மதுரையில் வரும் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 4) வெளியிட்ட அறிக்கை:
"தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.
இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடந்த ஜூன் 24 முதல் நாளை (ஜூலை 5) நள்ளிரவு 12.00 மணி வரை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த முழு ஊரடங்கின்போது கரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், கரோனா நோய்த்தொற்றினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இந்த முழு ஊரடங்கினை மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் மேலும் 7 நாட்களுக்கு, அதாவது 6.7.2020 அதிகாலை 0.00 மணி முதல் ஜூலை 12 நள்ளிரவு 12.00 மணி வரை பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன்கீழ் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில், எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமிநாசினி ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்.
அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்திக் கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும், தனிமனித இடைவெளியை தவறாமல் கடைபிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago