தமிழ் மருத்துவத்தை உலகம் முழுக்கக் கொண்டுசெல்லும் வாய்ப்பை அரசு தவறவிட்டுவிட்டது: பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி

By கே.கே.மகேஷ்

இந்தப் பொதுமுடக்கக் காலத்திலும் மதுக்கடைகள் மூடல், மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு, சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் ஜாமீன் வழக்கு என்று பரபரப்பாக இயங்குபவர் வழக்கறிஞர் பாலு. பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளரான அவருடன் ஒரு பேட்டி.

பொதுமுடக்கக் காலத்தில் எப்படிப் போகிறது வாழ்க்கை... பொழுதுபோக்கிற்கு என்ன செய்கிறீர்கள்?
முதல் முறை பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டபோது, என்ன செய்வது என்று குழம்பிப்போனேன். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நம்மை, இப்படி வீட்டிற்குள்ளேயே முடக்கிவிட்டார்களே என்று. பிறகு அந்த 21 நாட்களும் புத்தக வாசிப்பு, குடும்பத்தோடு சரித்திரப் படங்களையும், சினிமாக்களையும் பார்ப்பது என்று பொழுதைக் கழித்தேன். மேலும் 19 நாட்கள் முடக்கம் நீட்டிப்பு என்று அரசு அறிவித்ததும், இந்த நாட்களை உருப்படியான வேலைகள் செய்யப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு, என்னுடைய மேஜையில் புதிதாக வாசிக்க வேண்டிய புத்தகங்களை அடுக்கி வைத்தேன். அதில், 'வீர வன்னிய குல சத்திரிய புராணம்' என்ற நூலும் ஒன்று.

நான் கடவுள் நம்பிக்கை கொண்டவனில்லை. புராணங்கள் மீதும் பெரிய நம்பிக்கை கிடையாது. ஆனால், வன்னியர் சமூகத்துக்கென்று ஒரு புராணம் உண்டு என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். பல கிராமங்களில் அந்த கதைக் கூத்தாக நடத்தப்படுவதையும் அறிவேன். ஆனால், ஏனோ இதுவரையில் அந்தப் புராணத்தை வாசித்ததில்லை. இந்தப் பொதுமுடக்க நேரத்தில் அதை வாசித்தேன். ஆச்சரியமான, மனதிற்கு நெருக்கமான பல கதாபாத்திரங்களும், சம்பவங்களும் அதில் வந்தன. எனவே, இதை மிக எளிமையான நடையில், சுருக்கமாக எனது முகநூல் பக்கத்தில் எழுத ஆரம்பித்தேன்.

சிவன் அருளால், யாகத்தீயில் இருந்து பிறந்த ருத்ர வன்னியன், அசுரனை அழித்து தேவர்களைக் காக்கிறான். இதுதான் அந்தப் புராணத்தின் ஒன் லைன். அக்னி புராணம் பொய் என்றால், ராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் எல்லாமே பொய் என்றாகிவிடும். வெறுமனே 85 பக்கம் வருகிற இந்த நூலில் பொருத்தமான ஓவியங்களைச் சேர்த்து சிறுநூலாக வெளியிடவும் ஏற்பாடு செய்துவிட்டேன். அடுத்து என்னுடைய செல்போனில் பதிவு செய்துவைத்துள்ள அத்தனை நண்பர்கள், உறவினர்களுக்கும் போன் பண்ணி நிதானமாகப் பேசி மகிழ்ந்தேன்.

டாஸ்மாக்கை மூடக்கோரிய வழக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு போன்றவற்றில் இணையம் மூலம் வாதாடிய அனுபவம் எப்படியிருந்தது?

மருத்துவப் பயன்பாடு தவிர வேறு எந்தக் காரணத்திற்கும், மது பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று நமது அரசியல் சாசனம் சொல்கிறது. இன்னொரு பக்கம், 'மதுக்கடைகளால் தனிமனித இடைவெளி குறையும், மது அதிகம் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், மது குடிப்போரால் இந்தப் பொதுமுடக்க காலத்தில் குடும்ப அமைதி குறையும்' என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஆனால், அரசியல் சாசனத்தையும் மதிக்காமல், மருத்துவர்களின் பரிந்துரையையும் மீறி அரசு மதுக்கடையைத் திறந்துள்ளது. கரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் அவற்றை மூட ஆணையிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். கடும் நிபந்தனைகளுடன் மதுக்கடைகளைத் திறக்க நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால், இரண்டே நாளில் அந்த விதிமுறைகளை அரசு சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்று மதுக்கடை திறப்பிற்குத் தடை போட்டது நீதிமன்றம்.

மருத்துவப் படிப்பில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், திரும்பவும் உச்ச நீதிமன்றம் என்று நடந்துகொண்டிருக்கிறது. ஆன்லைன் வழி வழக்கு விசாரணை என்பது விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த கட்டம். பொதுமுடக்கம் காரணமாக, மக்களின் அடிப்படை உரிமையான நீதி கோரும் உரிமை பாதிக்கப்படக்கூடாது என்பதற்கான இணைய வழியில் நீதிமன்றம் செயல்படுகிறது. இதனால் சில நன்மைகள் இருப்பதைப் போலவே சில குறைகளும் இருக்கின்றன.

உதாரணமாக, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று விரிவான காரணத்துடன் உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டது. அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது தமிழக அரசு. என்னுடன் சேர்த்து ஏறக்குறைய 18 கேவியட் மனுதாரர்கள் அந்த வழக்கில் இருந்தோம். மூத்த வழக்கறிஞர்கள் எல்லாம் இருந்தோம். ஆனால், வெறும் 40 வினாடிகளில் அந்த வழக்கை முடித்துவிட்டது உச்ச நீதிமன்றம். இணைய விசாரணையில், எங்களுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. இது ஏமாற்றம் தந்தது.

இப்போதும் சென்னையில்தான் இருக்கிறீர்களா... சொந்த ஊருக்கு வந்துவிட்டீர்களா? அங்கு கரோனா பாதிப்பு எப்படியிருக்கிறது?
சொந்த ஊரான மீன்சுருட்டி கிராமத்திற்கு வந்துவிட்டேன். அரியலூர் மாவட்டத்தின் ஜெயம்கொண்டம் தொகுதியில் உள்ள சிற்றூர் அது. சென்னையில் அறைக்குள்ளேயே அடைந்திருந்தது சலிப்பைத் தந்ததாலும், அங்கே தொற்று அதிகரித்ததாலும் கிராமத்துக்கு வந்துவிட்டோம். இங்கே பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இயற்கையோடு இணைந்து வாழ்வதால், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கிறார்கள் மக்கள்.

இங்கே பள்ளிக்கூட நண்பர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், சிறு வயதில் ஓடியாடிய இடங்கள் என்று எல்லா இடங்களுக்கும் போய் வருகிறேன். அதேபோல ஊரைச் சுற்றி இருக்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும் மனைவி, குழந்தைகளுடன் போய், அங்கேயே ரோட்டுக் கடையில் காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

பக்கத்தில் இருக்கும் அழகர்கோயில், ராஜேந்திர சோழன் வெட்டிய பொன்னேரி என்று பல இடங்களுக்குப் போய்வந்தோம். நான் வாழ்கிற காலத்தில் கரோனா வந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம், தொலைந்துபோன, விட்டுப்போன வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குரங்கு, கீரி, உடும்பு என்று பிள்ளைகளும் பார்த்து மகிழ்கிறார்கள். 1993-ல் இந்த ஊரைவிட்டு சென்னைக்குப் போனேன். 27 வருடத்துக்குப் பிறகு சொந்த ஊரில் ஒரு மாதத்திற்கு மேல் தங்கியிருக்கிறேன். நான் வந்தபோது எங்கள் வயலில் எள் அறுவடை நடந்தது. அதன் பிறகு நாங்களே எங்கள் கையால் கம்பு விதைத்து, இப்போது அதுவும் விளைச்சலுக்கு வந்துவிட்டது. வாழ்க்கையில் திரும்பக் கிடைக்குமா என்று ஏங்கிய கணம் வந்தேவிட்டது.

மருத்துவர் ராமதாஸ், 'சுக்கா... மிளகா... சமூக நீதி?' என்ற பெயரில் முகநூலில் நீண்ட தொடர் எழுதுகிறார். ஆனால், தமிழக இளைஞர்களுக்கு, ஏன் வன்னிய இளைஞர்களுக்கே கூட இட ஒதுக்கீடு குறித்த புரிதல் இருப்பதாகத் தெரியவில்லையே?
உண்மைதான். தமிழ்நாட்டை சமூக நீதி மண் என்கிறோம். ஆனால், சமூக நீதி குறித்த குறைந்தபட்ச அடிப்படை அறிவே இந்தக்கால இளைஞர்களிடம் சுத்தமாகக் கிடையாது. பிஎச்டி முடித்துவிட்டு வருகிறவர்களானாலும் சரி, புதிதாகப் பட்டம் படித்தவர்களானாலும் சரி இதுதான் நிலை. வழக்கறிஞருக்குப் படித்துவிட்டு பார் கவுன்சிலில் பதிவு செய்ய வருகிற வழக்கறிஞர்களிடம் நான் இதுபற்றி உரையாடுவதுண்டு.

அவர்களது சான்றில் எம்பிசி என்று இருப்பதைப் பார்த்துவிட்டு, "அப்படின்னா என்னப்பா?" என்று கேட்பேன். "அது கம்யூனிட்டி சார்" என்பார்கள். "அப்படியா... எம்பிசி எப்போது வந்தது?" என்று கேட்பேன். தெரியாது. "எம்பிசி-க்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு?" என்று கேட்பேன். அதுவும் தெரியாது. "தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு இருக்கிறது? எந்தெந்தப் பிரிவுக்கு எல்லாம் ஒதுக்கீடு இருக்கிறது?" என்று கேட்பேன். அதுவும் தெரியாது.

உண்மையைச் சொல்கிறேன். இங்கே இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவனுக்கு இருக்கிற புரிதல் கூட, சமூக நீதியின் பயன்பாட்டை அனுபவித்தவர்கள், அனுபவிக்க வேண்டியவர்களுக்கு இல்லை. எதிர்ப்பவன் மிகத் தெளிவாக, ரொம்ப விவரமாக இருக்கிறான். ஆனால், இவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை. இட ஒதுக்கீடு மூலம் படித்து, இட ஒதுக்கீடு மூலம் வேலையிலும் அமர்ந்து, அமைதியான நிம்மதியான வாழ்க்கை வாழ்பவர்கள்கூட தங்கள் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீட்டு வரலாற்றைச் சொல்லித் தருவதில்லை. பிசி, எம்பிசி மட்டுமல்ல, எஸ்சி மாணவர்களுக்கும் எதுவும் தெரிவதில்லை.

இந்த நேரத்தில் மருத்துவர் அய்யா எழுதிவரும், ‘சுக்கா... மிளகா... சமூக நீதி?’ என்ற தொடர் மிகமிக அவசியமானது. சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில், சமூக நீதி முழு வரலாறு இதுவரையில் தொகுக்கப்படவில்லை. திகவின் பெரியார் திடலுக்குப் போனால் கூட, முழு விவரமும் கிடைக்காது. இந்த நேரத்தில் இந்திய அளவில், தமிழக அளவில் சமூக நீதி, இட ஒதுக்கீடு பற்றிய முழு ஆவணமாக மருத்துவர் அய்யா அந்தத் தொடரை எழுதி வருகிறார். அந்த நூல் வெளிவந்தால், இளைஞர்களுக்கு நல்ல புரிதல் ஏற்படும் என்று நம்புகிறேன்.

சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்திற்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் நீங்கள். அவரது கைது தவறா? அல்லது நீதிமன்றம் சொன்னதுபோல சித்த மருத்துவ ஆராய்ச்சியில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லையா?

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவரும், அலோபதி மருத்துவருமான அன்புமணியே, "சித்த மருத்துவம், பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்று தொடர்ந்து குரல் கொடுக்கிறார். ஆனால், நம்முடைய அரசு அதில் போதிய அக்கறை காட்டவில்லை. தமிழ்நாட்டில் இப்போதும் அலோபதி சிகிச்சை பக்கமோ, மருத்துவமனை பக்கமோ எட்டிக்கூட பார்த்திராத லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

கபசுரக் குடிநீரும், நிலவேம்புக் கசாயமும் நம்முடைய மக்களைக் கரோனாவில் இருந்து பாதுகாக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அரசே வெளியில் சொல்லாமல் நோயாளிகளுக்குச் சித்த மருந்துகளைக் கொடுத்து வருகிறது. அதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம். இந்தக் கரோனா காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழ் பாரம்பரிய, சித்த மருத்துவத்தை உலகம் முழுவதும் அரசு கொண்டு போயிருக்கலாம். உலகம் முழுக்கக் கபசுரக் குடிநீரையும் கொண்டு போயிருக்கலாம். ஆனால், அதற்கான முயற்சிகள் எதையுமே அரசு செய்யவில்லை.

திருத்தணிகாசலம் சித்த மருத்துவத்தின் மீது இருந்த நம்பிக்கை காரணமாக கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டார். மற்றபடி அவர் சொன்னதில் பெரிய தவறு கிடையாது. இவ்வளவு சிறந்த சித்த மருத்துவத்தை ஏன் இந்த அரசு பயன்படுத்த மறுக்கிறது என்ற ஆதங்கத்தில் அவர் அப்படிப் பேசிவிட்டார். பாபா ராம்தேவ் என்ன மருத்துவரா? அவர் மருந்திருப்பதாகச் சொன்னதற்காக கைதா செய்தார்கள்? இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இனியேனும் நம்முடைய சித்த மருத்துவத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். அதுகுறித்து ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடு எப்படியிருக்கிறது?

இங்கே தொற்று அதிகம் இருந்தாலும் இறப்பு மிகமிகக் குறைவு. அரசின் செயல்பாடு மோசம் என்று சொல்ல முடியாது. ஆனால், அரசு இன்னும் தீவிரமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, இயற்கை மருத்துவத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு ஆயிரம் ரூபாயும், அரிசி, பருப்பும் மட்டும்தான் கிடைத்திருக்கிறது. அது போதாது.

வேலையே பார்க்காத பல துறை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வீட்டில் இருந்துகொண்டே முழுச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு நாள் வேலைக்குப் போகாவிட்டாலும், சம்பளம் கிடையாது என்ற நிலையில் இருக்கிற மக்களுக்கு நிவாரணம் இல்லை. இது நியாயமில்லை. வேலை செய்யாத அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்தாவது இவர்களுக்குக் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு பாலு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்