அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவது குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, கமல்ஹாசன் இன்று (ஜூலை 10) வெளியிட்ட அறிக்கை:
"ஊரடங்கில் இணையவழி வகுப்புகள் தேவையா என்பது முதல், இணைய வழி வகுப்புகளுக்கான கூடுதல் கட்டணம் வரை தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே தனியார் பள்ளிகளில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் சூழலில், ஜூலை 13-ல் இருந்து அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இது ஊரடங்கில் மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என எடுக்கும் முயற்சியாக இருந்தாலும், இணையத்தையும் மொபைலையும் மட்டுமே சார்ந்த இணைய கல்விமுறை என்பது 100% பெருநகரங்களுக்கானது என்பதை அனைவரும் அறிவார்கள்.
அப்படியிருக்க, தனியார் பள்ளிகளுக்கு இணையாக தொலைக்காட்சி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் என்பது நல்ல செய்தியாக தெரிந்தாலும், தீர யோசித்து அனைவருக்கும் பயன் தருவதற்காக எடுக்கப்பட்டதா அல்லது தனியார் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கிறது, அரசுப்பள்ளி மாணவர்கள் விடுபட்டு போகிறார்களே என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்கு மட்டும் ஆரம்பிக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழாமல் இல்லை.
பல மாதங்களுக்கு முன்னே நடைமுறைக்கு வந்து செயல்படாமல் இருக்கும் கல்வி தொலைக்காட்சியைப் பற்றிய அறிமுகம், தொலைக்காட்சி வழி கற்றலின் சாத்தியக்கூறுகள், சாதக பாதகங்கள் பற்றி எந்தவித களஆய்வும் இல்லாமல், நடைமுறை பிரச்சனைகளை பற்றி யோசிக்காமல், அவசரமாக எடுத்த முடிவாகவே தெரிகிறது. கல்வி அனைவருக்குமானது. பொருளாதார பாகுபாடுகள் தாண்டி தரமான கல்வி அனைத்து மாணவர்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் நீதி மய்யம் சில கேள்விகளை முன்வைக்கிறது.
ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்கள் எவ்வாறு ஒரு தொலைக்காட்சியின் வழி கல்வி கற்க முடியும். அதைத் தவிர்த்திட அரசின் திட்டம் என்ன?
ஆசிரியர் மட்டுமே பேசி மாணவர்கள் கேட்க மட்டுமே செய்யும் இந்த ஒரு வழிக்கல்வி முறையில் முன் அனுபவம் இல்லாத அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொலைக்காட்சி வழி வகுப்புகள் எடுக்க முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு விட்டதா?
மாணவர்களுக்கு பாடத்தில் சந்தேகங்கள் ஏற்படின் அதைத் தீர்த்திட யார் உதவி செய்வார்? முதல் தலைமுறையாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு படிக்காத பெற்றோர்களால் எப்படி உதவ முடியும்? இப்படி ஒரு தொலைக்காட்சியில் வகுப்புகள் எடுக்கப்பட போகிறது. அதனால் இந்த நேரத்தில் வீட்டின் பெரியவர்கள் தொலைக்காட்சியை குழந்தைகளுக்கு தந்து விட வேண்டும் என்ற விழிப்புணர்வு எல்லாருக்கும் ஏற்பட்டிட அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது?
தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் பாடம் எனில், அனைத்து பாடங்களுக்கும் முறையான விளக்க அட்டவணை தயாராகி விட்டதா? இன்னும் முறையான அட்டவணையை வெளியிடாதது ஏன்? ஏற்கெனவே அறிமுகப்படுத்த பட்ட கல்வி தொலைக்காட்சி பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் முடங்கி கிடக்க யார் காரணம்.?
இன்னும் டிவியே இல்லாத வீடுகள் கொண்ட கிராமங்கள், கேபிள் டிவி இணைப்பு இல்லாத வீடுகளில் உள்ள மாணவர்களுக்கான அரசின் அறிவுரை என்ன?
கற்றல் என்பது ஒவ்வொரு மாணவரின் திறன் சார்ந்தது. கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்கள் பாடத்தை புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து அரசு திட்டமிட்டுள்ளதா?
கல்விச்சாலைகளுடனும், கற்றலுடனும் மாணவர்களுக்கு இருக்கும் தொடர்பு அறுந்து விடக்கூடாது என்பதற்காக கற்பித்தல் முயற்சிகள் நல்லதாக இருந்தாலும், கல்வி, பாடநூல்களிலும், வகுப்பறையிலும் மட்டுமே இல்லை. இந்த ஊரடங்கு காலத்தினில் பாடநூல் கல்வியை போதிப்பதில் இருக்கும் சிக்கல்களை புரிந்து கொண்டு வாழ்க்கைக் கல்வியான கைவினைக் கலைகள், கலை வடிவங்கள், விவசாயம், மரபு சார்ந்த தொழில்கள், செய்முறைத்திட்டங்கள் போன்றவற்றைக் கற்க மாணவர்களை ஏன் ஊக்குவிக்கக் கூடாது?
கல்வி என்பது ஒரு சராசரி குடும்பத்தின் எதிர்கால கனவு. பின் தங்கியிருக்கும் தன் வாழ்வும், தன் குடும்பத்தின் எதிர்காலம் சிறக்க ஒவ்வொரு குடும்பமும் நம்பியிருக்கும் ஏணி. எனவே அரசு குழந்தைகள் கல்வி விஷயத்தில் அவசரம் காட்டாமல், முன்பின் முரணாக ஆணைகள் பிறப்பிக்காமல், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறையுடன் கலந்து ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி, தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது. ஏனென்றால் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலமும் முக்கியமானதே"
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago