பாடங்களைக் குறைப்பதாக கூறி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழக அரசு அறிமுகப்படுத்தும் புதிய பாடத்தொகுப்பு முறை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஆபத்து இருப்பதால் அதனை முழுவதுமாக மறுபரிசீலனை செய்திட வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூலை 6) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தில் பல ஆண்டுகளாக மேல்நிலை படிப்பில் பின்பற்றப்பட்டு வரும் பாடத்தொகுப்பு முறையின் (Group) வழியாக படித்தவர்கள் இன்றைக்கு உலகம் முழுக்க சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். கல்லூரியில் எதிர்பார்க்கிற படிப்பைப் படிப்பதற்கு மட்டுமின்றி, எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால், அதற்கு மாற்றாக வேறு படிப்புகளைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளோடு மேல்நிலைக்கல்வி முறை அமைந்திருந்ததும், தமிழ்நாட்டில் படித்தவர்கள் துறைகளைத் (Departments) தாண்டி ஜொலிப்பதற்கு காரணமாக இருந்தது. தற்போது இந்த பாடத்தொகுப்பு முறையை மொத்தமாக மாற்றப்போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
உதாரணத்திற்கு பழைய பாடத்தொகுப்பு முறையில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் 14 பிரிவுகளில் இடம்பெற்றிருந்ததை மாற்றி புதிய முறைப்படி 3 பிரிவுகளில் மட்டுமே இந்தப் பாடங்களை வைத்துள்ளார்கள். பழைய முறையில் 6 பிரிவுகளில் இருந்த கணிதப்பாடம் புதிய பாடத்தொகுப்பில் 2 பிரிவுகளில் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதன்மூலம் மேற்கண்ட பாடங்களில் இதுவரை லட்சக்கணக்கான மாணவர்கள் பெற்றுவந்த பரந்துபட்ட அறிவை இனி மிகக்குறைந்தவர்களே பெற முடியும். இதனால் போட்டித்தேர்வுகளை எழுதுவதிலும், தேசிய மற்றும் உலகளவில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும், உயர்கல்வி படிப்பதிலும் தமிழக மாணவர்கள் பெரும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுபோன்றே தொழிற்கல்வி மாணவர்களுக்கு கணினி பயன்பாடு பாடம் நீக்கமும், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்றுள்ள தொகுப்புகளில் சர்ச்சைக்குரிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற ஏழை மாணவர்கள் மட்டுமின்றி உயர்கல்வி படிக்க நினைக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
அதோடு, 'ஒரே பள்ளிக்கூட வளாகத்தில் பழைய பாடத்தொகுப்பு முறையும் இருக்கும்; புதிய பாடத்தொகுப்பு முறையிலும் கற்பித்தல் நடைபெறும்' என்ற தமிழக அரசின் அறிவிப்பே இந்த முடிவைச் செயல்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு உள்ள குழப்பத்தைக் காட்டுகிறது.
குறிப்பிட்ட இடைவெளியில், அந்தந்தக் காலச்சூழலுக்கு ஏற்ப பாடங்களையும், அவற்றை கற்பிக்கும் முறைகளையும் மாற்றியமைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்த மாற்றங்கள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே செய்யப்பட வேண்டும். தற்போது இருப்பதைவிட இன்னும் ஒரு படி மேலே அவர்களை வாழ்வில் உயர்த்துவதாக அத்தகைய மாற்றங்கள் அமைய வேண்டுமே தவிர, இருக்கிற வாய்ப்புகளையும் பறிப்பதாக அமைந்துவிடக்கூடாது.
எனவே, மேல்நிலைக்கல்வி பாடத்தொகுப்பு முறை மாற்றம் என்ற லட்சக்கணக்கான தமிழக மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான முடிவை தமிழக அரசு முற்றிலுமாக மறுபரிசீலனை செய்து, எல்லோரும் ஏற்கத்தக்க வகையில் சீரமைத்து அதன்பிறகே செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago