கடன் வசூல்: சுய உதவிக்குழு மகளிரை கொடுமைப்படுத்துவதை வங்கிகள் நிறுத்த வேண்டும்; அன்புமணி

By செய்திப்பிரிவு

சுய உதவிக்குழு மகளிரை கொடுமைப்படுத்துவதை வங்கிகள் நிறுத்த வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அன்புமணி இன்று (ஜூலை 17) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான தவணைத் தொகையை செலுத்தும்படி தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மிரட்டுவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் இந்த மனிதநேயமற்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவையாகும்.

தமிழ்நாட்டில் மூன்றரை லட்சத்திற்கும் கூடுதலான மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது 12 பேர் முதல் 20 பேர் வரை இருப்பார்கள். இவர்கள் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வங்கிக் கணக்குத் தொடங்கி, வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் பெற்று அதைக் கொண்டு சிறு தொழில்கள் அல்லது சிறு வணிகம் செய்து வருகின்றனர். இதன்மூலம் பெண்கள் வாழ்க்கையில் தங்களின் சொந்தக் காலில் நிற்கத் தயாராவது மட்டுமின்றி, ஊரகப் பொருளாதாரமும் மேம்படுகிறது. அந்த வகையில் இது வறுமை ஒழிப்பு திட்டமாகவும் செயல்படுகிறது.

ஆனால், கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை சிதைத்து இருப்பதுடன், அவர்களின் கவுரவம் மற்றும் கண்ணியத்தையும் குலைத்திருக்கிறது. கரோனா வைரஸ் நோய் அச்சத்தால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சிதைந்து விட்டது. மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சிறு தொழில்களிலும், சிறு வணிகங்களிலும் செய்திருந்த முதலீடுகள் முற்றிலுமாக அழிந்து விட்டன. அதனால், மகளிர் வாங்கியிருந்த கடன்களுக்கான தவணைகளை குறித்த காலத்தில் அவர்களால் செலுத்த முடியவில்லை.

இந்த சூழலை புரிந்து கொள்ள முடியாத தனியார் வங்கிகளும், நிதிநிறுவனங்களும் தங்களிடம் பெற்ற கடனுக்கான தவணையை உடனடியாக திருப்பிச் செலுத்தும்படி மிரட்டல் விடுப்பதாக தெரிகிறது. சில இடங்களில் பொதுத்துறை வங்கிகளும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நெருக்கடி கொடுக்கின்றன. சில இடங்களில் தனியார் நிதி நிறுவனங்களின் கடன் வசூல் முகவர்கள் மகளிர் சுயஉதவிக் குழுவினரை கண்ணியக் குறைவாக நடத்துவதாக செய்திகள் வெளிவருவது மிகவும் வேதனை அளிக்கிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டதன் நோக்கமே கிராமப்புற பெண்கள் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ வகை செய்ய வேண்டும் என்பது தான். அந்த இலக்கை எட்டுவதற்கு வங்கிகள் வழங்கிய கடனுதவிகள் பெரிதும் பங்காற்றின என்பதை மறுக்க முடியாது. ஆனால், இப்போது அதே வங்கிகள் மகளிரின் கண்ணியத்தை குலைக்கும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபடுவது நியாயமற்றது. இதனால் மகளிரின் மன உறுதி குலைந்தால், பெண்களின் முன்னேற்றத்திற்காக கடந்த பத்தாண்டுகளாக சுய உதவிக்குழு திட்டங்கள் மூலம் செய்யப்பட்ட அனைத்தும் அர்த்தமற்றதாகி விடும்.

கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் யாரையும் விட்டு வைக்கவில்லை. மிகப்பெரிய அளவிலான தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களே தொழில் செய்ய முடியாமல் முடங்கிக் கிடப்பதையும், அவற்றுக்கு புத்துயிரூட்ட கடன், மானியம் உள்ளிட்ட உதவிகளை வங்கிகள் வழங்கி வருவதையும் அறிய முடிகிறது. பெரு நிறுவனங்களின் நிலைமையே அவ்வாறு இருக்கும் போது, கிராமப்புற பொருளாதாரத்தை நம்பியிருக்கும் மகளிரின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை உணர முடியும். ஆனால், அதை வங்கிகள் உணராதது தான் வேதனை அளிக்கிறது.

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிலிருந்து பெறப்பட்ட வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களுக்குமான மாதத்தவணை ஆகஸ்ட் மாதம் வரையிலான 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால், வட்டிச் சுமை அதிகரித்தாலும் கூட, கடன்தாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால், அச்சலுகை மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு நீட்டிக்கப்படாதது தான், மகளிர் சுயஉதவிக் குழுவினர் இப்போது எதிர்கொள்ளும் அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணமாகும்.

எனவே, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தவணை வசூலை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள், தனியார்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும். கடன்தவணை ஒத்திவைப்புக்காலத்தில் தவணைத் தொகை மீதான வட்டியையும் ரத்து செய்ய ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும். கிராமப்புறங்களில் தவணை செலுத்தும்படி மிரட்டுவோர் மீது குற்றவழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அரசு ஆணையிட வேண்டும்"

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்