மதுரை சத்திரப்பட்டியில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மூன்று சதிக்கற்கள் கண்டுபிடிப்பு

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வே.சத்திரப்பட்டியில் 400 ஆண்டுகள் பழமையான மூன்று சதிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான து.முனீஸ்வரன், வே.சத்திரப்பட்டி கண்மாய் பகுதியில் கள ஆய்வு செய்தபோது மூன்று வகையான கலைநுட்பத்துடன் கூடிய சதிக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது குறித்து து.முனீஸ்வரன் கூறியதாவது: இறந்துபோன கணவனுடன், மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்த பின் அவர்களது நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் சதிக்கல் எனப்படுகிறது.

இதில் கணவனுடன் மனைவியும் இருப்பது போன்று சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதைக் காட்ட கை உயர்த்தி இருப்பது போன்றும், அதில் வளையல் உள்ளிட்ட அணிகலங்கள் அணிந்தவளாகவும் காணப்படுவாள்.

தீயில் பாய்ந்து உயிர் விடுவது போன்ற சிற்பம் செதுக்கும் வழக்கம் இல்லை. இத்தகைய சதிக்கல் கோவில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைக்கப்படுவதுண்டு. மாலை, சதி ஆகிய சொற்களுக்கு பெண் என்ற பொருள் உண்டு.

நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கைம்பெண்களுக்கு பல இன்னல்கள் நேர்ந்தன. ஆனால் உடன்கட்டை ஏறி இறந்துபோன பெண்களை தெய்வமாகப் போற்றி வணங்கினர். கணவன் மீது கொண்ட அன்பினாலோ, கட்டாயத்தினாலோ பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. மதுரையை ஆட்சி செய்த நாயக்கர்களுக்கு கட்டுப்பட்டு பல குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். குறுநில மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் காணப்பட்டது.

வே.சத்திரப்பட்டி கண்மாய் முகத்துவாரப் பகுதியில் மூன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட இரு கற்களும், இரண்டரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட ஒரு கல்லும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஒரு கல்லில் ஒருவர் அமர்ந்த நிலையில் கையில் முப்பட்டை வாளை ஏந்தி, மார்பில் பூநூல் அணிந்து காட்சியளிக்கிறார்.

அருகிலுள்ள அவர் மனைவி கொண்டை, நீண்ட காதுகள், கழுத்தில் அணிகலன்களுடன் தலை சாய்ந்து காணப்படுகிறார். அவரது இரு கையையும் உயர்த்தி, வலது கையில் எலுமிச்சம்பழமும், இடதுகையில் கண்ணாடியும் ஏந்தியுள்ளார். ஆண், பெண் இருவரும் வலது கால்களை மடக்கி இடது கால்களை தொங்கவிட்டும், தலை, காது, கழுத்து, கை, கால்கள், இடுப்பு ஆகிய இடங்களில் அணிகலன்களுடன் உள்ளனர்.

சிற்பத்தில் உள்ள ஆணின் உருவ அமைப்பு கொண்டு இவரை நாயக்க ஆட்சிக்கால இப்பகுதியின் குறுநில மன்னராகக் கருதலாம்.
சிற்பத்தின் அடிப்பகுதியில் பெண்ணின் காலடியை ஒருவர் தலையில் தாங்குவதையும், பறவை, மணி ஆகியவற்றையும் கலைநயத்தோடு அமைத்துள்ளனர்.

மற்றொரு சிற்பத்தில் ஆணின் இருபுறத்திலும் இருபெண்கள் உள்ளனர். அதில் ஒரு பெண் கைகளை உயர்த்தியுள்ளார். ஆண் வலது கையிலுள்ள வாளை கீழே ஊன்றி, இடது கையை குழந்தையின் தலையில் வைத்துள்ளார். தலையில் கொண்டை, முறுக்கு மீசை, காதில் வளையங்கள், கழுத்தில் அணிகலன்கள், இடுப்பில் கத்தி, ஆகியவற்றுடன் காணப்படுகிறார். இடப்புறம் உள்ள பெண் தலை சாய்த்து வலது கையில் எலுமிச்சையும் இடது கையில் கண்ணாடியும் ஏந்தி இருக்கிறார்.

அடுத்த சிற்பத்தில் மூவரும் நின்ற நிலையில் உள்ளனர். ஆண் தலையில் கிரீடத்துடனும், அணிகலன்களுடனும், இருபுறமும் உள்ள பெண்கள் கையை ஏந்தியும் உள்ளனர்.

மேலே வெண்கொற்றக்குடை உள்ளது. சிற்பங்களில் கல்வெட்டு ஏதுமில்லை. இச்சிற்பங்கள் நாயக்கர் ஆட்சியின் தொடக்க காலமான கி.பி. 16-ம் நூற்றாண்டாக இருக்கலாம். தற்போது பாட்டையா சாமிகள் என சிலர் வருடத்துக்கு ஒருமுறை படையலிட்டு இவற்றை வழிபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்