து, நிலக்கரிப் படிமங்களிடையே உள்ள நீரை வெளியேற்றினால், மீத்தேன் வாயு தன்னெழுச்சியாக மேலே வரும். இந்த நீர், அதிக அளவு உப்பு மற்றும் கன உலோகங்களைக் கொண்டிருப்பதால், ஆறுகள், வாய்க்கால்கள், வயல்களில் கலந்தால், விளைநிலங்கள் முற்றாகப் பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டமும் பெருமளவு குறையும். நீர் வெளியேற்றப்பட்ட வெற்றிடத்தில், கடல் நீர் உள்ளே புகுந்துவிடும். இதனால், நிலைமை மேலும் சிக்கலாக வாய்ப்புள்ளது.
காவிரிப் படுகையில் சோதனைக் கிணறுகள் தோண்டவும், 25 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுக்கவும் கிரேட் ஈஸ்டர்ன் எனெர்ஜி கார்ப்பரேஷன் (ஜிஇஇசிஎல்) என்ற இந்தியாவைச் சேர்ந்த பன்னாட்டுத் தனியார் நிறுவனத்துக்கு (தனியார்- அரசு பங்கேற்பு) 2010-ல் மத்திய அரசு அனுமதி அளித்தது.
மக்களின் கடும் எதிர்ப்பால், மாநில அரசு ஜூலை 2013-ல் இதற்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால், ஜிஇஇசிஎல் தன் வேலைகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினை கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய விவாதப் பொருளாகவும் இருந்தது. ஜிஇஇசிஎல் நிறுவனம் தஞ்சையில் இருந்த தனது அலுவலகத்தைக் காலி செய்தது. ஒப்பந்தத்தின்படி பணிகளைத் தொடங்கவில்லை எனக் கூறி, மத்திய அரசு, அதனுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதனால், இந்தப் பகுதியில் இனம் புரியாத அமைதி நிலவியது.
ஓஎன்ஜிசி மீது சந்தேகம்
இந்த நிலையில், ஜிஇஇசிஎல் மற்றும் அமெரிக்க நிறுவனத்துக்காக, மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம், காவிரி டெல்டாவில் மீத்தேன் ஆய்வுக் கிணறுகளை அமைத்துவருவதாகக் கூறி, விவசாயிகள் அதன் கட்டமைப்புகளை ஆங்காங்கே உடைத்து அகற்றியதால் பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்தது.
இந்த ஆய்வுக்குத் தடை கோரி விவசாயிகள் சங்க நிர்வாகி பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, “நாங்கள் காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் பணி எதிலும் ஈடபடவில்லை, மரபுசார் எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான சோதனையில்தான் ஈடுபட்டுள்ளோம்” என ஓஎன்ஜிசி தெரிவித்தது.
ஆனால், மீத்தேனை விடவும் சிக்கலான ஷேல் காஸ் (பாறை எரிவாயு) எடுக்கும் திட்டம் குறித்து அப்போது எதுவும் தெரிவிக்காமல் ஓஎன்ஜிசி மவுனம் காத்தது.
அடுத்த சில நாட்களிலேயே காவிரிப் படுகையில் ஷேல் காஸ் எடுக்கும் ஓஎன்ஜிசி-யின் திட்டம் குறித்த விவரங்களைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த வ.சேதுராமன், ஆதாரங்களுடன் வெளியிட்டார். மீத்தேன் திட்ட பாதிப்புகளையும், ஜிஇஇசிஎல் நிறுவனம் மீண்டும் மீத்தேன் எடுக்க அனுமதி கோரி அளித்த கடித ஆதாரங்களையும் வெளிக்கொண்டுவந்ததும் இவரே.
பாறை எரிவாயு (ஷேல் காஸ்)
இந்தியாவில் குஜராத் மாநிலம் காம்பே படுகை (Cambay basin), ஆந்திர மாநிலம் கிருஷ்ணா- கோதாவரி ஆற்றுப் படுகை (KG Basin), மேற்கு வங்க மாநிலம் தாமோதர் ஆற்றுப் படுகை (Damodar Basin), தமிழ்நாட்டின் காவிரி ஆற்றுப் படுகை (Cauvery Basin) ஆகியவற்றில் 10,000 அடி (சுமார் 3 கி.மீ.) ஆழத்தில் படிவப் பாறைகளுக்கிடையில் பாறை எண்ணெய் (Shale Oil), பாறை எரிவாயு (Shale Gas) பெருமளவு இருப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
2013-ம் ஆண்டின் மத்திய அரசின் வரைவுத் திட்டப்படி, 2017 மார்ச்சுக்குள், மேற்கண்ட 4 பகுதிகளில் ஓஎன்ஜிசி 50 இடங்களிலும், ஆயில் இந்தியா 5 இடங்களிலும் முதல் கட்டமாக ஆய்வுக் கிணறுகளைத் தோண்டவும், அடுத்த 2 கட்டங்களில் ஓஎன்ஜிசி 75+50, ஆயில் இந்தியா 5+5 என 135 ஆய்வுக் கிணறுகள் தோண்டவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி
அதன்படி, காம்பே படுகை, கிருஷ்ணா- கோதாவரி படுகை, காவிரிப் படுகையில் 17 இடங்களில் ஷேல் காஸ், ஷேல் ஆயில் எடுக்கும் ஆய்வுக் கிணறுகளைத் தோண்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு 25.06.2015-ல் ஓஎன்ஜிசி கடிதம் அனுப்பியது. இந்தத் திட்டம் குறித்து மத்திய அரசோ, ஓஎன்ஜிசி நிறுவனமோ வெளிப்படையாக எந்தத் தகவலையும் அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களையும் நடத்தவில்லை. சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வறிக்கையும் முன்வைக்கப்படவில்லை.
ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பே, காவிரிப் படுகை உள்ளிட்ட மேற்கண்ட 4 இடங்களில் ஷேல் காஸ், ஷேல் ஆயிலை 25 ஆண்டுகளுக்கு எடுக்கவுள்ளதைக் கூறி மும்பை பங்குச் சந்தையில் தனது பங்குகளை ஓஎன்ஜிசி விற்கத் தொடங்கியது. இந்தப் பணியை, ‘கொனோகோ ஃபிலிப்ஸ்’ என்ற அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆபத்தில்லை...!
பலமான எதிர்ப்புகள் கிளம்பியநிலையில், அண்மையில் சென்னை வந்த ஓஎன்ஜிசி மேலாண் இயக்குநர் (ஆய்வு) ஏ.கே.திவேதி, “தமிழகத்தில் நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுக்கும் திட்டத்தில் நாங்கள் ஈடுபடவில்லை. சில இடங்களில் ஷேல் காஸ் ஆய்வுகளில் மட்டுமே ஈடுபடவுள்ளோம். ஷேல் காஸ், ஷேல் ஆயில் எடுக்கும்போது, வெளியேறும் கழிவுநீரை உயர் தொழில்நுட்பம் மூலம் சுத்திகரிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
“ஷேல் காஸ் எடுப்பது என்பது, நிலக்கரிப் படுகை மீத்தேனைப்போல மேலடுக்கில் எடுப்பதல்ல. 10,000 அடி (3 கி.மீ) ஆழம் வரை துளையிட்டு எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றும் ஓஎன்ஜிசி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
என்ன மாதிரியான எண்ணெய், எரிவாயு என்பதிலோ, எத்தனை அடி ஆழம் என்பதிலோ பிரச்சினை ஒன்றும் இல்லை, எடுக்கும் முறையில்தான் சிக்கல்கள் உள்ளன என்கின்றனர் வல்லுநர்கள்.
மீத்தேன் எடுக்க, தேவையான இடங்களில் மட்டுமே நீரியல் முறிப்பு முறை பயன்படுத்தப்படும். ஆனால், ஷேல் காஸ் எடுக்க முழுவதுமாகவே நீரியல் முறிப்பு முறையைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
கழிவுகளால் ஆபத்து
இந்த, நீரியல் முறிப்புக் (ஃப்ராக்கிங்) கரைசல் இடத்துக்கு ஏற்ப 30% முதல் 70% வரை கழிவுகளாக நிலத்தடியிலேயே தங்கி நிலநடுக்கம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலிய, கனடா, ஐரோப்பிய நாடுகளில் ஃப்ராக்கிங் முறைக்கு எதிராக மக்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
மீத்தேன் ஃப்ராக்கிங் திட்டத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாண மக்கள் நடத்திய ‘கதவை மூடு’ (Lock the Gate) போராட்டமே முன்னோடியானது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 3 நதிகள் உற்பத்தியாகும் பகுதியில் மீத்தேன் வாயு எடுக்க அனுமதித்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தால் நிரந்தரத் தடைவிதித்தது.
மக்களின் போராட்டத்தால் நியூயார்க் மாகாணத்தில் டிசம்பர் 2014-முதல் ஃப்ராக்கிங் முறை தடை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் ஃப்ராக்கிங் முறையை ஏற்கெனவே தடை செய்துள்ளன.
இதய ரத்த நாளங்களைப்போல குறுக்கும் நெடுக்குமான ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வயல் வாய்க்கால்களை (1 லட்சம் கி.மீ.-க்கு மேல் நீளம்) கொண்டதும், அடிக்கடி வெள்ள அபாயம் கொண்டதுமான காவிரிச் சமவெளியில் இந்தக் கழிவுகளைத் தேக்கி வைப்பது, பராமரிப்பது சாத்தியமில்லை. இந்த திறந்தவெளி தொட்டிகளில் ஏற்படும் கசிவுகள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீரையும், மேல் மண் வளத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.
இப்பணிக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள், வாகனங்கள் காவிரி டெல்டா முழுவதும் நடமாடும். இதனால், பாரம்பரிய வாழிடங்கள், சாலைகள், பாலங்கள், அணைக்கட்டுகள், மதகுகள், பழம்பெரும் கோயில் கட்டுமானங்கள் மற்றும் உயிர்பன்மைச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஆபத்தான நோய்கள்
“ஃப்ராக்கிங் வேதிக் கரைசலிலிருந்து வெளியேறும் நூற்றுக்கணக்கான ஆபத்தான ரசாயன, அமில, காரக் கரைசல்கள், நச்சு வாயுக்கள் வளிமண்டலத்திலும், நீர் மண்டலத்திலும் பரவும். மனிதர்கள், மேய்ச்சல் கால்நடைகள், நில- நீர்வாழ்உயிரினங்கள் மற்றும் வலசை வரும் பறவைகளின் சுவாச, நரம்பு மண்டலத்தைக் கடுமையாகப் பாதிக்கும். உணவுச் சங்கிலியிலும் மீள முடியாத விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் வெ.சுகுமாரன்.
ஃப்ராக்கிங் வேதிக் கரைசலால் 25% புற்றுநோய், இனப்பெருக்க உறுப்புகள் பாதிப்பு, 37% ஹார்மோன் பாதிப்பு, 40% - 50% சிறுநீரக, நரம்பு மண்டல, நோய் எதிர்ப்பாற்றல், இதய ரத்தநாள பாதிப்பு, 75% உணர் உறுப்புகள், சுவாச மற்றும் செரிமான அமைப்பு பாதிப்பு போன்ற பல வகையான பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கண்ணை விற்று சித்திரமா?
உலகத்தின் மிகப் பழமையான நாகரிகத் தொட்டில்களில் ஒன்றானதும், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து சாகுபடி நிகழ்ந்துவருவதும், ஆசியாவின் மிகப் பெரும் சமவெளிப் பகுதியும், 50 லட்சம் மக்கள் அடர்ந்து வாழும் நெற்களஞ்சியமுமான காவிரிப் படுகையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டால், இதன் கடந்த கால அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்படும். முப்போகம் விளையும் பூமி, பாலைவனமாகும். பெருகிவரும் மக்களுக்கான உணவு உற்பத்தியிலும் பெரும் பின்னடைவு ஏற்படும். மக்கள் அகதிகளாக வெளியேற வேண்டிய அவல நிலை ஏற்படும் என்கின்றனர் வல்லுநர்கள். உலக அனுபவங்களும் இதைத்தான் சொல்கின்றன. ஆஸ்திரேலிய மக்களின் போராட்ட வாசகம் நினைவுக்கு வருகிறது:
‘நிலக்கரியை உண்ண முடியாது; மீத்தேனைக் குடிக்க முடியாது’
டெல்டாவில் 5 சதவீதம் காஸ்
இந்தியாவில் எடுக்கக்கூடிய நிலையில் உள்ள மொத்த ஷேல் காஸ் 96 டிசிஎஃப் (டிரில்லியன் கன அடி), ஷேல் எண்ணெய் 3.8 பில்லியன் பேரல். இதில், காவிரி டெல்டாவில் எடுக்கக் கூடிய ஷேல் காஸ் 5 டிசிஎஃப் (5 சதவீதம்), ஷேல் எண்ணெய் 0.2 பில்லியன் பேரல். மீத்தேனும் இதே அளவில் உள்ளது. இவற்றை 25 ஆண்டுகளுக்கு எடுக்க முடியும். இந்தியாவின் தேவையில் இது கணிசமானது. இப்போது புரிகிறதா? அரசும் நிறுவனங்களும் ஏன் ஆலாய்ப் பறக்கின்றன என்று.
நீரியல் முறிப்பு (Fracking) முறை
நீரியல் முறிப்பு முறை (Hydraulic Fracturing Method சுருக்கமாக Fracking) என்பது, காற்று, நீர் வெளியேற முடியாத பாறைகளுக்கிடையில் உள்ள எண்ணெய், எரிவாயுவை ஒருங்கிணைத்து எடுப்பதற்காக, பாறை வரை செங்குத்தாகவும், அங்கிருந்து படுக்கை வசத்தில் பல கி.மீ. நீளத்துக்கும் துளையிடப்படும். பின்னர், குழாய்களைச் செலுத்தி, வரிசையாக பாறைகளில் துளைகளை ஏற்படுத்தி, அதனுள் 90% தண்ணீர், 9.50% மணல், 0.50% 632 விதமான ரசாயனங்கள், அமிலங்கள் சேர்க்கப்பட்ட கரைசலை அதி அழுத்தத்தில் செலுத்தி எண்ணெய், எரிவாயு வெளியேற்றப்படும்.
அமெரிக்காவின் ஆயுதம்
இதுவரை, தனது எண்ணெய், எரிவாயு தேவைக்காக வளைகுடா நாடுகளையே பெரிதும் நம்பியிருந்த, அதற்காக ஆட்சிக் கவிழ்ப்புகள், படையெடுப்புகளை நிகழ்த்திவந்த அமெரிக்கா, கடந்த 2012 முதல், அதி நவீன ஃப்ராக்கிங் முறையில் ஷேல் எண்ணெய் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதனால்தான் சர்வதேசச் சந்தையில் 140 டாலருக்கு விற்ற 1 பேரல் எண்ணெய் விலை, தற்போது 40 டாலருக்கு குறைந்துள்ளது. இதன் மூலம், மரபான எண்ணெய் வளம் அதிகம் கொண்ட வளைகுடா நாடுகளை திவாலாக்கி, அதன் எண்ணெய் வயல்களை, தனது பிடிக்குள் கொண்டுவரவும், பனிப்போருக்கு பின்னர் மீண்டும் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள ரஷ்யாவை பொருளாதார ரீதியாக அடக்கி வைக்கவும் இந்த ஆயுதத்தை அமெரிக்கா இப்போது கையில் எடுத்துள்ளது.
நம்மாழ்வார்
காவிரி டெல்டா மீத்தேன் திட்டத்துக்கு எதிராக முதல் எதிர்ப்பையும் போராட்டத்தையும் முன்னெடுத்தவர்கள் இடதுசாரி கட்சியினர் என்றாலும், இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் களம் புகுந்த பின்னரே போராட்டங்கள் தீவிரமாயின. கடும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையிலும், பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்துக்குத் தலைமையேற்று, காவிரி டெல்டாவின் பட்டிதொட்டிகள் எல்லாம் மீத்தேன் திட்டத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாளில்தான் நம்மாழ்வார் உயிரிழந்தார்.
தலைக்கு மேல் மீத்தேன் கத்தி...
நாடாளுமன்றத்தில், ஜிஇஇசிஎல் உடனான ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்து 6 மாதங்களாகியும் அந்த ஒப்பந்தம் உயிர்ப்புடனேயே உள்ளது. இதனால், திட்ட வரைபடத்தில் சிறிய அளவீடு மாற்றங்களுடன் மீத்தேன் கிணறுகள் தோண்ட மீண்டும் அனுமதி கோரி ஜிஇஇசிஎல் அளித்த மனுவை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளதால், காவிரி டெல்டா மீது மீத்தேன் என்ற கத்தி தற்போதும் தொங்கிக்கொண்டிருக்கிறது.
டெல்டாவுடன் முடிவதல்ல...
ஏஆர்ஐ என்ற பன்னாட்டு ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில், புதுச்சேரி முதல் தூத்துக்குடி வரையிலான 500 கிலோ மீட்டர் இடையே, அரியலூர்- புதுச்சேரி, தரங்கம்பாடி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மன்னார் வளைகுடா துணைப் படுகை ஆகிய 5 தாழ்வுப் பகுதிகளில் ஷேல் காஸ், ஷேல் ஆயில் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இதைத்தான் ஓஎன்ஜிசி எடுக்கவுள்ளது.
புதுச்சேரி- தூத்துக்குடி இடையிலான கிழக்குக் கடற்கரையோரமான இப்பகுதி சூழல் நுண்ணுணர்வு மிகுந்தது. தமிழகத்தில் இறுதியாக எஞ்சியுள்ள பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள், கோடியக்காடு, கோடியக்கரை பறவைகள் சரணாலயம், ஐ.நா-வால் உலகின் அரிய கடல்வாழ் உயிரினங்களின் வாழிடமாக அறிவிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா தேசிய உயிர்க்கோள காப்பகம் ( 526 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ), மீன்கள் உற்பத்தியாகும் ஆறுகளின் முகத்துவாரங்கள் உள்ளன.
இவைதான், அரிய மீனினங்கள், வெளிமான்கள், வலசைப் பறவைகள், டால்பின்கள், கடல் பசுக்கள், ஆலிவ் ரிட்லி ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகள், தாவரங்களின் இறுதிப் புகலிடமாகவும் உள்ளன.
படங்கள்: சி.கதிரவன், ஜி.ஞானவேல்முருகன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago