மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கறுப்புச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: விவசாயிகள் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

மின்சாரச் சட்டத்திருத்த மசோதா , வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம் என்று மத்திய அரசு அவசரக் கோலத்தில் சட்டங்களை இயற்றி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கை:

விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் கையெழுத்து இயக்கம், கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டம் அறிவித்துள்ளனர். அவர்களது
போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.

மின்சார சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு அவசர கோலத்தில் நிறைவேற்றி வருகின்றது.

நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி, தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி பாஜக அரசு நிறைவேற்றி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

மத்திய அரசின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகளை கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு முழுவதும், விவசாயிகள் மற்றும் பொது மக்களிடத்தில் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி வருகின்றனர். ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற்று பிரதமரிடம் அளிக்க உள்ளனர். மேலும் நமது கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாக வரும் 27-07-2020 திங்கட் கிழமை வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனத்தை தெரியப்படுத்திட உள்ளனர்.

கையெழுத்து இயக்கம் மற்றும் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கறுப்புச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மாநில செயலாளர் இரா. முத்தரசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE