சென்னையுடன் ஒப்பிடுகையில் மதுரையில் இரு மடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன் என்று முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''மாநில அரசு, கரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென் மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன. இதனைப் பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும் அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாதது வருத்தமளிக்கிறது.
சென்னையில் தொற்றால் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,000 ஆக இருந்தபோது இறந்தோர் எண்ணிக்கை 24 ஆக மட்டுமே இருந்தது. ஆனால், மதுரையில் அதே 3000-ஐ எட்டியபோது, இறந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக இருந்தது. தொற்று பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 5,000 ஆக இருந்தபோது சென்னையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக இருந்தது. ஆனால், அதே அளவு பாதிப்பை எட்டியபோது மதுரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக இருக்கிறது.
ஒரே நோய், சென்னையைவிட மதுரையில் இரண்டு மடங்கு இறப்பினை நிகழ்த்துவது எதனால்? கரோனாவுக்கு மதுரையின் மீது அவ்வளவு கோபம் ஏன்? இதனைக் கரோனாவால் நிகழும் மரணமாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. அதனைக் கையாள்வதில் இருக்கும் நிர்வாகப் போதாமையாலும் கவனமின்மையாலும் நிகழும் மரணமாகவே எடுத்துக்கொள்ள முடியும்.
உதாரணமாக, சென்னையில் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்தவுடன் பிற மாவட்டங்களில் இருந்த ஆம்புலன்ஸ்கள் வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டன. மதுரையிலும் அதனைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இருந்து சுமார் 40 ஆம்புலன்ஸுகளும் ஏறக்குறைய 200 ஊழியர்களும் சென்னைக்கு அனுப்பப்பட்டனர். அவசரத் தேவைக்காக அதனைச் செய்ததில் தவறில்லை.
ஆனால், கடந்த இரு வாரங்களாக மதுரையில் தொற்று எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது. இப்பொழுது தென்மாவட்டங்கள் முழுவதும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், சென்னைக்கு அனுப்பப்பட்ட ஆம்புலன்ஸுகளும் ஊழியர்களும் ஒரு மாதமாகியும் திரும்ப அனுப்பப்படவில்லை. இதனால் மதுரையில் கடும் பாதிப்பினை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நோய்த் தொற்றாளர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்க நான்கு முதல் ஐந்து மணி நேரமாகிறது. முன்னிரவில் போன் செய்தால் காலையில்தான் வண்டி வருகிறது. ஆம்புலன்ஸ் தேவைக்காக போன் செய்பவர்கள் பல மடங்காக அதிகரித்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸுகளோ ஏற்கெனவே இருந்ததைவிடக் குறைவாகத்தான் இயக்கப்படுகின்றன. சக்கிமங்களத்தில் இருக்கும் ஒரு நோயாளிக்காக எழுமலையில் இருந்து வண்டி வருகிறது. தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அதே வண்டி, கிருமி நீக்கம்கூட செய்யப்படாமல், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை ஏற்றிச்செல்லும் நிலைகூட சிலநேரங்களில் ஏற்படுவதாகச் சொல்லப்படுவது அச்சமளிக்கிறது.
ஆம்புலன்ஸ் பிரச்சினை மிக மிக அடிப்படையானது. ஆனால், இதனை மாநில அரசு முறையாகக் கையாளவில்லை. சென்னைக்குத் தேவையான ஆம்புலன்ஸுகளுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பிற மாவட்டங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆம்புலன்ஸ்களை உடனடியாக அந்தந்த மாவட்டங்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். சென்னையுடன் ஒப்பிடுகையில் இப்படிப் பல விஷயங்களில் மதுரை பின்தங்கி நிற்கிறது.
சோதனை மேற்கொள்வதில் கூட பெரும் அலட்சியப் போக்கு நிலவுகிறது. மதுரையில் நாள்தோறும் 500க்கும் குறைவாகவே சோதனைகள் நடந்தன. கடுமையாகத் தலையீடு செய்த பின்னர் அதனை 1,500 ஆக உயர்த்தினர். தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம், இப்பொழுது நாள்தோறும் 2,100 என்ற எண்ணிக்கையில் மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது. குறைந்தபட்சம் நாள்தோறும் 3,000 சோதனைகள் நடத்தினால் மட்டுமே மதுரையில் பரவும் தொற்றின் வேகத்தினைக் கட்டுப்படுத்த முடியும்.
சென்னையில் நிகழ்ந்ததைவிட இரு மடங்கு மரணங்கள் மதுரையில் நிகழ என்ன காரணம்? நோயாளிகளைக் கண்டறிவது, அவர்களை உரிய முறையில் மருத்துவமனைக்குக் கொண்டுசேர்ப்பது, அவர்களுக்குத் தேவையான சிகிச்சையைக் கொடுப்பது ஆகியவற்றில் எதில் பிரச்சினை இருக்கிறது, அதனைச் சரிசெய்ய மாநில அரசு செய்யும் முயற்சிகள் என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago