முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (ஜூலை 14) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய பாஜக அரசு தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள் அனைத்தும் மக்களாட்சியின் மாண்பைச் சீர்குலைப்பதாகவே இருக்கின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தேர்தல் ஆணையத்துக்கு சுயாட்சியாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றது. நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களை எவ்வித சார்பும் இன்றி சீரிய முறையில் நடத்துவதுதான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதை அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.
தற்போது பாஜக அரசு 'தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2019' மற்றும் 'தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2020' ஆகியவற்றைக் கொண்டுவந்துள்ளது.
இச்சட்டத் திருத்தத்தின்படி, மூத்த குடிமக்களுக்கான வயது 80-ல் இருந்து, 65 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் அஞ்சல் வாக்குச் சீட்டுப் போடுவதற்கு தகுதியானவர்கள் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை குடிமக்களுக்கு உறுதி செய்யுமா? என்பது கேள்விக் குறி.
இந்தியாவில் தற்போதுள்ள தேர்தல் நடத்தும் விதிமுறை சட்டத் திருத்தங்கள் 1961-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசு தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவந்தால், தேர்தல் ஆணையம் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 60சி பிரிவின்கீழ் அதில் தலையிட அதிகாரம் உண்டு.
அஞ்சல் வாக்குச் சீட்டுப் பதிவு செய்வதற்கு வயது வரம்பை 65 என்று குறைத்திருப்பது பல்வேறு முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். இந்த வயது வரம்பின் மூலம் சுமார் 10 விழுக்காடு வாக்காளர்கள் அஞ்சல் வாக்குச் சீட்டுப் பதிவு செய்பவர்களாகவும் மாறும் நிலை உருவாகும். இதனால் தேர்தல் செலவினங்களும் அதிகரிக்கும்.
மேலும், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்போது, 65 வயதுக்கு மேல் என்று வாக்காளர்கள் பதிவு செய்தால், பதிவு செய்யும் அலுவலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைதான் இருக்கும். இதனால் அஞ்சல் வாக்குச் சீட்டு அளிப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இன்னொரு திருத்தத்தின் மூலம் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர் என்ற சான்றிதழ் பெற்றவர்களும், கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரியவர்களும் அஞ்சல் வாக்குச் சீட்டைப் பதிவு செய்யலாம் என்பதும் பல்வேறு முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்.
தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்டு, திருத்தங்களை வகுக்க வேண்டுமே தவிர, ஆளும் கட்சியின் அழுத்தங்களுக்குப் பணிந்துவிடக் கூடாது.
எனவே, மத்திய அரசு நடத்தும் விதிமுறைகளில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago