பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்; ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டப்படி செயல்பட்டிருந்தாலே குறைந்திருக்கும்: பாமக தீர்மானம்

By செய்திப்பிரிவு

இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 2013-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தாலே பெருமளவில் குற்றங்களைத் தடுத்திருக்க முடியும். தமிழ்நாட்டில் தாராளமாக மது கிடைப்பதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் காரணம் ஆகும் என பாமக தெரிவித்துள்ளது.

பாமகவின் 32 ஆண்டுவிழாவை ஒட்டி சிறப்புச் செயற்குழுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் முழு மதுவிலக்கே உடனடித் தேவை, வேடந்தாங்கல் சரணாலயத்தைப் பாதுகாப்பது உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. வேலூரை அடுத்த பாகாயத்தில் 10 ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லையும், மிரட்டலும் விடுத்ததால் அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது, செய்யூர் அருகில் இளம்பெண் ஒருவர் திமுக நிர்வாகிகளால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் 7 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது வேதனையளிக்கின்றன; இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக 2013 ஜனவரி 1 அன்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தாலே பெருமளவில் குற்றங்களைத் தடுத்திருக்க முடியும். தமிழ்நாட்டில் தாரளமாக மது கிடைப்பதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காரணம் ஆகும்.

இனி வரும் காலங்களிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை, உடனடியாக பெற்றுத் தருவதன் மூலம் இத்ததைய குற்றங்களுக்கு முடிவு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய மதுக்கடைகளை திறக்கக்கூடாது: முழு மதுவிலக்கே உடனடித் தேவை

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் எலைட் மதுக்கடைகளையும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் ஏற்கெனவே மூடப்பட்ட மதுக்கடைகளையும் திறப்பதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவதுதான் தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட கொள்கை எனும் நிலையில், மதுக்கடைகளை மூடுவதற்குப் பதிலாக புதிய மதுக்கடைகளைத் திறப்பது நியாயமற்றது. ஆகவே, புதிய மதுக்கடைகள் திறப்பு கைவிடப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கரோனா காலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் ஆலோசனையை ஏற்று தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டன. மார்ச் 25 ஆம் தேதி முதல் மே மாதம் 6-ம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்பட்டதால் தமிழக மக்கள் 43 நாட்கள் மிகவும் நிம்மதியாக இருந்தனர். ஆனால், தமிழகத்தில் கரோனா அச்சம் விலகுவதற்கு முன்பாகவே மே 7-ம் தேதி சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் மதுக்கடைகளை தமிழக அரசு திறந்தது.

மதுக்கடைகளில் மக்கள் நெரிசல் அதிகரித்த நிலையில், அதனால் கரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால் மதுக்கடைகளை மூட ஆணையிட வேண்டும் என்று கோரி பாமக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று முறையீடு செய்து மே 16-ம் தேதி முதல் மதுக்கடைகளை தமிழக அரசு மீண்டும் திறந்தது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவியதற்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டதும் முக்கியக் காரணம் என்பதில் ஐயமில்லை.

மதுக்கடைகள் மூடப்பட்டால் மட்டும்தான் தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும். எனவே, தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்கவேண்டும்; விரைவில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.

குறுவைப் பயிர்களைக் காக்க காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்க வேண்டும்

தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில்தான் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாற்று நடும் பணிகள் கூட இன்னும் முழுமையாக முடியாத நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கு குறுவை பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

ஆனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 72.50 அடியாக குறைந்துவிட்டது. அணையின் நீர் இருப்பு 34.85 டிஎம்சியாக குறைந்துவிட்டது. அணைக்கு விநாடிக்கு 196 கனஅடி மட்டுமே தண்ணீர் வரும் நிலையில், இருக்கும் நீரைக் கொண்டு ஒரு மாதத்திற்குக் கூட தண்ணீர் வழங்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்காக ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் 40.43 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆணையிட்டும்கூட, இன்றுவரை 9 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் 50 டி.எம்.சி.க்கும் கூடுதலாகத் தண்ணீர் இருக்கும் நிலையில், கர்நாடகத்திற்கு இப்போது தண்ணீர் தேவையில்லை என்ற சூழலில், தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக அணைகளில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்கப்படாவிட்டால், காவிரி பாசன மாவட்டங்களில் மூன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகிவிடும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்கும் வகையிலும், குறுவைப் பயிர்களைக் காக்கவும் தமிழ்நாட்டிற்கு உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் படி, கர்நாடக அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் 32-வது ஆண்டு விழா சிறப்பு செயற்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.

வங்கிக் கடன் தவணைகள் மீதான வட்டியைத் தள்ளுபடி செய்யவேண்டும்

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமைப்பு சார்ந்த தொழில்துறை, அமைப்பு சாரா தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால், அவர்களின் பொருளாதாரச் சுமையை ஓரளவு குறைக்கும் வகையில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து வகையான கடன் தவணைகளைச் செலுத்துவதை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து ரிசர்வ் வங்கி ஆணையிட்டது.

இந்த 6 மாத அவகாசம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், பொருளாதாரச் சூழல் மேம்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அதைக் கருத்தில் கொண்டு கடன் தவணைகளைச் செலுத்துவதை மேலும் 3 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒத்திவைக்க வேண்டும்.

அதே நேரத்தில், கடன் தவணைகளை ஒத்திவைப்பது மட்டுமே தீர்வல்ல என்பதை ரிசர்வ் வங்கி உணரவேண்டும். ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டி செலுத்த வேண்டும் என்று கூறி வரும் வங்கிகள், வட்டித் தொகையையும் அசலுடன் சேர்த்து வருகின்றன.

இது கடன்காரர்களை மீளமுடியாத கடன் புதைகுழிக்குள் தள்ளிவிடும். அதைக் கருத்தில் கொண்டு, இதுவரை ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகள் மற்றும் இனி ஒத்திவைக்கப்படவுள்ள கடன் தவணைகள் மீதான வட்டியை தள்ளுபடி செய்யும்படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும் என பாமக கோருகிறது.

மகளிர் சுயஉதவிக் குழு கடன் தவணைகளை நிறுத்திவைக்க வேண்டும்

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்பு மற்றும் பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு, வங்கிகளில் இருந்து பெறப்பட்ட அனைத்துவகை கடன்களுக்குமான மாதத் தவணைகள் 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடன்களுக்கு இந்தச் சலுகை நீட்டிக்கப்படவில்லை.

அதனால், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்த தனியார் வங்கிகளும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் கடன்பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுப் பெண்களைத் தொடர்புகொண்டு கடன் தவணையை உடனடியாகச் செலுத்தும்படி நெருக்கடி கொடுக்கின்றனர். கடன் தவணை செலுத்த முடியாத நிலையில் இருக்கும் பெண்களுக்குத் தனியார் வங்கிகளின் சார்பில் கடன் வசூல் செய்யும் குண்டர்கள் மூலம் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இத்தகைய மனிதநேயமற்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

கரோனா வைரஸ் பரவலால் மற்றவர்கள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, அதேபோல் தான் மகளிர் சுயஉதவிக் குழுவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப் புரிந்துகொள்ளாமல் கடன் தவணையைச் செலுத்தும்படி, அவர்களை மிரட்டுவது நியாயமற்றதாகும். எந்த வகையில் மிரட்டினாலும் கடன் தவணையைச் செலுத்த முடியாத நிலையில்தான் மகளிர் சுயஉதவிக் குழுப் பெண்கள் உள்ளனர்.

எனவே, கரோனா அச்சம் தணிந்து, நிலைமை சீரடையும் வரை மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடன்களுக்கான தவணைத் தொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்வதை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கைவிட வேண்டும் என ஆணையிடும்படி ரிசர்வ் வங்கியை இக்கூட்டம் கோருகிறது.

வேடந்தாங்கல் சரணாலயப் பகுதிக்குள் தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்டது குறித்து விசாரணை தேவை!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான வேடந்தாங்கலில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தின் மையப் பகுதியை 1 கிலோ மீட்டர் சுற்றளவைக் குறைக்க தமிழக வனத்துறை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பாமக சார்பில் அடுத்தடுத்து வினாக்கள் எழுப்பப்பட்ட நிலையில், சரணாலயத்தின் சுற்றளவு குறைக்கப்பட வில்லை என்றும், சரணாலயப் பகுதியை மையப்பகுதி, இடைநிலைப் பகுதி, சுற்றுச்சூழல் பகுதி என வகைப்படுத்தும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாக வனத்துறை சார்பில் அளிக்கப்படும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

சரணாலயப் பகுதிக்குள் செயல்பட்டு வரும் தனியார் ஆலையின் விரிவாக்கத்திற்காகவே இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக கூறப்படுவது குறித்து தமிழக வனத்துறை விளக்கம் அளிக்கவேண்டும். அதுமட்டுமின்றி, 2010 - 2011 ஆம் ஆண்டுகளில் வேடந்தாங்கல் சரணாலய எல்லைக்குள் இரு தனியார் தொழிற்சாலைகளைத் தொடங்க தடையை மீறி அனுமதி அளித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக கோருகிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் நாள் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நிலையில், அப்பகுதிகளில் இப்போதுதான் நடவுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆனால், மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பே தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆழ்துளைக்கிணறு பாசனம் மூலம் உழவர்கள் குறுவை சாகுபடி மேற்கொண்டு இப்போது அறுவடை நடைபெற்று வருகிறது.

ஆனால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய காவிரி பாசன மாவட்டங்களில் இன்னும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், அறுவடை செய்யப்பட்டு, திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டன.

தொடர்ந்து அறுவடை நடைபெற்று வரும் நிலையில், இனியாவது நெல் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க காவிரி பாசன மாவட்டப் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக சிறப்பு பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

ரயில் சேவைகளைத் தனியார் மயமாக்கக்கூடாது

தமிழ்நாட்டில் 14 வழித்தடங்கள் உட்பட நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 ரயில் சேவைகளை தனியார் மயமாக்க இந்திய ரயில்வே வாரியம் முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ரயில்கள் தனியார் மயமாக்கப்பட்டால், அவற்றின் சேவைத்தரம் உயரும் எனும் போதிலும், பயணக்கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும்.

அதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ரயில்களில் பயணம் செய்வது குறித்து நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலை ஏற்படும். அதனால், ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதை தடுக்கும் வகையில், ரயில் சேவைகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு பாமக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்