பொதுமுடக்கக் காலத்தில் ரேஷன் அரிசி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அரிசிக் கடைகளில் விற்பனை கடுமையாகச் சரிந்திருக்கிறது. இதனால் அரிசி வியாபாரிகள் கவலை அடைந்திருக்கிறார்கள். வசதியான பின்புலம் கொண்டவர்கள் உட்படப் பெரும்பாலானோர், பொருளாதாரச் சூழல் மோசமடையலாம் எனும் முன்னெச்சரிக்கையுடன் ரேஷன் அரிசியை வாங்குவதும் இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
பொதுமுடக்கம் காரணமாக அத்தனை பேரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும், மூன்றில் ஒரு பகுதியினருக்கே வேலைவாய்ப்பு கிடைக்கிறது. நஷ்டம் காரணமாகப் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இப்படிப் பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தாலும், அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசியை அனைவரும் வாங்கித்தானே ஆக வேண்டும். எனவே, அரிசி விற்பனை அதிகரிக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.
ஆனால், பொதுமுடக்கம் தொடங்கி 100 நாட்கள் கடந்த நிலையில் நாளுக்கு நாள் அரிசி வியாபாரம் சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் அரிசி வியாபாரிகள். பொதுமுடக்கத்துக்கு முன்பு உயர் தரப் பொன்னி அரிசி 25 கிலோ கொண்ட சிப்பம் ரூ.1,350 முதல் ரூ.1,450 வரை விற்பனை ஆனது. இப்போது ரூ.1,550 முதல் ரூ.1,650 என அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு என்பது பொதுவாக சீஸனுக்கு சீஸன் மாறுபடுவதுதான். ஆனால், இந்தக் காலகட்டத்தில் விற்க வேண்டிய அரிசி மூட்டைகள் மூன்றில் ஒரு பங்குகூட விற்கவில்லை என்கிறார்கள் அரிசி வியாபாரிகள்.
உதாரணமாக, கோவை வைசியாள் வீதி குறுக்குத் தெருவில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் அரிசிக் கடைகள் இருக்கின்றன. பொதுவாக இங்கே கடைக்கு 200 சிப்பம் முதல் 500 சிப்பம் வரை பொன்னி அரிசியே விற்கும். அப்படிக் கணக்கிட்டால் இந்த அரிசிக் கடை மார்க்கெட்டில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரி மொத்தம் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சிப்பங்கள் விற்றுவிடும். ஆனால், தற்போது மூவாயிரம் சிப்பங்கள்கூட விற்பனையாவதில்லை என்கிறார்கள் அரிசி வியாபாரிகள்.
பொதுவாக அரிசி வியாபாரத்தைப் பொறுத்தவரை பெரிய அளவில் லாபம் கிடைக்காது. 75 கிலோ மூட்டைக்கு அரிசி தரகருக்கு ரூ.2 கமிஷன் கிடைக்கும். ஒரு சிப்பம் லாரியில் ஏற்றுவதற்குக் கூலி ரூ. 3.10-ம், இறக்குவதற்கு ரூ.3-ம் கூலியாகப் பெறுகிறார்கள் மூட்டை தூக்குவோர். அரிசி மண்டி வியாபாரிகளுக்கும் மூட்டை, சிப்பம் ஆகியவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் கமிஷன் கிடைக்கும். பொதுமுடக்கம் இருந்தபோது இயல்பான வியாபாரமே நடந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுக் கடை திறந்தபோது கண்டிப்பாகக் கூடுதல் வியாபாரம் இருக்கும் என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், 100 நாள் கடந்த நிலையில் அதிலும் பாதியாகவே விற்பனை ஆகிறது. இதனால் வியாபாரிகள், தரகர்கள், சுமைதூக்குவோர் என அத்தனை பேர் வருமானமும் அடிவாங்கியிருக்கிறது.
இப்படி அரிசிக் கடைகளில் விற்பனை சரிவதற்கு முக்கியக் காரணம் ரேஷன் அரிசி விற்பனை அதிகரிப்புதான் என்கிறார்கள் வியாபாரிகள். கூடவே, நிவாரண உதவியாக அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் வழங்குவதால் பலரும் அரிசிக் கடைகளுக்கு வருவதில்லை என்று சொல்லப்படுகிறது. பொதுமுடக்கம் நீட்டிக்கப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையில் வசதி படைத்தவர்களில் பலரும் முன்கூட்டியே பல மாதங்களுக்குத் தேவையான அரிசியை வாங்கி ஸ்டாக் வைத்துவிட்டதும் இப்போதைய மந்த நிலைக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
இது தொடர்பாக, கோவை வைசியாள் வீதியில் இயங்கிவரும் அரிசி மண்டி ஒன்றின் மேலாளரான ஜி.பாபு கூறுகையில் “எங்க கடையில முந்தியெல்லாம் சர்வ சாதாரணமா 200 சிப்பம் விற்பனை ஆகும். இப்ப 50 சிப்பம் நல்ல அரிசி போவதே கடினமா இருக்கு. இதனால் சில கடைகள் திறப்பதேயில்லை. ஒரு சில கடைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்கிறார்கள். இந்த நிலை இன்னமும் ஆறேழு மாசம் நீடிச்சுதுன்னா எங்க பாடு திண்டாட்டம்தான்.
நாளைக்கே பொதுமுடக்கம் ரத்து, கரோனாவுக்கு மருந்து வந்தாச்சுன்னு மக்களை வெளியே விட்டுட்டாங்கன்னாகூட அரிசிக் கடைகளில் விற்பனை நிலை பழைய நிலைக்கு வர மூணு மாசம் ஆயிடும். ஏன்னா இந்த வியாபாரத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்ட வட மாநிலத்துக்காரங்க எல்லாம் சொந்த ஊருக்குப் போய்ட்டாங்க. எப்படிப் பார்த்தாலும் அவங்க அங்கே தசரா கொண்டாடாமல் வரமாட்டாங்க. அதனால வர்ற தீபாவளி வியாபாரத்தைக்கூட நாங்க மறந்துட வேண்டியதுதான்” என்றார் கவலையுடன்.
சரி, ரேஷன் கடைகளில் எப்படி வாங்குகிறார்கள் மக்கள்? கோவை ரேஷன் கடை சிப்பந்திகளிடம் பேசினேன்.
“முந்தியெல்லாம் ரேஷன் அரிசி வாங்காம இருந்தவங்க எல்லாம், இப்போ அதிகமா வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. காரில் வர்றவங்ககூட ரேஷன் அரிசியக் கவலைப்படாம வாங்கிட்டுப் போறாங்க. ‘ஏன் அரிசிக் கடைகளில் வாங்கலையா?’ன்னு கேட்டா, ‘நாளைக்கு என்ன நிலைமையாகுமோ? வாங்கி இருப்பு வச்சுக்கிறது நல்லதில்லையா?’ன்னு சொல்றாங்க. அதனால ரேஷன் அரிசி மிஞ்சறதில்லை. முழுமையா விற்பனை ஆகிடுது” என்கிறார்கள் ரேஷன் கடை சிப்பந்திகள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago