அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. அதில் 206 பேர் பயிற்சி பெற்றார்கள். இதனிடையே அந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, படித்து முடித்த மாணவர்களை அர்ச்சகராகப் பணியமர்த்த முடியாத சூழல் ஏற்பட்டது. 2015-ம் ஆண்டு இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. அந்த அரசு ஆணை செல்லும் என்று உத்தரவு வந்தாலும்கூட பயிற்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்குவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில் மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிள்ளையார் கோயில் அர்ச்சகராக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற, மதுரை அர்ச்சகர் பாடசாலை மாணவர் தியாகராஜன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறியதாவது:
"பயிற்சி பெற்ற மாணவர் தியாகராஜன் உரிய கல்வித் தகுதி, முறையான நேர்முகத் தேர்வு மூலம் அர்ச்சகராகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை புதூர் அய்யப்பன் கோயிலில் மாரிச்சாமி என்ற இளைஞருக்குப் பணி வழங்கப்பட்டது. இப்படி இதுவரையில் பயிற்சி பெற்றவர்களில் மொத்தமே 2 பேருக்குத்தான் பணி கிடைத்திருக்கிறது.
இவர்களைப் போன்றே திறன்படைத்த மற்ற மாணவர்களுக்கு இதுவரையில் ஆகமக் கோயில்களில் பணி நியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மயிலை கபாலீஸ்வரர் உள்ளிட்ட முக்கியக் கோயில்களில் பணி நியமன முறை ரகசியமாகவே இருக்கிறது.
அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும். ஆனால், அரசியல் அமைப்புச் சட்டமும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் செல்லாத இடமாக நம்முடைய ஆகமக் கோயில்கள் இருக்கின்றன. இந்து மதத்தில் அனைவரும் சமம். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. அதையும் மீறிக் கோயில் கருவறையில் நுழைவதற்குத் தடை இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை நியாயமானதே என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் கூட, பிராமணர் அல்லாத இளைஞர்களைப் பணியமர்த்த அரசு தயங்குகிறது.
பயிற்சி முடித்த 206 பேரில் வெறும் 2 பேரை மட்டும், அய்யப்பன், பிள்ளையார் போன்ற சிறு கோயில்களுக்கு அர்ச்சகர்களாக அரசு நியமித்திருக்கிறது. இது வெறுமனே வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சினை மட்டுமல்ல. இது அரசியல் அமைப்புச் சட்டம் தந்துள்ள, குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சம வாய்ப்பு, சமூக நீதி, மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினை.
எனவே, எஞ்சியுள்ள 204 மாணவர்களுக்கும் அரசு உடனடியாகப் பணி வழங்க வேண்டும். மூடப்பட்ட சைவ, வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். பெண்களையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்"
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago