புதுச்சேரி மாநிலத்தில் இன்று புதிதாக 72 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர். மேலும், காரைக்காலை சேர்ந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,272 ஆகவும், உயிரிழப்பு 17 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஜூலை 10) கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் அதிகபட்சமாக 970 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 72 பேருக்கு (7.4 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 60 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 7 பேர் ஜிப்மரிலும், 5 பேர் காரைக்காலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காரைக்காலில் 80 வயது கடந்த மூதாட்டி தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று (ஜூலை 9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 15 பேர், ஜிப்மரில் 2 பேர், காரைக்காலில் ஒருவர் என 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 637 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த அறிகுறி தெரியாத 'பாசிட்டிவ்' நோயாளிகள் 46 பேர் 'கோவிட் கேர் சென்ட'ருக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி, தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 372 பேர், ஜிப்மரில் 116 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 73 பேர், காரைக்காலில் 35 பேர், ஏனாமில் 20 பேர், மாஹேவில் 2 பேர் என மொத்தம் 618 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 23 ஆயிரத்து 515 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 21 ஆயிரத்து 982 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. இன்னும் 231 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது. பிற மாநிலங்களில் 2, 3 நாட்கள் என ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என கடந்த ஒரு வாரமாக முதல்வரிடம் வலியுறுத்தி வருகிறேன். இதுதொடர்பாக முதல்வர் இன்று முடிவு எடுப்போர் என்று நம்பிக்கை உள்ளது.
மக்கள் ஒருபுறம் முகக்கவசம் அணிந்து கொண்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்கின்றனர். எதைத் தொட்டாலும் கைகளை கழுவுகின்றனர். இருப்பினும், பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தால் வைரஸ் தொற்று வர வாய்ப்பு இல்லை. மற்ற மாநிலங்களில் 'வீட்டில் இருங்கள்... உறவினர், நண்பர்களை சந்திப்பதை தவிர்த்து விடுங்கள்... அவசர நேரத்திலேயே யாரையும் சந்திக்க வேண்டும்... இதன் மூலம் கரோனா சங்கிலி தொடரை தடுத்து நிறுத்த முடியும்' என்ற முழக்கங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
இதேபோல், புதுச்சேரியிலும் செய்தால் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும். 2 தனியார் மருத்துவக் கல்லூரியில் நேற்று முதல் கரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேவையான மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் பாதிப்பு வரக் கூடாது என தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
ஆளுநர் மாளிகையில் இருந்து தவறான செய்தி வரக் கூடாது. ஆளுநர் மாளிகையில் 37 பேருக்கு பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக நேற்று நான் தெரிவித்தேன். அதன்பிறகு, ராஜ்நிவாஸில் இருந்து 37 பேரில் யாருக்கும் தொற்று இல்லை என செய்தி வருகிறது. இது தவறான செய்தி. ஆளுநர் மாளிகையில் 'டேட்டா என்ட்ரி’ ஆபரேட்டராக வேலை செய்யும் 26 வயது நபருக்கு தொற்று இருப்பது நூறு சதவீதம் உண்மை.
எதிர்காலத்தில் இதுபோன்ற தகவல்கள் வரக் கூடாது. கடந்த 5, 6 நாட்களுக்கு முன்பு வரை ராஜ்நிவாஸில் கரோனா தொடர்பான தவறான தகவல்கள் கூறப்பட்டன. ஆனால், நான் பொதுமக்களுக்காக தினமும் காலை 10 மணி வரை வந்த தகவல்படி, மண்டல வரியாக எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது, எத்தனை பேருக்கு தொற்று வந்துள்ளது, எத்தனை பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சரியாக தகவலை தெரிவித்து வருகிறேன். எனவே, மக்களுக்கு தவறான தகவலை யாரும் கூறி குழப்ப வேண்டாம்" என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
கரோனா தொற்றுக்கு பல்கலைக்கழக ஊழியர் உயிரிழப்பு
இதனிடையே புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 57 வயதுடைய முதுநிலை உதவியாளருக்கு கடந்த 24 ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், கரோனா அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டது.
இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் ஜிப்மர் அருகே உள்ள தமிழக பகுதியான வசந்தபுரத்தை நிரந்தர முகவரியாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே தற்போது வரை இது புதுச்சேரி பட்டியலில் இடம்பெறவில்லை. தமிழகப்பட்டியலில் சேர்க்கப்படும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago