விருதுநகரில் நோய்த் தொற்று அதிகமுள்ள 57 பகுதிகளில் மக்கள் நடமாடத் தடை: கடைகள் திறக்க அனுமதி மறுப்பு

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்ட 57 பகுதிகளில் மக்கள் நடமாடவும், கடைகளைத் திறக்கவும் நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனை வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க இயலாத நிலையில், நோய் தொற்று அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 57 பகுதிகளில் மக்கள் நடமாடவும், வணிக நிறுவனங்கள், கடைகள் திறக்கவும் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் நாளை (12ம் தேதி) முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ராஜபாளையம் பகுதியில் செட்டியார்பட்டி, கலிங்கப்பேரி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூனாங்குளம், வத்திராயிருப்பு அருகே உள்ள மேலகோட்டையூர், சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோயில், சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி, ரிசர்வ்லைன், எம்.புதுப்பட்டி, சித்துராஜபுரம், பாறைப்பட்டி, பேராபட்டி, சீதக்காதி தெரு, முஸ்லிம்தெரு, காளியப்பாநகர், சாட்சியாபுரம், வெற்றிநைனார் தெரு, விஸ்வநத்தம் பகுதிகளில் மக்கள் நடமாடவும், கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, வெம்பக்கோட்டை அருகே செல்லம்பட்டி, எதிர்கோட்டை, கே.மடத்துப்பட்டி, பனையடிப்பட்டி, கட்டபொம்மன் தெரு பகுதிகள், சாத்தூர் அருகே போத்திரெட்டியபட்டி, பங்களாதெரு, முனிசிபல் நீதிமன்ற தெரு, விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர், அண்ணாமலை செட்டியார் தெரு, மொன்னி தெரு, முத்துராமன்பட்டி, பர்மா காலனி, லட்சுமி நகர், என்ஜிஓ காலனி, பாண்டியன் நகர், ரயில்வே பீடர் ரோடு, அய்யனார் நகர், சூலக்கரை, ஓ.கோவில்பட்டி, அல்லம்பட்டி, சத்திரரெட்டியபட்டி, மெட்டுக்குண்டு ஆகிய பகுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அருப்புக்கோட்டை பகுதியில் ஆலடிப்பட்டி, கொப்புசித்தம்பட்டி, வேலாயுதபுரம், திருநகரம், திருமேனிதெரு, வடக்குபட்டி, பொம்மக்கோட்டை, கத்தாளம்பட்டி, இ.பி.காலனி, திருச்சுழி பகுதியில் மிதிலைகுளம், உலக்குடி வீரசோழன், அ.முக்குளம் ஆகிய பகுதிளிலும் நோய் தொற்று குறையும் வரை பொதுமக்கள் நடமாடவும், வணிக நிறுவனங்கள், கடைகள் திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE