கோவை மாநகரக் காவல்துறையில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்துப் பிரிவு ஆகிய பிரதான பிரிவுகளும், சைபர் கிரைம், மாநகர குற்றப்பிரிவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சிறப்புப் பிரிவுகளும் உள்ளன. சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்களால் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து, வாகனத் தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள் வாகன ஓட்டுநரைத் தாக்கியது உள்ளிட்ட கடந்த சில வாரங்களாக காவல்துறையினர் சார்ந்த விவகாரங்கள் சர்ச்சையாகி வருகின்றன.
கோவை மாநகரப் போக்குவரத்துக் காவலர்களுக்கு கடந்த ஆண்டு உடையில் பொருத்தக்கூடிய கேமராக்கள் வழங்கப்பட்டன. சில வாரங்கள் இந்த கேமராக்களைப் பயன்படுத்திய காவலர்கள் பின்னர் அதைக் கைவிட்டனர். இந்நிலையில், தற்போதைய சூழலைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களாக, கோவை மாநகர போக்குவரத்துபு் பிரிவு காவல்துறையினர் உடையில் பொருத்தக்கூடிய கேமராக்களை வாகனத் தணிக்கையின்போது பொருத்திப் பயன்படுத்தி வருகின்றனர்.
முதல்கட்டமாக 69 கேமராக்கள் வழங்கப்பட்டு, போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, 2-வது கட்டமாக கோவை மாநகர சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கும் 50 கேமராக்கள் வழங்கப்பட்டு, கண்காணிப்புப் பணியின்போது அவர்கள் இன்று (ஜூலை 5) முதல் பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மாநகரக் காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, "மாநகரக் காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின் பேரில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு காவலர்கள் உடையில் பொருத்தக்கூடிய கேமராக்களைப் பொருத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பு போக்குவரத்துக் காவலர்கள் மட்டும் பயன்படுத்தினாலும், தற்போது சட்டம் ஒழுங்கு காவலர்களும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த கேமரா 4 மணி நேரம் காட்சிகளைச் சேமிக்கும் திறன் கொண்டது. மேலும், காவலர்கள், பொதுமக்கள் இடையே ஏற்படும் தேவையற்ற சர்ச்சைகள், வாக்குவாதங்களைத் தவிர்க்க இந்த கேமரா பயன்படும்" என்றனர்.
கண்காணிப்பு மேடை
மாநகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியைத் தடையின்றி மேற்கொள்ள, தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் பிரத்யேகமாக கண்காணிப்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து சுமார் 10 முதல் 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த மேடையின் மீது அமர்ந்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், முழு ஊரடங்கை முன்னிட்டு மாநகரக் காவல் ஆணையர் சுமித்சரண் தலைமையில், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என 1,200 பேர் இன்று கோவை மாநகரில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகரில் நிரந்தரமாக உள்ள 12 சோதனைச்சாவடிகள், 13 தற்காலிக சோதனைச் சாவடிகள், 22 தடுப்புப் பகுதிகள் ஆகியவற்றை அமைத்து மாநகரில் காவல்துறையினர் இன்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago