மருத்துவர்களுக்கான ஓய்வூதியத்தைக் குறைப்பது அநீதி; வயதான மருத்துவர்கள் மன உளைச்சலின்றி நிம்மதியாக வாழ்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

மருத்துவர்களுக்கான ஓய்வூதியத்தைக் குறைப்பது அநீதி எனவும், அந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 5) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், தலைமை மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தைக் குறைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியத்தை அரசே குறைக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதால், காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்க கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணையை 23.10.2009 இல் வெளியிட்டது. அதன்படி, அரசுப் பணியில் சேர்ந்த மருத்துவர்களுக்கு முறையே 8, 15, 17, 20 ஆவது ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசாணை வெளியிடப்பட்ட 23.10.2009 ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், தலைமை மருத்துவ அதிகாரிகள் தங்களுக்கும் அதே போன்று பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்; அதன் அடிப்படையில் ஓய்வூதியம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சட்டப் போராட்டம் நடத்தினர்.

அவ்வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அவர்களுக்கு பின்தேதியிட்டு பதவி உயர்வு வழங்க சுகாதரத்துறை ஆணையிட்டது. அதனடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கி தமிழக நிதித்துறை கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஆணையிட்டது.

அதன்படி, 2009-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசின் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு தீர்மானித்துள்ளது. அவ்வாறு அரசாணை திருத்தப்படும் போது, 2009-ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கணிசமாகக் குறையும். அது மருத்துவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்துத் துறைகளும் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், தமிழக அரசின் வருமானம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது? அரசின் நிதி நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது? என்பதை அறிவேன்.

அதை ஈடு கட்டுவதற்காக பத்தாண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களின் ஓய்வூதியத்தைக் குறைக்கப் போவதாகக் கூறுவது, கடலுக்கு அணை கட்டுவதற்காக கைப்பிடி மணலை தேடி சேகரித்து எடுத்துச் செல்வதற்கு ஒப்பானதாகும்.

ஓய்வூதியக் குறைப்புத் திட்டத்தின் மூலம் ரூ.300 கோடியை மிச்சப்படுத்தலாம் என்று அரசு நினைக்கிறது. ஆனால், அரசின் கணக்கு தவறாகும். 2018-ம் ஆண்டில் ஓய்வூதிய அதிகரிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, அதனால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 1,640 பேர் மட்டுமே. அவர்கள் அனைவரும் 70 வயதைக் கடந்தவர்கள் எனும் நிலையில், மாதத்திற்கு மாதம் அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இத்தகைய சூழலில், அவர்களின் ஓய்வூதியத்தைக் குறைப்பதால் மாதத்திற்கு ரூ.2 கோடி கூட கிடைக்காது. அதை வைத்துக் கொண்டு அரசின் நிதி நெருக்கடியை எவ்வாறு சமாளிக்க முடியும்?

அரசு மருத்துவர்கள் அவர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்காக 2009-ம் ஆண்டில் தொடங்கி 2017-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தினர். அவர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தலாம் என்று உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

ஆனால், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீ திமன்றம், மருத்துவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கண்டிப்புடன் ஆணையிட்ட பிறகு தான் 2018-ல் ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட்டது. அதுகுறித்த அரசாணையை அப்போது பிறப்பித்தது அப்போதைய நிதித்துறை செயலர் சண்முகம் தான்.

இப்போது அந்த அரசாணையை ரத்து செய்யப்போவதாக தீர்மானித்திருப்பது தலைமைச் செயலாளர் சண்முகம் தான். எந்த காரணமுமே இல்லாமல் நிதித்துறை செயலராக பிறப்பித்த அரசாணையை தலைமைச் செயலாளராக அவரே ரத்து செய்வது எந்த வகையில் நியாயம்?

நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக ஓய்வூதியக் குறைப்பாக இருந்தாலும், ஊதியக் குறைப்பாக இருந்தாலும் அது அனைத்து துறை பணியாளர்களுக்கும் ஒன்றாகத் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு தரப்பினருக்கு மட்டும் ஓய்வூதியக் குறைப்பு செய்வது பாகுபாடானது ஆகும். அரசு அதன் பணியாளர்களிடம் பாகுபாடு காட்டுவது ஏற்கவே முடியாததாகும்.

மருத்துவர்களின் பணி கடவுளுக்கு இணையானது என்பதை கரோனா நோயை ஒழிக்க அவர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுவதிலிருந்தே அறிந்திருப்போம். ஒவ்வொரு காலத்திலும் பணியாற்றிய மருத்துவர்கள் அவர்கள் காலத்தில் ஏற்பட்ட பெருந்தொற்று நோய்களுக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து போராடியிருப்பர். அவர்களின் சேவைகளை போற்ற வேண்டிய அரசு, அவர்களின் ஓய்வூதியத்தைக் குறைப்பது அழகல்ல.

இவை அனைத்துக்கும் மேலாக ஓய்வூதியம் என்பது சலுகையல்ல... உரிமை. எனவே, மருத்துவர்களின் ஓய்வூதியத்தைக் குறைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். 70, 80 வயதைக் கடந்த மருத்துவர்கள் மன உளைச்சலின்றி நிம்மதியாக வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்