பொதுமக்களிடம் மென்மையாகவும், குற்றவாளிகளிடம் கடுமையாகவும் போலீஸார் நடந்து கொள்ள வேண்டும் என்று ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் விவகாரத்தை தொடர்ந்து போலீஸாரின் அணுகுமுறை குறித்து பொதுவெளியில் பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து முன்னாள் காவல் துறை அதிகாரிகள் நம்மிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி கருணாநிதி கூறியதாவது:
பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொண்டால்தான் அவர்கள் நம்மை மதிப்பார்கள் என்று ஒருசில போலீஸார் நினைக்கின்றனர். இவ்வாறு நடந்து கொள்ளும் போலீஸாரை சிலர் உயர்வாகப் பேசும்போது, அவர்களுக்கு அது ஊக்கமளிப்பதாக மாறிவிடுகிறது. அதிகாரிகளும் இதைகண்டுகொள்ளாமல் விடவே, இதுபோன்ற தவறுகளை போலீஸார் தொடர்ந்து செய்கின்றனர்.
சிலரால் கெட்டபெயர்
பொதுமக்களிடம் அன்பாகவும் குற்றவாளியிடம் கடுமையாகவும் நடந்துகொள்ள வேண்டும். இந்த பாகுபாடு தெரிந்தவர்கள்தான் நல்ல போலீஸார். இதுதெரியாமல் அனைவரிடமும் கடுமையாக நடந்து கொண்டால் அது காவல் துறைக்கு அழகல்ல. சாத்தான்குளம் விவகாரத்தில் தவறான நோக்கத்தில் பதவியை பயன்படுத்தி இருப்பதாகவே தகவல்கள் வருகின்றன.
போலீஸார் கோபமாக பேசும்போது எல்லா பொதுமக்களும் அமைதியாக செல்ல மாட்டார்கள். சிலர் எதிர்த்து பேசுவார்கள். அப்படி பேசினால் போலீஸாருக்கு மேலும் கோபம் வரும். இங்கேதான் பிரச்சினை தொடங்குகிறது. குடும்பத்துடன் வாகனத்தில் செல்லும்போது மனைவியின் முன்பாக வைத்துகணவனை போலீஸார் திட்டுவார்கள். இது கணவன்மார்களுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும்.
இதுபோன்ற போலீஸாரால் மட்டுமே காவல் துறைக்கு கெட்டப்பெயர் ஏற்படுகிறது. இதையெல்லாம் புரிந்து, பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொள்பவர்கள்தான் நல்ல போலீஸ்காரர்கள்.
காவல் துறையில் மட்டும் ஒருவிதிவிலக்கு அதிகாரம் உள்ளது. அவர்களாக பார்த்து ஏழை, பாவம், பிழைப்புக்காக செய்கிறான் என புரிந்து கொண்டு, அவர்களை மன்னித்து விடமுடியும். இதுபோன்று விடுவதால் உயர் அதிகாரிகள் யாரும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. களத்தில் பணிபுரியும் போலீஸாரே இதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இதுபோன்று பிரித்து அறியும் தன்மை மற்றும் பொதுமக்களின் சிரமங்களை புரிந்து கொள்ளும் தன்மை போலீஸாருக்கு வேண்டும். பொதுமக்களுடன் இணைந்து போலீஸார் செயல்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.
அடிப்படையில் மனிதர்கள்
இதேபோல், ஓய்வுபெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலியமூர்த்தி கூறியதாவது:
காவல் துறையினர் அனைவரும் தங்களை காக்கி உடை அணிந்த பொதுமக்கள் என்றும் பொதுமக்கள் அனைவரும் காக்கிசட்டை அணியாத காவலர்கள் என்றும் தங்களை நினைக்க வேண்டும். ஒவ்வொரு போலீஸ்காரரும் தாங்கள் பணிபுரியும் இடங்களில், மனுகொடுக்க அல்லது ஒரு பிரச்சினையை கூற வருபவர்களிடம், தங்களது குடும்பத்தில் ஒருவர் காவல் நிலையத்துக்குச் சென்றால், அங்கிருக்கும் போலீஸார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதேபோல அனைவரிடமும் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு நடந்தால் பொதுமக்கள்-போலீஸார் இடையே பிரச்சினை ஏற்படாது.
போலீஸார் காக்கி சட்டை அணிந்தாலும் அடிப்படையில் மனிதர்கள் என்பதை உணர வேண்டும். குற்றவாளிகளிடம் போலீஸார் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். திருடனை அழைத்துவந்து காபி வாங்கி கொடுத்து, திருடினாயா என்றுகேட்டால், கண்டிப்பாக உண்மையைக் கூற மாட்டார். குற்றவாளிகளிடம் கடுமையாகவும் பொதுமக்களிடம் மென்மையாகவும் போலீஸார் நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் சில காவல் துறையினர் பொதுமக்களிடம் கடுமையாகவும், குற்றவாளிகளிடம் மென்மையாகவும் நடக்கின்றனர். அதுதான் தற்போது காவல் துறைக்கு கெட்டப்பெயர் பெற்றுத்தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பணிநேர முறைப்படுத்தல்
இந்த விவகாரம் குறித்து மனநல ஆலோசகர் அசோகன் கூறும்போது, "போலீஸாருக்கான பணிநேரம், வார விடுமுறை, சம்பளம். உழைப்புக்கான அங்கீகாரம் போன்றவற்றை முறைப்படுத்தினால் காவல் துறையினர் சிறப்பாக செயல்படுவார்கள்" என்றார்.
சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவின் பேரில், மக்களை புரிந்து கொள்ளுதல், மக்களை காவல் பணியுடன் இணைத்துக் கொள்ளுதல் போன்றவை குறித்து தமிழகம் முழுவதும் போலீஸாருக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் இந்த வகுப்புகளை முன்னின்று நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago