மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு விவகாரம்: தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை என்றென்றும் காக்கும் அரணாக விளங்கும்; அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

By செய்திப்பிரிவு

தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை என்றென்றும் காக்கும் அரணாக விளங்கும் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 9) வெளியிட்ட அறிக்கை:

"இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும், பட்டியல் பிரிவினருக்கு 15 விழுக்காடும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடும் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 50.5 விழுக்காடு என்ற இட ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அதாவது, எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு கடைபிடித்து வருகிறது.

ஆனால், அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும் போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக பின்பற்றுவதில்லை என்ற தகவல் தெரியவந்தவுடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றுமாறு கோரி மத்திய அரசுக்கு கடந்த 14.3.2018 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டது.

பின் மேற்கண்ட கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து எவ்வித பதிலும் பெறப்படாததால், இக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு 13.1.2020 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டது.

அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும் போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் சலோனி குமாரி மற்றும் ஒருவர் தொடர்ந்த வழக்கு (எண். 596 / 2015) நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் ஒரு மனுதாரராக தன்னை சேர்த்துக் கொண்டது.

இப்பொருள் தொடர்பாக கடந்த 6.6.2020 அன்று தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாடு அரசினால் ஒப்பளிக்கப்படும் இடங்களில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவதைப்போல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி (பிற்படுத்தப்பட்டோர் 30 விழுக்காடு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 விழுக்காடு) உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு (வழக்கு எண்.552/2020 ) தொடரப்பட்டது.

இவ்வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது 11.6.2020 நாளிட்ட தீர்ப்பில் இக்கோரிக்கை தொடர்பாக மனுதாரர்களை உயர் நீதிமன்றத்தினை அணுகுமாறு அறிவுறுத்தியது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திலும் தனியாக ஒரு வழக்கு (எண் 8361/2020) கடந்த 16.6.2020 அன்று தமிழ்நாடு அரசால் தொடரப்பட்டு, இன்று (ஜூலை 9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்திலும் 50 விழுக்காடு கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் தனியாக மீண்டும் ஒரு வழக்கினை (எண்.13644/2020) கடந்த 2-ம் தேதி தொடர்ந்து, மேற்படி வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஜெயலலிதாவும், அவரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஏழை எளிய மாணவர்கள், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வதற்கு தடையாக இருக்கும் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நேற்றைக்குக் கூட (ஜூலை 8) தமிழக முதல்வர் பிரதமருக்கு தற்போதுள்ள காலகட்டத்தில் நீட் தேர்வினை நடத்துவது மிகவும் கடினம் என்றும், பிளஸ் 2 தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் சேர்க்கைக்கு மத்திய அரசு 27% இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. இந்த இட ஒதுக்கீடு வளமான பிரிவினருக்கு (Creamy Layer) வழங்கப்படுவதில்லை. வளமான பிரிவினர் அளவு கோல்களில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு அளவு கோல்.

அதன்படி, பெற்றோரின் ஆண்டு வருமானம் தற்போது 8 லட்சம் ரூபாய் உச்ச வரம்பாக உள்ளது. இந்த வருமானத்தைக் கணக்கிடும் போது, இதுவரை ஊதியம் மற்றும் விவசாய வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

தற்போது மத்திய அரசு, ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை வளமான பிரிவினரை நீக்கம் செய்வதற்கான கணக்கில் எடுத்துக் கொள்ளப்போவதாக செய்திகள் வந்துள்ளன. தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையமும் இதனை பரிந்துரை செய்யும் என்ற செய்திகளும் வந்துள்ளன.

தமிழ்நாட்டில் பல்லாண்டு காலமாக பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கென இடஒதுக்கீடு கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பணிகளில் நியமனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை ஆகியவற்றிற்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, சமூக நீதியை காப்பதில் ஜெயலலிதாவும், தமிழக அரசும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. மண்டல் குழு வழக்குகளில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால், 69 சதவீத இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு (கல்வி நிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்கள் அல்லது இடங்களை ஒதுக்கீடு செய்தல்) சட்டத்தினை நிறைவேற்றியது.

பின்னர், அரசமைப்புச் சட்டத்தின் 31பி-ன்கீழ் பாதுகாப்பு பெறும் பொருட்டு, தமிழ்நாடு சட்டம் 45 /1994, இந்திய அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு முறையில், கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை மற்றும் மாநில அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்கள் ஆகியவற்றில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல், 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இட ஒதுக்கீடு சமூக, கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகத்தை விளைவிக்கும் என கருதப்படுகிறது. மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வருமான உச்ச வரம்பில், ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தற்போது பின்பற்றப்பட்டு வரும் வளமான பிரிவினருக்கு உள்ள நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று பிரதமரை முதல்வர் கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசு சமூக நீதியை காப்பதுடன் பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் நலனை காப்பதிலும் முன்னோடி அரசாக உள்ளது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை என்றென்றும் காக்கும் அரணாக விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்