ரயில்ளை தனியார் மயமாக்கும் திட்டம் ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை; கைவிட வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

ரயில்ளை தனியார்மயமாக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 3) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தனியார் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் அறிவித்திருக்கிறார். இது ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினரிடமிருந்து ரயில் சேவையைப் பறிக்கும் செயலாகும்.

டெல்லியிலிருந்து காணொலி மூலமாக நேற்று (ஜூலை 2) செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 ரயில்கள் தனியார் மயமாக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஜோத்பூர் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 14 ரயில்கள், புதுவையிலிருந்து சென்னை வழியாக செகந்திராபாத், கன்னியாகுமரியிலிருந்து எர்ணாகுளம், கோவையிலிருந்து திருநெல்வேலி செல்லும் ரயில்கள் உட்பட தமிழ்நாட்டுக்குள் இயங்கும் ரயில்கள், தமிழ்நாட்டைக் கடந்து செல்லும் ரயில்கள் என மொத்தம் 24 ரயில்கள் தனியார் மயமாக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில்கள் தனியார் மயமாக்கப்பட்டால் பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் கிடைக்கும்; செல்ல வேண்டிய இடத்தை மிகவும் குறைந்த நேரத்தில் சென்றடைந்து விடலாம் என்று மக்களை மயக்கும் வகையில் செய்திகள் பரப்பப்படுகின்றன.

அதேநேரத்தில், ரயில்களை தனியார்மயம் ஆக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. இப்போது வசூலிக்கப்படும் பயணிகள் கட்டணத்தில் சராசரியாக 47 விழுக்காடு மானியமாக வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் ரூ.42 ஆயிரம் கோடி இழப்பை, சரக்குப் போக்குவரத்தில் கிடைக்கும் லாபத்திலிருந்து ரயில்வே துறை ஓரளவு சமாளிக்கிறது.

தனியார் ரயில்கள் இயக்கப்படும்போது இந்த ரூ.42 ஆயிரம் கோடி இழப்பும் பயணிகள் தலையில் சுமத்தப்படும். இதற்காக ரயில் கட்டணம் 28% முதல் 244% வரை உயர்த்தப்படும். அதுமட்டுமின்றி, ரயில் கட்டணங்களை நிர்ணயிக்க தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படவிருப்பதால், அவை அளவுக்கு அதிகமாக கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளையடிக்கும். இந்த உயர்வை அடித்தட்டு மக்களால் தாங்க முடியாது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ரயில் சேவைகள் என்பது மிகப்பெரிய வரம் ஆகும். பேருந்துகளுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்கு ரயில் சேவைகள் மட்டும்தான் ஒரே வாய்ப்பாகும்.

ஒருபுறம் கிளை வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில் சேவைகளை நிறுத்துவதற்கும், முக்கிய வழித்தடங்களில் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் சாதாரண பயணியர் வண்டிகளை அதிக கட்டணம் வசூலிக்கப்படும் விரைவு ரயில்களாக மாற்றுவதற்கும் ஆணையிட்டுள்ள ரயில்வே வாரியம், இப்போது ரயில்களை தனியார் மயமாக்கினால், அதில் பயணம் செய்வது குறித்து ஏழைகள், நடுத்தர மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இது ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.

அதுமட்டுமின்றி, 151 ரயில்கள் தனியார் மயமாக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும். இவை எதுவுமே ரயில்வே துறையின் வளர்ச்சிக்கோ, மக்களின் முன்னேற்றத்திற்கோ வழிவகுக்காது. தனியார் நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பதற்கு மட்டும் தான் வழிவகுக்கும்.

ரயில்வே துறையை லாபத்தில் இயக்க தனியார் மயமாக்கல் மட்டுமே ஒரே வழியல்ல. அவற்றைக் கடந்து ஏராளமான வழிகள் உள்ளன. பாமகவைச் சேர்ந்தவர்கள் ரயில்வே துறை இணையமைச்சர்களாக இருந்தபோது ரயில்வே துறை லாபத்தில் இயங்கியது. அதற்கு முந்தைய 16 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு மொத்தம் ரூ.61 ஆயிரம் கோடி கடன் சுமை இருந்தது.

அதுமட்டுமின்றி, அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பல்லாயிரம் கோடி இருந்தது. அவை அனைத்தையும் செலுத்திய பிறகு 2009 ஆம் ஆண்டில் பாமக அமைச்சர் பதவி விலகியபோது இந்திய ரயில்வே துறையிடம் ரூ.89 ஆயிரம் கோடி உபரி நிதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவையும் கடந்து இந்திய வரலாற்றில் முதன்முறையாக ரயில் கட்டணங்கள் குறைக்கப்பட்டன; இன்று வரை அச்சாதனை முறியடிக்கப்படவில்லை.

எனவே, ரயில்வே துறையை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்கச் செய்து, அதை லாபத்தில் இயக்குவதற்கான ஆக்கபூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும். ரயில் சேவைகளை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசும், ரயில்வே வாரியமும் கைவிட வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்