முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் வித்தாக கருதப்படும் வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேலூர் கோட்டையில் கி.பி.1806-ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சியின் 214-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 10) அனுசரிக்கப்பட்டது. சிப்பாய் புரட்சியில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேலூர் மக்கான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண் இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட நினைவுத் தூணுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மற்றும் முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சிப்பாய் புரட்சியின் வரலாறு
இந்தியாவில் வாணிபம் செய்ய வந்த இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாடு பிடிக்கும் வேட்கையில் இறங்கினர். ஆங்கிலேயர்கள் வசமிருந்த பீரங்கிகள், துப்பாக்கிகள் இந்திய நிலப்பரப்புகளை பிடிக்க பெரிதும் உதவியாக இருந்தது. தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரும் படைகளுடன் எதிர்த்து போராடியவர் மைசூர் அரசர் திப்பு சுல்தான். கி.பி.1799-ல் ஸ்ரீரங்கபட்டினத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற நான்காம் கர்நாடக போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
இந்திய வீரர்களின் எழுச்சி
ஆங்கிலேய படையில் இந்துக்கள், முஸ்லிம்கள் என இந்தியர்கள் பலரும் சேர்க்கப்பட்டனர். இவ்வாறு சேர்ந்த இந்திய வீரர்களுக்கு சீருடை அணிந்ததுடன் மத அடையாளங்களை தவிர்க்க காதில் கடுக்கன் அணிவதையும் நெற்றியில் திருநீரு, நாமம் தரிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதுடன் தாடி, மீசையை மழிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அத்துடன் பசு, பன்றியின் கொழுப்பு தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்துவதை இந்திய வீரர்கள் எதிர்க்க ஆரம்பித்தனர். இந்திய வீரர்கள் ஒன்றிணைந்து கோட்டைக்குள் ஆங்கிலேயர்களுக்க எதிராக கலகம் புரிய திட்டம் வகுத்தனர். இதற்காக கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் மகன் பதே ஹைதரின் தலைமையை ஏற்க முடிவு செய்தனர்.
அதிகாலை தாக்குதல்
கி.பி 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் வேலூர் கோட்டையில் இந்திய வீரர்கள், ஆங்கிலேய அதிகாரிகள் தங்கியிருந்த பகுதிக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்தனர். கண்ணில் தெரிந்தவர்களை எல்லாம் சுடத் தொடங்கினர். ஏறக்குறைய 130-க்கும் குறையாமல் ஆங்கிலேய அதிகாரிகள், வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது ஜலகண்டேஸ்வரர் கோயிலாக இருக்கும் பகுதி அப்போது ஆங்கலேயர்களின் ஆயுதக்கிடங்காக இருந்தது. அதையும் கைப்பற்றிய இந்திய வீரர்கள், சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் குடும்பத்தினரை மீட்டு பதே ஹைதரை தலைவராக அறிவித்தனர். கோட்டை கொத்தளத்தில் பறந்த யூனியன் ஜாக் கொடியை இறக்கி திப்பு சுல்தானின் புலிக்கொடியையும் ஏற்றினர்.
8 மணி நேர போராட்டம்
வேலூர் கோட்டையை பறிகொடுத்த தகவல் 12 மைல் தொலைவில் ஆற்காட்டில் தங்கியிருந்த ஆங்கிலேய படைகளுக்கு தகவல் கிடைத்தது. மேஜர் சர் ராபர்ட் ரோலே கில்லஸ்பி தலைமையிலான சிறிய ரக பீரங்கிப் படை வேலூர் நோக்கி புறப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்தில் வேலூர் கோட்டையை அடைந்த கில்லஸ்பி படையினர் முன்பக்க வாசல் வழியாக செல்ல முயன்ற முயற்சி தோல்வியில் முடிந்தது.
கோட்டையின் தெற்குப்பகுதியில் இருந்த திட்டி வாசல் வழியாக சிலர் வெளியே செல்லும் தகவல் கிடைத்த கில்லஸ்பியின் படையினர் அங்கு விரைந்து சென்றனர். துப்பாக்கிகளால் சுட்டபடி திட்டி வாசல் வழியாக கோட்டைக்குள் எளிதாக நுழைந்தவர்கள் ஒரு மணி நேரத்தில் கோட்டையை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்தனர். கோட்டை கொத்தளத்தில் பறந்த புலிக்கொடியை இறக்கி மீண்டும் யூனியன் ஜாக் கொடியை ஏற்றினர். புரட்சியில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றதுடன் திப்புவின் குடும்பத்தைச் சேர்ந்த பலரையும் கொல்கத்தா சிறைக்கு இடமாற்றம் செய்தனர்.வேலூர் கோட்டையை பறிகொடுத்த ஆங்கிலேயர்கள் 8 மணி நேரத்தில் மீண்டும் கைப்பற்றினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago