ஏழு உட்பிரிவினரையும் ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்தமாகத் தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டிய முடிவினை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூலை 7) வெளியிட்ட அறிக்கை:
"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பண்ணாடி, காலாடி, வாதிரியார், இடும்பன், பள்ளன், தேவேந்திர குலத்தான் மற்றும் கடையன் ஆகிய ஏழு பிரிவுகளாக அழைக்கப்படுகின்ற மக்கள், தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் நீண்ட நெடுங்காலமாக எழுப்பி வருகிறது.
அந்த சமுதாயத்தோடு காங்கிரஸ் கட்சியின் உறவு என்பது பின்னிப் பிணைந்த ஒன்றாகும். இன்று மட்டுமல்ல, நீண்ட நெடுங்காலமாகவே அவர்களது உரிமைகளுக்காக பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி விளங்கி வருகிறது.
» தமிழகத்திலேயே முதன்முறையாக பெருங்கற்கால உருளை வடிவ ஈமச்சின்ன கல் காளையார்கோவிலில் கண்டுபிடிப்பு
» கரோனா தொற்று தொடர்பான அரசின் அறிக்கையில் உண்மைத்தன்மை இல்லை; பொன்முடி குற்றச்சாட்டு
2010 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் இதற்கான கோரிக்கையை முன்வைத்து உடனடியாக தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த கோரிக்கையை ஏற்ற அன்றய தமிழக முதல்வர் கருணாநிதி, உடனடியாக நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைத்து, இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டார். நீதிபதி ஜனார்த்தனன் உடனடியாக தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினைச் சேர்ந்த பலதரப்பு அமைப்புகளைச் சந்தித்து, கலந்துபேசி, ஆதாரங்களை திரட்டி, ஆய்வு செய்து 'கோரிக்கை நியாயமானது, அதனை அரசு ஏற்றுக்கொள்ளலாம்' என்று பரிந்துரை செய்து அறிக்கை சமர்ப்பித்தார் .
ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதற்கான அரசாணையை தமிழக அரசால் பிறப்பிக்க முடியவில்லை. இந்நிலையில், 2011 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற முடியாமல் போனதால், ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது.
ஆனால், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை வைத்து அரசியல் செய்கிற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தங்களது சமுதாய கோரிக்கையை ஜெயலலிதா ஒப்புக்கொண்டதாகக் கூறி, அதிமுக கூட்டணியில் சேர்ந்துகொண்டார். அதை உறுதிப்படுத்துகிற வகையில் 2011 மதுரை, அம்பாசமுத்திரம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த 7 பிரிவுகளையும் ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் சமூகம் என அறிவிப்பேன்' என்று பகிரங்கமாக ஜெயலலிதா உறுதிமொழி அளித்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் முதல்வராகப் பணியாற்றிய ஆறாண்டு காலத்தில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டார். இதையொட்டி அதிமுக மீது தேவேந்திர குல சமுதாயத்தினரிடையே கடும் எதிர்ப்பு உருவானது.
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றப் போவதாகக் கூறி 2012 இல் மதுரையில் பாஜக மாநாடு நடத்தி தீர்மானம் நிறைவேற்றியது. 2015 ஆகஸ்ட் மாதம் அமித் ஷா தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. 2015 செப்டம்பரில் தேவேந்திர குல வேளாளர் பிரதிநிதிகளை புதுடெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவதற்கு ஏற்பாடு செய்தது.
ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்கிற பாஜக தேவேந்திர குல வேளாளரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அரசியல் ஆதாயம் தேடுகிற போக்கிலேயே செயல்பட்டு வருகிறது.
தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அந்தச் சமுதாய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டு கபட நாடகத்தைத் தொடங்கியிருக்கிறார். இதை அந்தச் சமுதாய மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அதேபோல நீதிபதி ஜனார்த்தனன் பரிந்துரையைக் கிடப்பில் போட்ட அதிமுக அரசு காலம் தாழ்த்துகிற நோக்கத்தோடு, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழுவை அமைத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையை ஆறாண்டுகளாக நிறைவேற்றாத அதிமுக அரசு இக்குழுவை அமைத்து காலம் தாழ்த்தி கிடப்பில் போடுகிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஏற்கெனவே நீதிபதி பரிந்துரையைப் புறக்கணித்த அதிமுக அரசு புதிதாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இன்னொரு குழு அமைக்க வேண்டிய அவசியம் என்ன?
இதன் மூலம் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் உணர்வுகளை அதிமுக அரசு தொடர்ந்து புண்படுத்தி, புறக்கணித்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சி எப்பொழுதுமே தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்பதற்குப் பல உதாரணங்களை கூறலாம்.
அந்த சமுதாய மக்களால் மிகவும் போற்றப்படுகின்ற சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு தபால் தலை வெளியிடவேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 2010 அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தபால் தலையினை வெளியிட்டு அந்த சமுதாய மக்களுக்கு தேசிய அளவில் பெருமை சேர்த்தது.
எனவே, காங்கிரஸ் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவினரையும் ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்தமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டிய முடிவினை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
அப்படி அறிவிக்கப்படவில்லையெனில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறபோது, எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன். மேலும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியைச் சார்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து பேசி இப்பிரச்சினையை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எழுப்புவார்கள்.
இப்பிரச்சினைக்கு பிரதமர் மோடி உறுதியான ஆதரவைத் தெரிவிக்கவில்லையெனில் நாடாளுமன்ற வளாகத்திலேயே மகாத்மா காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என மத்திய அரசை எச்சரிக்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago