இருண்டு கிடக்கும் பட்டு நெசவாளர் வாழ்வு!- அந்தியூர் நெசவாளர்கள் வேதனை

By கா.சு.வேலாயுதன்

“தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து தொழில் செய்யலாம் என்று அரசு அறிவித்திருந்தாலும், பெரும்பாலான தொழில்கள் முடங்கித்தான் கிடக்கின்றன. குறிப்பாக, காலங்காலமாய் தனிமனித இடைவெளியுடன் வீட்டிலேயே செய்யப்படும் பட்டு நெசவுத் தொழிலே பாழ்பட்டுக் கிடக்கிறது” என்று வேதனைப்படுகிறார்கள் அந்தியூர், தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நெசவாளிகள்.

ஒரு காலத்தில் வீரப்பனால் பிரபலமான ஊர் அந்தியூர். கிராமங்கள் சூழ்ந்திருக்கும் இந்த ஊர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே அடிப்படைத் தொழில். அதற்கடுத்தபடியாக உள்ளது பட்டு நெசவுத் தொழில்தான். தவிட்டுப்பாளையம், நகலூர், மைக்கேல்பாளையம், சமத்துவபுரம், சந்தியாபாளையம், பிரம்மதேசம், ஆலாம்பாளையம், வெள்ளையம்பாளையம் என அந்தியூரைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறி பட்டு சேலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

குறிப்பாக, தவிட்டுப்பாளையத்தில் மட்டும் 2 ஆயிரம் பட்டு நெசவுக்கான கைத்தறிகள் இயங்கி வந்தன. பொதுமுடக்கத்துக்குப் பின்னர், அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தறி சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

“முன்பெல்லாம் ஒன்றிரண்டு நாட்களுக்கு ஒரு பட்டு சேலை நெய்து கொடுப்போம். ரகத்தைப் பொறுத்து ஒரு சேலைக்கு ரூ. 1,300 முதல் ரூ. 1,800 வரை கிடைக்கும். இப்போது வாரம் முழுக்க சேர்ந்து ஒரு சேலை நெய்து வாங்குவதே பெரிய விஷயமாக இருக்கிறது. தவிர ஒரு சேலைக்குக் கூலியாக ரூ.1,250 கொடுத்தவர்கள் அதில் ரூ. 250 குறைத்துவிட்டார்கள். மீதித் தொகையையும் முழுதாகத் தருவதில்லை. இந்தக் கொடுமையினால் பெருவாரியான நெசவாளிகள் தறி நெய்வதை விட்டுவிட்டு கட்டிட வேலை, எலெக்ட்ரீசியன் வேலைகளுக்குச் சென்றுவிட்டார்கள். பலர் 100 நாள் வேலைத் திட்டத்தையே நம்பியிருக்கிறார்கள்” என்கிறார் தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நெசவாளி ப.கோவிந்தராஜ்.

தொடர்ந்து பேசிய அவர், “இங்கு நெய்யப்படும் பட்டு சேலைகளை ஆயிரக்கணக்கில் ஹைதராபாத், பெங்களூரு, கொல்லேகால் ஆகிய நகரங்களுக்கு அனுப்புவோம். இப்போது அது சுத்தமாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், நெய்த சேலைகளே அங்கங்கே ஜவுளி உற்பத்தியாளர்களிடம் குவிந்து கிடக்கின்றன. அப்புறம் புதிதாக எப்படி நெய்ய ஆர்டர் கொடுப்பார்கள்?

இங்கே மட்டுமல்ல, நெசவாளிகள் நிறைந்துள்ள தொட்டாம்பாளையம், புளியம்பட்டி, நால்ரோடு, சிறுமுகை, சதுமுகை, பசுவம்பாளையம் எனப் பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற ஊர்களில் எல்லாம் இதே நிலைதான். மேற்சொன்ன ஒவ்வொரு ஊரிலும் 2 ஆயிரம் தறிக்காரர்களுக்கு மேல் இருக்கிறார்கள். ஒரு தறியில் அந்த குடும்பத் தலைவர் மட்டுமின்றி, அவரது மனைவி, அம்மா என பலரும் 12 மணி நேரம் பாடுபடுவார்கள். அவர்களுக்கு வேறு தொழிலும் தெரியாது. இப்போது அத்தனை பேரும் முடங்கிப் போயிருக்கிறார்கள். சிலர் ஈரோடுக்கு விசைத்தறி ஓட்டுவதற்காகச் சென்று வந்தார்கள். இப்போது அங்கேயும் வேலை இல்லை.

அரசு ஏதாவது நிவாரணம் கொடுத்தால்கூட எங்களைப் பொறுத்தவரை அதுவே தற்காலிகமானதுதான். நாடு பொதுமுடக்கத்திலிருந்து அத்தனை பேரையும் விடுவித்தால்தான் மக்களுக்கு வாங்கும் சக்தி வரும். தேங்கிக் கிடக்கும் பட்டு சேலைகள் எல்லாம் மாநிலம் விட்டு மாநிலம் போகும். அப்போதுதான் எங்களால் மீண்டுவர முடியும். அரசின் பார்வை எங்கள் மீது விழுமா?” என்றார் பெருமூச்சுடன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்