புதுச்சேரியில் இன்று புதிதாக 24 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 93 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆகவும், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 824 ஆகவும் உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் ஊரடங்குத் தளர்வுக்குப் பிறகு கரோனா தொற்று பாதிப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 3) புதிதாக 24 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 824 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 427 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 93 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 384 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று கூறியதாவது:
"புதுவையில் நேற்று 633 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தற்போது புதுச்சேரியில் 23 பேர், காரைக்காலில் ஒருவர் என மொத்தம் 24 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 19 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 4 பேர் ஜிப்மரிலும், காரைக்காலில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11 பேர் ஆண்கள், 13 பேர் பெண்கள் ஆவர். இதில் 18 வயதுக்கு உட்பட்டோர் 3 பேரும், 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டோர் 21 பேரும் அடங்குவர். மேலும், புதுச்சேரி தர்மாபுரி பகுதியைச் சேர்ந்த 93 வயது மூதாட்டி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று (ஜூலை 2) இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 241 பேர், ஜிப்மரில் 121 பேர், கோவிட் கேர் சென்டரில் 22 பேர், காரைக்காலில் 29 பேர், ஏனாமில் 2 பேர், மாஹேவில் 8 பேர், பிற பகுதிகளில் 4 பேர் என மொத்தம் 427 பேர் சிசிக்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 7 பேர், ஜிப்மரில் 6 பேர், கோவிட் கேர் சென்டரில் 40 பேர் என மொத்தம் 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.
18 ஆயிரத்து 791 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 17 ஆயிரத்து 645 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 282 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன. மத்திய அரசு கொடுத்த தளர்வுகளின்படி புதுச்சேரியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்குத் தளர்வு அளிக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் அனைவரும் வெளியே வந்து விடுங்கள் என்று மத்திய அரசு கூறவில்லை. யாருக்கும் வேலை பாதிக்கக் கூடாது.
அனைவரும் முகக்கவசம் அணிந்துகொண்டு, கைகளைக் கழுவி விட்டு, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வேலை செய்யங்கள் என்று அறிவுரை கூறித்தான் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளைக் கட்டுப்படுத்தினாலும் கூட தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக வருகிறது. நேற்று 63 பேர், இன்று 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளைக்கு 40 பேர் முதல் 50 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அனைத்துப் பணிகளையும் சுகாதாரத்துறையே செய்ய முடியாது. தற்போது 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் அறிகுறியுள்ளவர்கள் பரிசோதனை செய்ய முன் வருவதில்லை. அறிகுறி உள்ளவர்கள் எத்தனை பேர் வந்தாலும் பரிசோதனை செய்யத் தயாராக உள்ளோம். தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரை இன்று மாலை அழைத்துப் பேச உள்ளோம்.
கடந்த 15 தினங்களுக்கு முன்பு என்ன முடிவு எடுக்கப்பட்டதோ, அதன்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட வேண்டும். 'பாசிட்டிவ்' வந்தவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று மறுத்தால் மத்திய அரசிடம் புகார் தெரிவிக்கப்படும். புதுச்சேரி அரசு ஊழியர்களில் சிலருக்கு மட்டும் 'பாசிட்டிவ்' வந்ததுள்ளது. மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை. 6 மாதங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago