சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடியும் வரை முதல்வர் கையில் உள்துறை அமைச்சகம் இருக்கக்கூடாது என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாத்தான் குளத்தில் கூடுதல் நேரத்தில் கடையைத் திறந்து வைத்ததாக எழுந்த பிரச்சினையில் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பென்னிக்ஸும், ஜெயராஜும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்தது.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் முதல்வரிடம் உள்துறை அமைச்சகம் இருக்கக்கூடாது எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு முடியும் வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் உள்துறை இருக்கக் கூடாது. இந்த வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், “வழக்குத் தொடர்பான எந்த ஒரு விசாரணையும் நடக்கும் முன்னரே, தந்தை-மகன் உடல்நலக் கோளாறு காரணமாகத்தான் உயிரிழந்தார்கள் என முன்னுக்குப் பின் முரணாக, பொய்யான தகவலை முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தற்போது விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை அமைப்பான சிபிசிஐடி, முதல்வர் கையில் உள்ள உள்துறையின்கீழ் வருகின்றது. எனவே, அந்த இலாகாவை முதல்வர் பழனிசாமி வைத்திருந்தால் இந்த இரட்டைக் கொலை வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது.
எனவே, இந்த வழக்கு முடியும் வரை உள்துறை இலாகா பொறுப்பை முதல்வர் பழனிசாமி வைத்திருக்கக்கூடாது. மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணை திசை மாறாமல் இருக்க, உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும்.
எனவே, இது தொடர்பாகத் தகுந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்“ என ராஜராஜன் கோரியிருந்தார்.
இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரம், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செயப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்கப் பட்டியலிடக் கோரி மீண்டும் இன்று மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது மனுவை விரைந்து விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் வழக்கறிஞர் ராஜராஜன் இன்று மனு (urgency petition) அளித்துள்ளார்.
அந்த மனுவில், “இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நியாயம் கிடைக்கும் பொருட்டும் இந்த வழக்கை அவசரமாகக் கருதி உடனடியாக விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago