கரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆகஸ்டு 15-ல் வந்தாக வேண்டும் என்று அவசரப்படுத்துவது ஆபத்தானது. போதிய அவகாசமும், சோதனைகளும் அதற்குத் தேவைப்படும் நிலையில் இப்படி அவசரப்படுத்துவது மக்களின் உயிரோடு விளையாடுவதாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:
“கரோனா தொற்று (கோவிட் 19) என்பது இந்திய நாட்டளவிலும் சரி, தமிழ்நாட்டு அளவிலும் சரி, 5 ஊரடங்குகளுக்குப் பின்னரும் குறைந்தபாடில்லை. பலி எண்ணிக்கை கூடுதலாகி வருகிறது
நாளும் அதிகரித்து வருகிற சோகப்படலமே நீடிக்கிறது. குணம் ஆகிறவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் ஆறுதலைத் தந்தாலும்கூட, பலியாகிறவர்களின் எண்ணிக்கை நாளும் கூடுதலாகி வருவது மிகப்பெரிய துன்பவியல் ஆகும்.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சத்து 57 ஆயிரத்து 993 பேர் பலியானவர்கள் - 5 லட்சத்து 34 ஆயிரத்து 723 பேர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் (5.7.2020 வரை) எண்ணிக்கை - 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் பலியானவர்கள் - 10,161 பேர்.
தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 பேர் பலி எண்ணிக்கை - 1,510 பேர் இதில் சென்னையில் மட்டும் 1054 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
தமிழக அரசின் விளக்கம்
‘‘பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கூடுதல் பற்றிக் கவலைப்படாதீர்கள்; பரிசோதனை மும்முரமாக - மேலும் பரவலாக நடைபெறுவதால், எண்ணிக்கைக் கூடுதல்’’ என்ற விளக்கம் தமிழக அரசு சார்பில் தரப்படுவது சற்று ஆறுதலாகத் தென்பட்டாலும்கூட, பலி எண்ணிக்கைக் கூடிக்கொண்டே வருவது ஏன் என்ற கேள்வி அந்த நிம்மதியைக் குலைத்து மக்களிடையே அச்சத்தையே உருவாக்குகிறது.
இன்றைய ‘‘சிகிச்சை’’ நடைமுறைகளாக. கரோனாவுக்கு இதுவரை தடுப்பூசியோ, மருந்தோ இல்லை. முகக்கவசம், அடிக்கடி கைகழுவுதல், தனி நபர் இடைவெளி (ஒரு மீட்டர் முதல் 3 மீட்டர் வரை), உடலின் நோய்த் தடுப்பாற்றலை வளர்த்து நோயைத் தடுப்பது, தனிமைப்படுத்திக் கொள்ளல், தேவையற்ற பேச்சுகளைக் குறைத்து வாழுதல் போன்ற நடைமுறைகளைத்தான் எங்கும் கடைப்பிடிக்கும் இன்றைய ‘‘சிகிச்சை’’ நடைமுறைகளாக செயலில் உள்ளன.
விரைவில் கரோனா தடுப்பூசி - மருந்துகளைக் கண்டுபிடித்துத் தருவோம் என்ற உலகின் பற்பல நாடுகளும் இம்முயற்சியில் ஈடுபட்டு வருவது நம்பிக்கையூட்டும் செய்தி என்கிறபோதும், அந்த நாட்டின் மருந்தியல் துறை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் அதற்குரிய கால அவகாசம் நிச்சயம் தேவை.
சுமார் 12 மாதங்கள், ஓராண்டுக்குமேல் ஆகும். அது பல ஆய்வுக் கட்டங்களைத் தாண்டவேண்டியிருக்கும் - இறுதியில் மக்கள் மத்தியில் வரும் என்பதைத் தெளிவுபடுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், நம் நாட்டில் கண்டுபிடிக்கப்படும் மருந்து ஆகஸ்ட் 15-ல் கிடைக்கும் என்ற ஒரு தகவல் குறித்து வெளியான சில செய்திகள் அதிர்ச்சி அடையச் செய்கின்றன. இதில் அவசரக் கோலம், அள்ளித் தெளித்த கதையாகக் கூடாது.
இது மக்களின் உயிர் காக்கும் மருந்துப் பிரச்சினை. இதற்கு எந்த அரசும் கால நிர்ணயம் செய்து அவசரம் காட்ட வற்புறுத்தக் கூடாது என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய விஞ்ஞானியாக உள்ள சவுமியா சாமிநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், சில ஆய்வு நிறுவனங்களுக்கு கரோனா தடுப்பூசி மருந்தினை வெகுவேகமாகக் கண்டுபிடித்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கூறியிருப்பதாகச் செய்திகள் வந்தன.
40 நாள்களில் தடுப்பூசி நடைமுறைக்கு வரவேண்டுமாம்
அதோடு, அதில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக வெளிவந்துள்ள மற்றொரு செய்தி, சென்னையில், ஒரு நிறுவனம் உள்பட, 12 ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு எழுதிய அதன் ‘கடிதத்தில்’, மருத்துவக் கவுன்சில் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் உடனடியாகப் பணிகளைத் தொடங்கவேண்டும் எனவும், தவறினால், அது கீழ்ப்படியாமையாகக் கருதப்படும் எனவும் மிரட்டியுள்ளதாகத் தெரிய வருகிறது.
அதாவது 40 நாள்களில் தடுப்பூசி நடைமுறைக்கு வரவேண்டும் என்பதாகக் கவுன்சில் கூறுகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் ,‘‘எந்த ஒரு தொற்றுத் தடுப்பூசிச் சோதனை யும் 6 மாதம் முதல் 9 மாதங்கள் வரை கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். காரணம், முதல் கட்டம், 2 ஆம் கட்டம், 3 ஆம் கட்டம் என்று தாண்ட வேண்டும், பல புள்ளி விவரங்களை ஆதாரங்களாகச் சேகரித்தாகவேண்டும்‘’ என்று கூறியுள்ளார்.
இதற்குப் பிறகு வேறு ஒருவகையான விளக் கத்தை மருத்துவக் கவுன்சில் கூறியிருக்கிறது.
மருத்துவமனைகளைக்கூட வேகமாக கட்டலாம், ஆனால், மருந்துகளை உரிய ஆய்வுகள், பரிசோதனைகள் நடத்தாமல், நோயாளிகளுக்குக் கொடுக்க வேகமாக முன் வர முடியுமா?
பல முன்னேறிய நாடுகள்கூட இதில் போதிய அவகாசம் எடுத்து ஆய்வுகளை நடத்தும்போது, நாம் அவசரம் காட்டுவது மக்களின் உயிருடன் விளையாடுவதுபோல் ஆகிவிடாதா?
மத்திய - மாநில அரசுகள் தங்களது உத்திகளையும், தடங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய தருணத்தில், இப்படி ஒரு கால நிர்ணயம், அதுவும் ஆகஸ்ட் 15-க்குள் என்பது செய்திகள் வருவது மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்காதா?
அரசியலில் - ‘வித்தைகள்’ காட்டலாம்; ஆனால், விஞ்ஞானத்தில் வித்தைகளுக்கு இடமே இல்லை. ஆய்வுகளுக்கு உரிய பரிசோதனைகள் முடிவுகளுக்கு மட்டுமே இடம் உண்டு என்பதால், பொறுத்திருக்க வேண்டிய காலம் பொறுத்துத்தான் தீரவேண்டும். இது அறிவியல் காட்டும் அசைக்க முடியாத அனுபவம் ஆகும்”.
இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago