கோவையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட முதியவர் ஒருவர், மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘ஆத்மா’ அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் உடனடியாகச் செயல்பட்டு அவரை அழைத்து வந்தனர்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. சோதனையில், கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. எனவே, வார்டிலேயே அவரைத் தனிமைப்படுத்திய மருத்துவமனை நிர்வாகம், கரோனா சிகிச்சை மையமான கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்தது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது குடும்பத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணிக்கு யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அந்த முதியவர், யாரிடமோ போனை வாங்கி, தனது மகனை அழைத்துப் பேசியிருக்கிறார். பக்கத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதாகவும், வந்து அழைத்துச் செல்லும்படியும் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய மகன், தனது தந்தையால் மற்றவர்களுக்கும் தொற்று பரவிவிடும் என்றுணர்ந்து ‘ஆத்மா’ அறக்கட்டளைக்குத் தகவல் தெரிவித்தார். வாட்ஸ்-அப் மூலம் தன் தந்தையின் புகைப்படத்தையும் அனுப்பிவைத்தார்.
சற்று நேரத்தில் அந்த அறக்கட்டளையின் தன்னார்வலர்கள், முதியவரைத் தீவிரமாகத் தேடி அலைந்தனர். பின்னர், சிங்காநல்லூர் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தின் இருக்கையில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டனர். உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஆய்வாளர் முனீஸ்வரன், எஸ்.ஐ அர்ஜூன்குமார், தலைமைக் காவலர்கள் ராஜேஷ், சுகுமார் ஆகியோர் ஜீப்பில் அந்த முதியவர் இருக்குமிடத்துக்கு வந்தனர்.
» மன அழுத்தத்தைக் குறைக்க திண்டுக்கல் போலீஸாருக்கு யோகா பயிற்சி: டிஐஜி முத்துச்சாமி பங்கேற்பு
» கரோனா தொற்றால் சிகிச்சை: அமைச்சர் தங்கமணியிடம் ஸ்டாலின் நலம் விசாரிப்பு
இதற்கிடையே, மருத்துவமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட, 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. முதியவரிடம் பேசி அவரைச் சமாதானம் செய்த சுகாதாரத் துறை ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிறகு, அவர் அமர்ந்திருந்த பேருந்து நிறுத்த இருக்கைகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன.
கரோனா தொற்றுக்குள்ளான முதியவரைச் சேர்க்க உதவிய ‘ஆத்மா’ அறக்கட்டளை, கோவையில் ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. தற்போது, இப்படித் தப்பியோடும் கரோனா நோயாளிகளைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது.
இதுகுறித்து, நம்மிடம் பேசிய ‘ஆத்மா’ அறக்கட்டளை நிர்வாகி கந்தவேலன், “கரோனாவுக்காக முதல் ஊரடங்கு போடப்பட்ட பின்பு 13-வது நாள் இப்படித்தான் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கரோனா நோயாளி இஎஸ்ஐ மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவரை ஒரே நாளில் கண்டுபிடித்துக் கொடுத்தோம்.
கோவையில் மட்டுமல்ல, பக்கத்து மாவட்டங்களிலும் எங்கள் தன்னார்வலர்கள் பலர் இருக்கிறார்கள். யாராவது கரோனா தொற்றுடன் காணாமல் போனாலோ, வழிதவறிச் சென்றாலோ எங்களுக்குத் தகவல் சொல்லலாம். அந்தந்த ஊரில் உள்ள எங்கள் தன்னார்வலர்களை வைத்து அவர்களைக் கண்டுபிடிக்க முயல்கிறோம். இப்படி ஒருவரைக் கண்டுபிடிப்பதன் மூலம் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க முடியும் அல்லவா?” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago