மின் கட்டண விவகாரம் தொடர்பாக, வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள கறுப்புக்கொடி போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 18) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:
"கரோனா பரவலை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி, சிகிச்சை அளித்து மக்களைக் காப்பாற்றும் திறனும் செயலும் அற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நோய்த் தொற்று பரவிப் பாதிப்பு ஏற்படக் காரணமானதுடன், தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமையையும் உருக்குலைத்துப் பாழ்படுத்திவிட்டது.
100 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கு, அந்த ஊரடங்குக்குள் ஊரடங்கு, முழு ஊரடங்கு, டாஸ்மாக் திறப்பு உள்ளிட்ட தளர்வுகள் என அடுத்தடுத்து புதுப்புதுக் குழப்பத்துடன் எடுக்கும் அரைகுறை முடிவுகளால் தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
» பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு
தமிழ்நாட்டை ஆளும் அதிகாரத்தில் அதிமுக இருந்தாலும், மக்களின் மனதில் நம்பிக்கைக்குரிய இயக்கமாக இருப்பது எதிர்க்கட்சியான திமுகதான். அதனால், மக்கள் பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்கும் முதல் குரல், திமுகவிடமிருந்தே வெளிப்படுகிறது; தீர்வுக்கான வழிமுறைகளையும் முன்வைக்கிறோம்.
அதனைச் செவிமடுக்கும் அரசியல் பக்குவம் அதிமுக ஆட்சியாளர்களிடம் இல்லை.
'மரம் சும்மா இருந்தாலும் காற்று விட்டுவைப்பதில்லை' என்பதுபோல எதிர்க்கட்சியான நமக்குப் பணிகள் மிகுந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பும் வளர்ந்துவருகிறது. அதனால்தான் திமுக நிர்வாகிகளின் திருமுகங்களை அன்றாடம் காணொலி வாயிலாக ஆர்வத்துடன் கண்டு, அவர்களுடனான நேரடிச் சந்திப்பு என்பதைப்போல, உரையாடி வருகிறேன். பல துறை வல்லுநர்களிடமும் கலந்துரையாடுகிறேன்.
அதனடிப்படையில், ஜூலை 16-ம் நாள் காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பயன்தரும் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. 2,000-க்கும் அதிகமான உயிர்களைப் பறித்திருக்கும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள் கிருமிநாசினி வரை ஊழல் செய்வதில் முனைப்பாக இருப்பதைக் கைவிட்டு, மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிட வேண்டும்.
2. மத்திய தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கும் நிலையினை மாற்றி, அவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு, வரும் காலத்தில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் மருத்துவக் கல்வி இடங்களை அளித்திடும் முறையை ஒழித்திட வேண்டும்.
3. நகர்ப்புற ஏழை - எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை இந்தக் கரோனா காலத்தில் நடத்துவதை ரத்து செய்யும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வந்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும்.
4. தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி, இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாத்தான்குளம் வணிகர்களான தந்தை - மகன்; ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலைய சித்ரவதையால் படுகொலையானதற்கு விரைந்து நீதி கிடைத்திடும் வகையில் விசாரணை நடைபெற்று, குற்றம் செய்த எவரும் தப்பிக்காதபடி தாமதமில்லாமல் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
5. மாநில அரசின் உரிமைகளைப் பறித்து, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்ட மசோதா 2020-ஐ உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
6. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழகத்தின் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் மத்திய பாஜக அரசின் அவசரச் சட்டத்திற்கு மவுன சாட்சியாக அதிமுக அரசு இருக்கின்ற நிலையிலிருந்து மீண்டு, கூட்டுறவு நகைக்கடன்களை வழங்கக்கூடாது என்கிற வாய்மொழி உத்தரவின் பின்னணியை விளக்கி, விவசாயத் தொழிலாளர்களை மீட்டிடும் வகையில் ஏற்கெனவே உள்ள நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திட வேண்டும்.
7. கரோனா பாதிப்பு உச்சகட்ட நிலையில் உள்ளதால் பல்கலைக்கழகங்களின் இறுதி பருவத்தேர்வு உள்ளிட்ட அனைத்து பருவத்தேர்வுகளையும் ரத்து செய்திட வேண்டும்.
8. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளைப் பலவீனப்படுத்தி வரும் அதிமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து, திமுகவினர் வெற்றிபெற்றுப் பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதியினைக் கூட வழங்காமல் பறக்கணிக்கும் போக்கிலிருந்து அதிமுக அரசு திருந்திடத் தவறினால் நீதிமன்றத்தை நாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
9. பொதுமக்கள் பயன்பாட்டுக்கான நிலத்தை ஆக்கிரமிக்கும் கும்பலை எதிர்த்து மக்கள் நலனுக்காகச் செயல்பட்ட திருப்போரூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்ததற்குக் கண்டனம் தெரிவித்து, உண்மைக் குற்றவாளிகளை நீதிமன்றம் முன் நிறுத்தித் தண்டிக்கும் வகையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த 9 தீர்மானங்களைத் தொடர்ந்து, 10-வது தீர்மானமாக, கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை வஞ்சித்து, கொள்ளையடிக்கும் மின் கட்டண முறைக்கு எதிரான தீர்மானம் திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் விரிவான ஆலோசனையுடன் நிறைவேற்றப்பட்டது.
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லும் மக்களுக்கும் அபராதம் விதிப்பு, வாகனங்கள் பறிப்பு எனத் தண்டனை வழங்கி வரும் அதிமுக அரசு, வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்களிடம், மின்சாரத்தை கூடுதலாகப் பயன்படுத்தியதாகப் பல மடங்கு கட்டணம் வசூலிப்பது தமிழ்நாடு முழுவதும் மின்சார 'ஷாக்'கைவிட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
மின்சாரக் கணக்கீட்டு முறையில் ஏற்பட்ட குளறுபடிகள், அவற்றைப் பகுப்பதில் ஏற்பட்ட கோளாறுகள் எல்லாமும் சேர்ந்து மக்கள் மீது அதிக சுமையை ஏற்றியிருப்பதைத் தனது சொந்த அனுபவத்தின் வாயிலாகப் பல துறை சார்ந்த பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். பிரபலங்கள் முதல் சாதாரண சாமானியர்கள் வரை பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்த மின் கட்டணக் கொள்ளையைப் பிடிவாதமாக நியாயப்படுத்தும் அதிமுக அரசு, பழி முழுவதையும் மின்நுகர்வோரான மக்கள் மீதே சுமத்துகிறது.
ஊரடங்கினால் தொழில்கள் முடக்கப்பட்டு, வணிகம் பாதிக்கப்பட்டு, அன்றாட வேலைவாய்ப்புகள் அற்றுப் போயுள்ள நிலையில், கரோனா காலத்தைச் சிறப்பு நேர்வாகக் கருதி மின் கட்டணச் சலுகை அளிக்க வேண்டிய அதிமுக அரசோ, நாங்கள் முறையாகக் கணக்கீடு செய்துள்ளோம் என நீதிமன்றத்தில் தெரிவித்து, அதனையே செய்திக்குறிப்பாகவும் வெளியிட்டு, மக்களிடம் கட்டணக் கொள்ளை அடிப்பதிலேயே கவனம் செலுத்துகிறது. நுகர்வோருக்கு நியாயமான மின் கட்டணத்தை வழங்குவது மிக முக்கியம் என வலியுறுத்தும் மின்சாரச் சட்டத்தின் கீழ்தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம் இயங்கி வருகிறது என்பதை இந்த அரசு மறந்துவிட்டது.
மத்தியப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கரோனா கால மின் கட்டணச் சலுகையை அளித்துள்ள நிலையில், அதிமுக அரசு மட்டும் மின் கணக்கீட்டின் அடிப்படையில் கட்டணத்தைச் செலுத்தியே ஆகவேண்டும் என்று சுமையை ஏற்றுவது கருணையற்ற போக்காகும்.
இதனைக் கண்டிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 'ரீடிங் எடுத்ததில் உள்ள குழப்பங்களை நீக்கி, மின் நுகர்வோருக்குச் சாதகமான முறையில் கணக்கிட்டு, ஊரடங்கு கால மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எளிய மாதத் தவணையாகச் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரியும் வரும் 21-ம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும் கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது’ எனத் தீர்மானிக்கப்பட்டது.
திமுக அறிவித்துள்ள போராட்டத்தின் அடிப்படை நியாயத்தை, மின் கட்டணக் கொள்ளையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் உணர்ந்துள்ளனர். அதனால்தான் தன்னிச்சையாக அவர்களிடமிருந்து ஆதரவுக்குரல்கள் பெருகி வருகின்றன.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆட்சியாளர்கள், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக திமுக போராட்டம் அறிவித்திருப்பது போலக் கயிறு திரிக்கிறார்கள். மின் கணக்கீடு குறித்த தமிழக அரசின் நடைமுறையை ஏற்றுக்கொண்டுள்ள உயர் நீதிமன்றம், இதில் நுகர்வோருக்கு ஏற்படும் சிக்கல்களை அரசும் மின்வாரியமும் தீர்த்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்களையும், பிழைகளையும் நீக்கி, கரோனா காலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் வருமானம் குறைந்துள்ள சூழலில் மின் கட்டணத்தில் சலுகை அளிக்க வலியுறுத்தியும் வெகுமக்கள் பக்கம் நின்று திமுக போராடுகிறது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு பற்றி திமுகவுக்கு வகுப்பெடுக்க நினைக்கும் இதே அதிமுக அரசுதான், கரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டபோது, அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்றது. டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறப்பது தங்களின் கொள்கை முடிவு என வாதாடி, மதுக்கடைகளைத் திறந்து கரோனா பரவலுக்குக் காரணமாக இருந்தது. டாஸ்மாக் விற்பனைக்காகக் கொள்கை முடிவு எடுக்கும் அதிமுக அரசு, மக்களை வதைக்கும் மின் கட்டணக் கொள்ளையைத் தவிர்க்கக் கொள்கை முடிவு ஏதேனும் வைத்திருக்கிறதா? அல்லது கொள்ளைக்கணக்கு ஒன்றை மட்டுமே முடிவாகக் கொண்டிருக்கிறதா? என்பதே மக்கள் எழுப்பும் கேள்வி.
மக்களின் அந்தக் கேள்விக்குப் பக்கபலமாக, அவர்களின் கோரிக்கைகளுக்குப் பாலமாக, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகத் திமுக ஜூலை 21-ம் நாள் நடத்துகின்ற கறுப்புக்கொடி அறப்போரில், திமுக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதுடன், பொதுமக்களிடமும் அதற்கான ஆதரவைத் திரட்டும் வகையில் துண்டறிக்கைகளை வழங்கிட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடி பறந்திடும் வகையில் மக்களின் பங்கேற்பு அமைந்திட வேண்டும்.
போராட்டத்தின் நோக்கம், அதில் எழுப்பப்பட வேண்டிய முழக்கங்கள் ஆகியவை ஒவ்வொரு மாவட்டக் கழகத்திற்கும் தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கரோனா கால ஊரடங்கில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தனி மனித இடைவெளியுடனும் முகக்கவசம், சானிடைசர் போன்ற பாதுகாப்பு வசதிகளுடனும் பொதுமக்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் அறப்போரில், அதிமுக ஆட்சியின் அவலத்தை எடுத்துரைக்கும் வகையில், இல்லங்கள் தோறும் கறுப்புக் கொடிகள் பறக்கட்டும்! அனைத்துத் திசைகளிலும் கண்டன முழக்கங்கள் அதிரட்டும்!".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago