கோவையில் கரோனாவால் முகம் மாறும் காய்கனி வியாபாரம்: புதியவர்கள் வரவால் வியாபாரத்தைக் குறைக்கும் கடைக்காரர்கள்

By கா.சு.வேலாயுதன்

கரோனா காலத்தில் வேலையிழந்தவர்கள், தொழில் முடக்கத்தால் வருமானம் இழந்தவர்கள் என்று பலரும் மாற்று வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சாலையோரங்களில் புதிதாகக் காய்கனிக் கடைகளைப் போடுகிறார்கள்.

கோவையில் இப்படிப் புதிது புதிதாக நிறைய காய்கனிக் கடைகளைப் பார்க்க முடிகிறது. காந்திபுரம் சாலையோரம், முன்பு ஷீட் கவர், ரெக்சின் பேக் விற்றுக்கொண்டிருந்த ஓர் இளைஞர், தற்போது தனது மொபட்டில் ஒரு பெரிய பெட்டியைக் கட்டி தக்காளி, கத்திரிக்காய் வியாபாரம் செய்கிறார். அவரிடம் பேசினேன்.

“என்னண்ணா பண்றது. மருந்துக்குக்கூட ரெக்சின் பேக் விற்க மாட்டேங்குது. வேற வழியில்லைன்னு வண்டியில காய்க் கூடையைக் கட்டீட்டேன். பெரிசா லாபம் இல்லை. வீட்டுச் செலவுக்குக் கொஞ்சம் காசு கிடைக்குது” என்றார் அந்த இளைஞர். வீடுகளுக்கு மார்பிள், டைல்ஸ் ஒட்டும் ஒருவர் சாலையோரம் கடை விரித்திருக்கிறார். “கட்டிட வேலையே சுத்தமா படுத்துடுச்சு. நிறையப் பேர் கட்டிடம் கட்டி பாதியிலயும் நிப்பாட்டீ வச்சிருக்காங்க. பிழைக்க வழி வேணும்ல. அதான் காய் விற்க ஆரம்பிச்சுட்டேன்” என்றார் அவர்.

மறுபுறம், இப்படிப் பலரும் புதிதாகக் காய்கனி விற்பனையில் இறங்கிவிட்டதால் வழக்கமாகக் காய்கனி விற்பனையில் ஈடுபட்டு வந்த பலர் கொள்முதலையே குறைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. சிலர் வியாபாரத்தையே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். கோவையில் குளத்துப்பாளையத்தில் காய்கனி வியாபாரம் செய்துவரும் ஒரு கடைக்காரர், “முன்பு மாதிரி நான் காய்களை வாங்கி கடையில் வைப்பதேயில்லை. ரெகுலரா வர்ற கஸ்டமருக்காக அளவா வாங்கி வைக்கிறேன். அதுவே மீதியாகி விடுகிறது. இப்போ தெருவுக்கு தெரு பத்துப் பேர் காய்கனி விற்கிறார்கள். அதனால் என் கடைக்கு ஆட்கள் வருவது குறைவுதான்” என்றார்.

கோவை பழையூர், ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம் பகுதிகளில், பல ஆண்டுகளாக வண்டிகட்டிக் காய்கனி விற்று வந்த மாரிமுத்துவிடம் பேசினேன். “இருபது வருஷமா வியாபாரம் நடத்தறேன். ஒரு நாள்கூட கை நட்டப்பட்டதில்லை. இப்ப நிலைமை மாறிடுச்சு. ஆளாளுக்கு ஒரு தராசைத் தூக்கிட்டு, வண்டியத் தள்ளீட்டு கிளம்பீட்டாங்க. ஆனா, காய்கனியை எப்படி விவசாயிகிட்ட, வியாபாரிக்கிட்ட வாங்கணும்னு ஒரு நீக்குப்போக்கு இருக்கு. கடைசியில வந்த விலைக்கு கொட்டீட்டு போக வேண்டிய சூழ்நிலைகூட வரும். புதுசா இந்தத் தொழில்ல இறங்கியிருக்கிறவங்களால இதையெல்லாம் அத்தனை எளிதாகப் புரிஞ்சுக்க முடியாது.

ஆனாலும், எப்படியாவது பொழைச்சாகணும்னு இதைச் செய்றாங்க. அவங்களைக் குறை சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் இப்ப காய்கனி வியாபாரம் செஞ்சா இருக்கிறதும் போயிடும்னு நான் கொஞ்ச நாளைக்கு வியாபாரத்தை விட்டுட்டேன்” என்றார்.

இப்படியான சூழலில் மொத்த வியாபாரிகளுக்குக் காய்கனி வியாபாரம் எப்படி நடக்கிறது?
கோவையைப் பொறுத்தவரை உக்கடம் ராமர் கோயில், டவுன்ஹால் தியாகி குமரன் மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் உழவர் சந்தைகள், சாய்பாபா கோயில் அருகே உள்ள எம்ஜிஆர் மார்க்கெட், 8-ம் நம்பர் காய்கனி மார்க்கெட் போன்ற பகுதிகளில் இருக்கும் காய்கனிக் கடைகள் எப்போதும் பரபரப்பாக இயங்கும்.

பொதுமுடக்கம் காரணமாக இவை தற்காலிகமாக மூடப்பட்டு காந்திபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் காய்கனி மொத்த வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு மாதத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மூன்று கடைகளுக்கு ஒரு கடை வீதம் அவரவர் பழைய மார்க்கெட் பகுதிகளிலேயே கடைகள் வைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதிலும் நிறைய சிக்கல்களே இருந்தன. கோவையில் பெரிய காய்கனி மார்க்கெட்டுகளில் ஒன்றான எம்ஜிஆர் மார்க்கெட்டில் பலருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அந்த மார்க்கெட்டே பூட்டி சீல் வைக்கப்பட்டது. 300 கடைகள் இருந்த இடத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 100 கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டாலும் அதில் எப்போதும் 20 கடைகள் பூட்டியே கிடக்கின்றன. நஷ்டம்தான் வரும் என்று பல வியாபாரிகள் தயங்குகிறார்கள்.

உதாரணமாக, கோவை உக்கடம் ராமர் கோயில் அருகே இருந்த காய்கனி மார்க்கெட் கடைகள் புனரமைப்பு காரணமாக தற்காலிகமாகப் பக்கத்தில் உள்ள மீன் மார்க்கெட் லாரிப் பேட்டைக்கு மாற்றப்பட்டுள்ளன. ராமர் கோயில் வீதியில் 360 கடைகள் இருந்ததற்குப் பதில் இங்கே 120 கடைகளே அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் இங்கே 80- 90 கடைகளே அன்றாடம் இயங்குகின்றன.

இதுகுறித்து, இங்கு மொத்த வியாபாரம் செய்துவரும் காய்கனிக் கடைக்காரர் காஜா கூறும்போது, “ராமர் கோயில்கிட்ட கடை இருந்தபோது தினசரி காய்கனிகள் 100 டன்னுக்கு மேல் வந்திறங்கும். கரோனா முடக்கம் அறிவிக்கப்பட்டு 10 நாளுக்குக் கடைகள் அங்கேதான் இருந்தது. அப்பவே தினசரி காய்கனி வரத்து 30 டன்னாகக் குறைஞ்சதது. அப்புறம் பஸ் ஸ்டாண்ட், அதுக்கப்புறம் இங்கேன்னு வந்தோம்.

இப்ப அதிகபட்சம் 20 டன் காய்கனிகள் வந்தாலே அதிகம். அதிலும் பாதி விற்பதில்லை. ஓட்டல்கள், கல்யாண விசேஷங்கள் எதுவுமே இல்லை என்பதால் மீதியாகும் காய்கனிகளைக் குப்பையில்தான் போட வேண்டியிருக்கிறது. ஒரு நாளைக்குக் கடை நடத்தினா முந்தியெல்லாம் ரூ. 2 ஆயிரம் லாபம்னு எடுத்து வைக்கலாம். இப்ப ஒவ்வொரு நாளும் ரூ. 2 ஆயிரம் நஷ்டம்னுதான் அழ வேண்டியிருக்கு” என்றார்.

புதிதாகக் காய்கனி வியாபாரம் செய்பவர்கள் பற்றிக் கேட்டபோது, “தினமும் மொத்தமா காய்கனி வாங்க புது ஆளுக நாலஞ்சு பேர் வர்றாங்க. தொழில் நஷ்டம், வேலை போய்டுச்சுன்னு சொல்றாங்க. காய்கனி எடுத்து எப்படி விற்கிறதுன்னு எங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கிறாங்க. ஆனா, பலர் இதைத் தொடர்ந்து செய்றதில்லை. 10 பேர்ல 5 பேர்தான் திரும்ப வந்து காய்கனிகளை மொத்தமா வாங்குறாங்க. ரெண்டு மூணு நாள்ல அவங்களும் காணாமப் போறாங்க. புதுசா ஆட்கள் வர்றாங்க. அவங்களும் சீக்கிரமா காணாமப் போய் புதுசு புதுசா வர்றாங்க.

அப்படியொரு விநோதமான தொழிலா இது மாறிட்டிருக்கு. இன்னும் இந்தக் கரோனா காலம் என்னென்ன மாற்றத்தைக் கொண்டு வரப்போகுதோ” என்று வருத்தத்துடன் சொன்னார் காஜா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்