கிரீமிலேயரைத் தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்படும் சம்பளம்: சமூக அநீதிக்கு ஓபிசி ஆணையம் துணைபோகக் கூடாது; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கிரீமிலேயரைத் தீர்மானிக்கக் கணக்கில் கொள்ளும் மத்திய அரசின் முடிவுக்கு ஓபிசி ஆணையம் துணைபோகக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 4) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு 'கிரீமிலேயர்' வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதைக் கடுமையாக எதிர்த்து வந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இப்போது எதிர்ப்பைக் கைவிட்டு, ஆதரிக்க முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆணையத்தின் இந்தச் செயல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகமாகும்.

தேசிய அளவில் ஓபிசி வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு, ஆண்டு வருவாய் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. அதற்கும் கூடுதலான வருவாய் ஈட்டும் குடும்பங்கள் 'கிரீமிலேயர்கள்' என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. 'கிரீமிலேயர்' வரம்பைக் கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று 1993 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அலுவலகக் குறிப்பாணையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், இப்போது சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கிரீமிலேயரைத் தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த சமூக நீதிக்கு எதிரான செயலுக்கு பாமகதான் முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு குறிப்புரை ஒன்றை அனுப்பியது. அதன் மூலம் மத்திய அரசின் திட்டம் முறியடிக்கப்படும் என்று ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களும் நம்பிக் கொண்டிருந்த நிலையில், தனது நிலையிலிருந்து திடீரென பின்வாங்கியிருக்கிறது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

அண்மையில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கூட்டத்தில், 'கிரீமிலேயரைக்' கணக்கிட சம்பளமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கான எதிர்ப்பைத் திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பவும் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதன் எதிர்ப்பைத் திரும்பப் பெற்றால், 'கிரீமிலேயரை' தீர்மானிக்க, பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானங்களுடன், சம்பளமும் கணக்கில் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் முடிவு அரசாணையாக வெளியிடப்பட்டுவிடும். அவ்வாறு வெளியிடப்பட்டால் மாத வருமானம் ரூ.67 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ள குடும்பங்கள் 'கிரீமிலேயராக' கருதப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும்.

ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும் கடைநிலை அரசுப் பணியில் இருந்தால் கூட, அவர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது. ஒருவேளை 'கிரீமிலேயர்' வரம்பு ஆண்டு வருமானம் ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டால் கூட எந்தப் பயனும் இருக்காது. இப்படிச் செய்வதை விட, ஓபிசி வகுப்பினருக்கு மிக மோசமான சமூக அநீதியை இழைக்க முடியாது.

'கிரீமிலேயர்' வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டமே, சமூக நீதியின் அடிப்படை தெரியாத ஒரு வல்லுநர் குழுவின் அபத்தமான பரிந்துரையின் அடிப்படையிலானது ஆகும். அந்தப் பரிந்துரையை மத்திய அரசே நிராகரித்திருக்க வேண்டும். அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்ட நிலையில், அதற்குத் தொடக்க நிலையில் எதிர்ப்பு தெரிவித்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதன் நிலையில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதன் மூலம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமே சிதைக்கப்பட்டு விட்டது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணியே அரசியலமைப்பு சட்டத்தின்படியும், பிற சட்டங்கள் மற்றும் அரசாணைகளின்படியும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள், உரிமைகள் பறிக்கப்படும் போது அவை குறித்த குறைகளை விசாரிப்பது தான் என்று அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 338 (ஆ) இல் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அது குறித்த எந்த விசாரணையையும் நடத்தாமல் மத்திய அரசின் நிலையை ஏற்க ஆணையம் தீர்மானித்திருப்பது தவறானதும், கடமை தவறியதும் ஆகும். அதுமட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ’கிரீமிலேயர்’ விஷயத்தில் எடுத்துள்ள நிலைப்பாடு, ஓபிசி வகுப்பினரின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் முயற்சிக்குத் துணைபோவதாக உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்பது அதன் அதிகார வரம்புக்குள் வரும் மக்களின் நலன்களை பாதுகாக்கும் காவலனாக இருக்க வேண்டும். மாறாக, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கும் அமைப்புகளுக்கு ஊதுகுழலாக செயல்படக்கூடாது.

2011-ம் ஆண்டில் ஜாட் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்ப்பது குறித்து மன்மோகன்சிங் அரசு யோசனை கேட்டபோது, 'ஜாட் சமூகத்தினர் சமூகரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்ல. அவர்களை அப்பிரிவில் சேர்த்தால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் பாதிக்கப்படும்' என்று கூறி, மத்திய அரசின் யோசனையை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்த்தது.

ஆனாலும், அதன் எதிர்ப்பை நிராகரித்து விட்டு, ஜாட் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்த்து 04.03.2014 இல் மத்திய அரசு அரசிதழ் அறிவிக்கை வெளியிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நிலைப்பாட்டை ஏற்று, ஜாட் சமூகம் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டது செல்லாது என்று 17.03.2015 இல் தீர்ப்பளித்தது.

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு அதுதான் உதாரணமாகும். அப்போது சட்டப்பூர்வ அமைப்பாக மட்டுமே இருந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய அரசின் தவறான நிலைப்பாட்டை அவ்வளவு கடுமையாக எதிர்த்த நிலையில், இப்போது அரசியல் சட்ட அமைப்பாக இன்னும் வலிமையானதாக மாறியுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 'கிரீமிலேயர்' விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை இன்னும் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், ஆணையம் கடமை தவறிவிட்டது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைக் காப்பதுதான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணியாகும். இதை உணர்ந்து 'கிரீமிலேயர்' வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதன் மூலம் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்