விளைநிலங்களில் எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைக்கும் திட்டம்; ஜெயலலிதா போன்று முடிவெடுங்கள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

விளைநிலங்களில் குழாய்கள் பதிப்பதைக் கைவிடவேண்டும். இந்த விஷயத்தில் ஏற்கெனவே கொச்சி மங்களூரு குழாய் பதிக்கும் திட்டத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா நடந்துகொண்டதுபோல் தமிழக அரசு நடக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடகத்தின் தேவனகொந்தி நகருக்கு எரிபொருள் கொண்டு செல்வதற்காக தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு (Irugur-Devangonthi Pipeline Project - IDPL) விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயல்வது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகிலுள்ள தேவனகொந்தி பகுதியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்குத் தேவைப்படும் பெட்ரோலைக் கொண்டு செல்வதற்காக கோவை மாவட்டம் இருகூரில் இருந்து தேவனகொந்தி நகருக்கு எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைக்க பாரத் பெட்ரோலிய நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இந்த எண்ணெய்க் குழாய்ப் பாதை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக மொத்தம் 294 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படவுள்ளது. எண்ணெய்க் குழாய்ப் பாதையின் பெரும்பகுதி விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதால், அத்திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உழவர்களின் எதிர்ப்பு காரணமாக சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த வாரத்தில் நடைபெறுவதாக இருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், இத்திட்டத்தை எப்படியாவது செயல்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுத் தரப்பிலிருந்து அளிக்கப்படும் அழுத்தம் காரணமாக, எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டங்களை மீண்டும் நடத்துவதற்காக 7 மாவட்டங்களின் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இத்திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் தொழிற்திட்டங்கள் அவசியமாகும். அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருட்கள் கட்டாயம் தேவை. அதனால், அவற்றைக் கொண்டு செல்ல எண்ணெய் & எரிவாயுக் குழாய்ப் பாதைகள் அமைக்கப்படுவதை எதிர்ப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை.

அதேநேரத்தில், அவ்வாறு அமைக்கப்படும் குழாய்ப் பாதைகள் நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது; வேளாண் விளைநிலங்கள் வழியாக குழாய்ப் பாதைகள் அமைக்கப்படக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும்.

இருகூர் & தேவனகொந்தி குழாய்ப் பாதையின் பெரும்பகுதி விளைநிலங்களில்தான் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், 7 மாவட்டங்களில் உள்ள 40 ஆயிரத்திற்கும் கூடுதலான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். குழாய்ப் பாதை அமைக்கப்படும் பகுதிகளின் நில உரிமையை பாரத் பெட்ரோலிய நிறுவனம், சந்தை மதிப்பை விட மிகக்குறைந்த தொகைக்கு கைப்பற்றிக் கொள்ளும்.

அதன்பின் குழாய்ப் பாதை அமைந்துள்ள பகுதிகளில் உழவர்களால் வேளாண்மை சார்ந்த பணிகளை மேற்கொள்ள இயலாது. அதுமட்டுமின்றி, வயல்வெளிகளில் எண்ணெய்க் குழாய்களை அமைப்பதால் விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையாகப் பாதிப்புகள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதே திட்டத்தை கோவை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாகச் செயல்படுத்தினால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதை விடுத்து விளைநிலங்கள் வழியாக எண்ணெய்க் குழாய்ப் பாதைகளை அமைக்க பாரத் பெட்ரோலிய நிறுவனம் துடிப்பதும், அதற்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவாக இருப்பதும் நியாயமற்றவை. மத்திய, மாநில அரசுகள் இந்த நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பத்தாண்டுகளுக்கு முன் கொச்சி - மங்களூரு இடையிலான கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய்ப் பாதை மேற்கண்ட 7 மாவட்டங்களின் வழியாகச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது. 2012-13 ஆம் ஆண்டில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டபோது, உழவர்களுடன் இணைந்து பாமகதான் முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பியது. அதைத் தொடர்ந்து அத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை விதித்தார். அதன்பின் அத்திட்டத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தாலும் கூட, இன்று வரை அந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்படவில்லை.

அதைப்போலவே, இருகூர் - தேவனகொந்தி எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்திலும் உழவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தை விளைநிலங்களுக்குப் பதிலாக தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்படுத்தும்படி பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுரை வழங்க வேண்டும். அதன் மூலம் உழவர்கள் நலனைக் காக்க வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்