'அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்' திட்டம்: நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்காவிட்டால் வழக்கு: ஸ்டாலின் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் நிதியை ஊராட்சி மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். தவறினால் திமுக இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும், என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“கிராமப்புறங்களில் 'அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்' திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விடும் அதிமுக அரசின் முடிவிற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'அனைவருக்கும் குழாய் மூலம் மார்ச் 2024-க்குள் குடிநீர் வழங்க வேண்டும்' என்ற 'ஜல் சக்தி மிஷன்' திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களுக்கு ஊரடங்கு நேரத்தில் - கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி 2,264.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டத்திற்கான நிதியை நேரடியாக ஊராட்சி மன்றங்களுக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்தலே நடத்த விடாமல் கொள்ளையடித்தது போல், இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தும், ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளையடிக்க நினைப்பது வேதனைக்குரியது.

டெண்டர் 'கமிஷனை' மொத்தமாக ஒரே இடத்தில் வசூல் செய்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விட வேண்டும் என்று நினைப்பது 'பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின்' அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்டதாகும்.

இத்திட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் ஜூலை 6-ம் தேதியன்று அவசர அவசரமாக ஒரு 'காணொலிக் காட்சி" மூலம் ஆலோசனையை நடத்தி, “15.7.2020-ம் தேதிக்குள் இதற்கான மாவட்ட அளவிலான செயல் திட்டங்களைக் கொடுக்க வேண்டும்”, “31.7.2020-ம் தேதிக்குள் டெண்டர்களை விட்டு விட வேண்டும்”, “சில பணிகளை 2021 மார்ச் 31-ம் தேதிக்குள் முடித்து பில் தொகையைக் கேட்டுப் பெற வேண்டும்” என்றெல்லாம் இவ்வளவு அவசர வழிகாட்டுதல்களை வழங்குவது ஏன்?

குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களைச் சார்ந்தது. திமுக சார்பில் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வாதாடி கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடைபெற்று முடிந்து, இன்றைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இடம் பெற்று இருக்கிறார்கள். ஊராட்சி மன்றங்கள், 'கட்சி சார்பற்ற தேர்தல்' என்றாலும், திமுகவினர் மட்டுமின்றி, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் மாவட்ட அளவில் டெண்டர் விட்டு- உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைக் குறைத்து- ஊராட்சி மன்றத் தலைவர்களின் பொறுப்புகளைக் கேலிக்கூத்தாக்கும் செயலில் ஈடுபடுவது அதிமுக அரசுக்கு வெட்கக் கேடான செயலாகத் தோன்றவில்லையா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைச் சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு, இத்திட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் அதிகாரியும், துறையின் அரசு செயலாளரும் – ஏன், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கூட 'மனப்பூர்வமாக' ஒத்துழைப்பு வழங்குவது அதிர்ச்சியளிக்கிறது.

ஆகவே, 19 லட்சத்து 74 ஆயிரத்து 985 வீடுகளுக்கு, 'குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும்' ஜல் சக்தி திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 2,264 கோடி ரூபாய் நிதியை ஊராட்சி மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி ஒதுக்கீடு செய்யத் தவறினால் திமுக இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனாவைப் பயன்படுத்தி அரசுத் திட்டங்களில்- அதுவும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்குச் சென்றடையும்- தவிக்கும் வாய்க்கும் தண்ணீர் வழங்கும் திட்டங்களில் கூட கடைசி நிமிடக் ('லாஸ்ட் மினிட்') கொள்ளையடிக்கத் துடிக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் சுருட்டல் முயற்சிக்கு ஒத்துழைத்து- சட்டத்தின் பிடியில் நாளைக்குச் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்று சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரி மற்றும் துறை அரசு செயலாளர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்